ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஓட்டல் அறைகளுக்கு புதிய வரி வீதம் நிர்ணயம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 02:51

புதுடில்லி:

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஓட்டல் அறைகள் உள்ளிட்டவற்றுக்கு புதிய வரிவீதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒருநாள் வாடகை ரூ.2,000 முதல் ரூ.7,500 வரை உள்ள ஓட்டல் அறைகளுக்கு 18 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்னர் ஒருநாள் வாடகை ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை உள்ள ஓட்டல் அறைகளுக்கு 12 சதவீத வரியும் ஒருநாள் வாடகை ரூ.2,500 முதல் ரூ.5000 வரை உள்ள ஓட்டல் அறைகளுக்கு 18 சதவீத வரியும்  நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ரூ 5000க்கு நாள வாடகை உள்ள ஓட்டலகளுக்கு 28 சதவீத வரியும்  நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

ரூ.7,500க்கும் அதிகமாக வாடகை உள்ள ஓட்டல் அறைகளுக்கு 28 சதவீத வரி இப்பொழுது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் விற்கும் லாட்டரி சீட்டுகளுக்கு 12 சதவீத வரியும், மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் லாட்டரிகளுக்கு 18 சதவீத வரியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இ-வே பில்களுக்கான விதிகளுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி லாபமீட்டுவதைத் தடுப்பதற்கான விதிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியை சிக்கலின்றி அமல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டிக்கான இணையதளம் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனினும், திட்டமிட்டபடி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரும். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 30ம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.