தொடங்கியது! சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி - கோமதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா!

பதிவு செய்த நாள்

30
அக்டோபர் 2015
02:34

சங்கரன்கோவில், அக் 29

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும்.

இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. பின்னர் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ரதவீதிகளில் கொடிபட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது கும்பபூஜை நடந்தது. தொடர்ந்து கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் காலை 9.35 மணிக்கு திருவிழாவிற்கான கொடியை மோகன்பட்டர் ஏற்றினார். பின்னர் கொடிமரத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்ப அபிஷேகமும் நடந்தது. கொடிமரத்திற்கு தர்ப்பைப்புல், பட்டுத்துணி சுற்றப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை பாடினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனையான சோடச தீபாராதனை நடந்தது. பின்னர் கோமதிஅம்பாள் சப்பரத்தில் எசூந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் சங்கரநாராயணசுவாமி கோயில் பேஷ்கார் வீரகுமார், கோமதிஅம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, அதிமுக நகர அவைத் தலைவர் கந்தவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.