புதுடில்லி :
பிபா நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும் பங்கேற்கிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, கால்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் கொலம்பியா, கானா மற்றும் அமெரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் நோர்டான் டி மடோஸ் பேசும்போது, ‘நான் இந்த (இந்திய) அணியுடன் 6 மாதங்களாக உள்ளேன். நிறைய உழைத்துள்ளேன். 25 போட்டிகள் வெளிநாடுகளில் விளையாடியுள்ளோம். இது எங்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. கால்பந்து விளையாட்டில் இந்தியா நீண்ட வரலாறை பெற்றிருக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 6 மாதங்களில் அணியை தயார் செய்வது என்பது சாத்தியம் இல்லை. இதைக் கூறுவதற்கு சங்கடமாக இருக்கிறது.
ஆனால், கள நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அணிகளைத்தான் நாம் உலகக் கோப்பை போட்டியில் சந்திக்கவுள்ளோம். போர்ச்சுக்கல், ஸ்பெயின், அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் சிறுவர்ள் 10 வயது முதல் கால்பந்துக்கு தயார் செய்யப்படுவார்கள். போட்டிகளல் பங்கேற்பார்கள். இந்த 6 மாதத்தில் நாம் 25 போட்டிகளில் விளையாடினாலும், எவ்வளவு புள்ளிகள் பெற்றுள்ளோம். பூஜ்ஜியம்தான். என் அணியின் வீரர்கள் நீண்டதொரு போட்டி அனுபவத்தைப் பெற்றிக்கவில்லை. பெனால்டி ஷாட்களை கோல்களாக மாற்றும் வாய்ப்பு என் வீரர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் என் அணியின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்’ என்றார்.