பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 31

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2017அருகில் யாரோ நிற்பது புரிய, பரத் தலையைத் தூக்கினான்.

தம்பு... கையில் ஒரு கடிதம்...

"யாருன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறா... உங்ககிட்ட குடுக்கச்சொல்லி இதைக் குடுத்தா..."

ஏதாவது சிபாரிசுக் கேஸா?

பரத்துக்கு எரிச்சலாக இருந்தது.

இன்ன நேரத்தில் வந்து கழுத்தறுப்பது என்று கிடையாதா? மனுஷன் ஓய்ந்து வந்திருக்கும் இப்போதுகூடவா, பின்னாலேயே சிபாரிசு, அது இது என்று வரவேண்டும்?

"டேபிள்ள வெச்சுட்டுப் போ..."

தம்பு போனான்.

பேன் காற்றில் கவர் படபடத்தது.

எட்டியிருந்து பார்க்கும்போது, 'பரத்' என்று இவன் பெயரை மொட்டையாய் மேலே எழுதியிருப்பது தெரிந்தது.

பரத்-ஆ?

'மிஸ்டர் பரத்' என்று மரியாதையாய் எழுதக்கூடத் தெரியாதா?

எரிச்சலுடன் கவரை உற்றுநோக்கிய போது, இந்தக் கையெழுத்தை இதற்கு முன் பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது.

கீழே சுழித்த 'பி'... மேலே கொக்கியாய் வளைந்த 'ஹெச்'... கடைசி எழுத்தை லாவகமாய் வளைத்துப் பெயருக்கடியில் செல்லும் கோடு...

யார் கையெழுத்து இது?

புருவங்கள் முடிச்சுமுடிச்சாக சுருங்க, பரத் கையை நீட்டி கவரை எடுத்தான்.

ஓரத்தைக் கிழித்துத் தாள்களை வெளியில் எடுப்பதற்குள், எழுதினது யார் என்ற ஊகம் அழுத்தமாக, வயிற்றில் இரைச்சல் கேட்க ஆரம்பித்தது.

'பரத்' - என்று கடிதம் துவங்கியது...

மோஹனாவா? கடிதம் எழுதியிருக்கிறாளா? ஏன்?

'என்னடா... கல்கத்தா, டெல்லினு உக்காந்துண்டிருந்தவ, இப்ப திடும்னு லோகலா ஒரு லெட்டரை எழுதியிருக்காளேன்னு யோசிக்கறேளா? லோகல்ல இருக்கறவா, லோகலா கடுதாசு எழுதறதுல என்ன ஆச்சர்யம், பரத்!

பதினாலு வருஷமா நா மெட்ராஸை விட்டு எங்கயும் போகாம, உங்க அடி நிலத்துலயேதான் வாழ்ந்துண்டி ருக்கேன்ங்கற நிஜத்தைச் சொன்னா, அதை நம்பறது உங்களுக்குக் கஷ்டமா இருக்குமா?

அந்தப் புது வருஷ நாளை உங்களால மறக்க முடியாது, இல்லை? ஸ்வாதீனம் இல்லாமதான் நீங்க பேசினேள்னாலும், மீளவேமுடியாத தினுசுல நா அன்னிக்கு அடிபட்டுப் போயிட்டதால, குழந்தையோட கிளம்பறதா முடிவு பண்ணிட்டேன்.

இந்த மனுஷனை விட்டு கண்காணாமப் போயிடணும்... இவரோட குழந்தையை வெச்சே இவருக்குப் பெரிசா பாடம் கத்துத்தரணும்னு ஒரு வெறி!

முடிவு பண்ணிட்டாலும், அடிமனசுல ஏக பயம்...

எங்க போவேன்?

யார் இருக்கா எனக்கு?

ஸந்த்யாவையும் தூக்கிண்டு எங்க போய் மறைஞ்சுக்கறது?

டெல்லி சினேகிதிகள்தான் முதல்ல கண்முன்னால நின்னா...

கிரி மூலமா நிச்சயம் அவா விலாசத்தை நீங்க கண்டுபிடிச்சுடுவேள்... அப்பறம் உங்ககிட்டயிருந்து தப்பிக்கறது சாத்தியமா?

ம்ஹூம், இல்லை.

எங்க போனாலும் பணம் இல்லாம ஒண்ணும் நடக்காதுன்னு தெரியும்.

அன்னிக்கு ஜனவரி முதல் தேதி, பாங்க் விடுமுறை.

வீட்டுல உங்க அலமாரி, என் அலமாரியைக் குடைஞ்சப்போ, ரெண்டாயிரம்கூடத் தேறலை. தனியா பல வருஷங்கள் வாழ இதெப்படிப் போதும்?

ஏதோவொரு உந்துதல்ல ஆனந்த்கிட்ட போனேன். என்ன சொல்லி பணம் வாங்கினேன், எவ்வளவு வாங்கினேன்ங்கற விவரமெல்லாம் உங்களுக்குத் தெரியும், இல்லியா பரத்?

மேற்கொண்டு என்ன பண்றதுன்னு தவிச்சப்போதான், செயிண்ட் மேரீஸ் கான்வென்ட் நினைப்பு வந்தது.

ஆதம்பாக்கத்துல, ஊருக்கு வெளில இருக்கற அந்தப் புகழ்பெற்ற கான்வென்டுக்குப் போனா என்ன?

போயி...? யோசிச்சேன்.

மனசுல ஒரு திட்டம் உருவாச்சு. ஒரு சின்னப் பை, ஸந்த்யாவுக்கு ரெண்டு செட் ட்ரெஸ், எனக்கு ஒரு மாத்துப்புடவை... அம்மாவுக்கு சந்தேகம் வராதபடி கிளம்பிட்டேன்.

கபாலீஸ்வரர் கோவில்ல ஒவ்வொரு சன்னதியா நின்னு மனசார வேண்டிண்டேன். நா ஊருக்குப் போயிட்டதா நீங்க நம்பணும்னு, ஸ்டேஷன்ல எறங்கிண்டு காரை அனுப்பிச்சுட்டு, டாக்ஸில ஆதம்பாக்கத்துக்குப் போனேன்.

மதர் சுப்பீரியரைப் பாத்தேன்.

நீளமாய் பொய் சொன்னேன். "நா டெல்லியைச் சேர்ந்தவ... சொந்தக்காரான்னு யாரும் கிடையாது. இருந்த ஒரு அக்காவும் சில மாசத்துக்கு முன்னால விபத்துல இறந்துட்டா... இப்ப யாருடைய ஆதரவும் இல்லாம, நானும் அக்கா குழந்தையும் தவிக்கறது போறாதுன்னு, பெரிசா இன்னொரு சோதனையும் சேர்ந்துண்டிருக்கு... கண்டவனெல்லாம் என்கிட்ட வா, என்கிட்ட வானு என்னைக் கூப்பிடறான்... இந்த அசிங்கமான வாழ்க்கைலேந்து தப்பி, நிம்மதியா இருக்கணும்னா, எனக்கு உங்க கான்வென்டுல சேர்றதைத் தவிர வேற வழி தெரியலை..."னு சொல்லி அழுதேன்.

மதர் சுப்பீரியர் லேசுல அசைஞ்சுகுடுக்கலை.

"டெல்லில எங்க இருந்தே? என்ன பண்ணிண்டிருந்தே? ரெபரென்ஸ் இல்லாம உன்னை சேர்த்துக்க முடியாது! விரக்தியடைஞ்சு கான்வென்ட்ல சேரக்கூடாது... முழு மனசோட கர்த்தர் மேல அன்பு வைக்கணும்! டெல்லில இருந்தவ, இங்க ஏன் வந்தே? குறிப்பா எங்க கான்வென்டுக்கு ஏன் வந்தே?"னு இன்னும் என்னென்னவோ கேட்டார். என்னவோ சொல்லி எப்படியோ சமாளிச்சேன்... அந்தக் கதையெல்லாம் இங்க எதுக்கு, பரத்?

கடைசியா, "உங்க கான்வென்ட்பத்தி சமீபத்துல பத்திரிகையில ஒரு கட்டுரை படிச்சேன்... நமக்கு ஏத்த இடம் இதுன்னு அப்பத்தான் தோணித்து... கண்காணாத புது எடத்துல, புது வாழ்க்கை துவங்கறது மனசுக்குப் பிடிச்சிருந்தது... வந்துட்டேன்!"னு சொன்னேன்.

எனக்கு வேற போக்கிடம் இல்லேன்னு சொல்லி நா அழுதது, அவர் மனசை நெகிழ்த்தியிருக்கணும்.

"ஆல்ரைட்... மேலிடத்துல பேசி, சில மாசங்கள் உன்னை எங்ககூட வெச்சுகிட்டு கவனிக்க நா பர்மிஷன் வாங்கப் பாக்கறேன்..."னு பெரிய மனசுபண்ணிச் சொன்னார்.

"எங்கக்கா சேர்த்து வெச்ச பணம்... இதை கான்வென்ட் பணமா நினைச்சு நீங்க ஏத்துண்டா, நா சந்தோஷப்படுவேன்"னு சொல்லி, என்கிட்ட இருந்த பணத்தைக் குடுத்தேன். கான்வென்ட் ஹாஸ்டல்ல, ஸந்த்யாவோட ஒரு அறையில தங்கினேன். பகல் பூரா ஆபீஸ்ல லெட்டர் டைப்பிங், மத்த வேலைகள்ல உதவி பண்ணேன்... சாயங்காலத்துல, சேப்பல்ல போய் உக்காந்துண்டு, 'ஏசுபிரானே, எனக்கு அமைதியைக் குடு'னு பிரார்த்தனை செஞ்சேன்.

ஆண்கள் வராத இடம்... தெரிஞ்ச முகங்கள் கண்ணுல பட சந்தர்ப்பமேயில்லாத இடம்...

ரெண்டு மாசம் ஆனப்பறம், ஆபீஸ் ரூம்ல தனியா இருக்க சமயம் கிடைச்சப்போ, முதல்முறையா உங்களுக்கு நா போன் பண்ணினேனே, அந்த நாள் ஞாபகமிருக்கா, பரத்?

மனசுல அத்தனை வைராக்கியம் இல்லாத நிலையில நா இருந்ததால, அன்னிக்கு மட்டும் நீங்க, 'ஐ'ம் ஸாரி மோஹனா, நா பண்ணது தப்பு, வந்துடு'னு மனசு உருகக் கேட்டிருந்தா, அத்தனையையும் உதறிட்டு ஓடிவந்திருப்பேன்!

ஏசுவின் கருணாயால, நீங்களும் அப்படிச் சொல்லலை, நானும் வரலை.

அன்னிக்கு ராத்திரி சேப்பல்ல நா ஒரு சபதம் எடுத்துண்டேன்... பரத் தப்பை உணர்றவரைக்கும் இனி எனக்கு இந்தக் கான்வென்டுதான் எல்லாம்னு சபதம் எடுத்துண்டேன்.

என் நல்ல நடத்தை மதருக்குப் பிடிச்சிருக்கணும்... சீக்கிரமே, பேசவேண்டியவாகிட்டப் பேசி, கான்வென்ட்ல சேர எனக்கு அனுமதி குடுத்தார்.

நீங்க கட்டின தாலியைக் கழட்டிட்டு, மதம் மாறி, நா ஒரு அமைதியான காலைநேரத்துல 'மோனிகா'வானேன்.

கடுமையான விதிமுறைகள்... அதைவிடக் கடுமையான மனக்கட்டுப்பாடு...

ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கப்பறம், என்னை ஜீஸஸுக்கு அர்ப்பணிச்சதுக்கு சாட்சியா, மொட்டை அடிச்சுண்டேன்... ஒரு ஸிஸ்டருக்கான உடைகளை மாட்டிண்டேன்...

அன்னிக்கு என் இதயத்துல பரவின உணர்வை இப்போ நினைக்கறப்போகூட, என் தேகம் சிலிர்த்துப்போறது, பரத்!

மனசு அடங்கஅடங்க நிம்மதி நம் கூடவே இருக்கும்ங்கற உண்மையப் புரிஞ்சுண்டேன்.

இப்படித்தான் நா ஒரு கன்னியாஸ்த்ரீ ஆனேன்.

என்னைப் பத்தின விவரம் போதும்னே நினைக்கறேன்... பாக்கி வருஷங்களை நா எப்படிக் கழிச்சேன், என்னென்ன செஞ்சேன்ங்கற விவரமெல்லாம் அனாவசியம்.

வெளி உலகைப் பத்தின எந்தத் தகவலும் தெரியாம நா வாழ்ந்துண்டிருந்தாலும், நீங்க சமூகத்துல பெரிய மனுஷராகத் தொடங்கினப்பறம், பேப்பர் மூலம் உங்களைப் பத்தின சில விவரங்கள் எனக்குத் தெரியவந்தது.

ஆரம்பத்துல, ஒளிஞ்சுக்க ஒரு நல்ல இடமா நினைச்சுதான் நா கான்வென்ட்ல சேர்ந்தேன்... ஆனா, போகப்போக, நினைப்பாலும் மனசாலும் ஒரு உண்மையான கிறிஸ்தவரா மாறினது வாஸ்தவம்தான், பரத்!

ஆனா, மனசுல கையை வெச்சு, 'நா ஒரு உண்மையான கிறிஸ்தவராதான் வாழறேன்'னு ஆண்டவன் முன்னால நின்னு சொல்லமுடியாம நா தவிக்கறதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு...

கான்வென்ட்ல சேர்றதுக்கு முன்னால மதர்கிட்ட சொன்ன பொய்கள்... கல்யாணம் ஆகாதவ, எனக்கு மனுஷா யாருமே கிடையாது, ஸந்த்யா என் அக்கா குழந்தை... இன்னும்... கடவுளே, எத்தனை பொய்!

அப்பறம் ஒவ்வொரு வருஷமும் உங்களை நா செஞ்ச சித்ரவதைகள்...

இல்லாததையும் பொல்லாததையும் ரெண்டு நிமிஷத்துல சொல்லி, வருஷம் பூரா உங்களைத் தூக்கமில்லாம, சாப்பாடு எறங்காம, நிம்மதியில்லாம நா செஞ்ச சித்ரவதைகள்...

என் பயணத்தோட முடிவுக்கு வந்துட்டேனோங்கற சந்தேகம் இன்னிக்குக் கார்த்தால உங்களோட போன்ல பேசறப்போ எனக்குத் தோணித்து... சாயங்காலம் சென்டினரி ஹால் விழாவுல உங்களைப் பாத்து உங்க பேச்சைக் கேட்டப்பறம் நிச்சயமாயிடுத்து.

அந்த அழுகை, அந்தக் கெஞ்சல்...

ஆயிரம் பேர் நடுவுல, 'குழந்தைகளைப் பெத்துட்டாப் போறாது... இன்னிக்குப் பரிசு வாங்கற குழந்தைகள் மாதிரி சிறப்பா வளர்க்கணும். அவாளைப் பெத்து வளர்த்தவாளுக்கு என் பாராட்டு, நன்றி'னு சொல்லி, குரல் தழுதழுக்க நீங்க நின்ன கோலம்...

போதும், பரத்... நீங்க மனுஷனாயிட்டேள்! இனிமேயும் உங்களுக்கு தண்டனை வேண்டாம்!

உங்க பொண்ணைத் தூக்கிண்டு கிளம்பின நிமிஷத்திலேயே, 'இவளை ஊரும் உலகமும் புகழும்படி சிறப்பா வளர்த்துக் காட்டணும்'னு எனக்குள்ள நா சத்தியம் பண்ணிண்டதை இப்போ சொன்னா நீங்க நம்புவேளா, பரத்?

விபசாரி, கால் கேர்ல் அப்படின்ற வார்த்தையெல்லாம் நா உபயோகப்படுத்தினது, உங்களைப் பயமுறுத்தத்தான்... அவ்வளவு மோசமான பேச்சு பேசினதுக்காக என் மேலயே எனக்கு வெறுப்பு வந்தது... நம்புங்கோ, பரத்!

மாபாதகமான கொலையைச் செஞ்சவனுக்குக்கூட பல சமயம் ஆயுள்தண்டனையை நம்ம நீதிமன்றம் குடுக்கறது... ஆயுள்தண்டனைன்னா பதினாலு வருஷம் இல்லியா?

பதினாலு வருஷங்களா நீங்க பட்ட கஷ்டம், வேதனை, போதும் பரத்...

என் மனசைக் கொன்ன குத்தத்துக்காக, நீங்க ஆயுள் தண்டனையை அனுபவிச்சாச்சு... அது போதும்!

இனிமே, நீங்க சந்தோஷமா இருக்கணும்... நிம்மதியா, உங்க ஆயுசுக்கும் சிரிச்சிண்டிருக்கணும்! ஸந்த்யா, உங்களை அப்பான்னு கூப்பிடணும்... நீங்க உங்க பொண்ணை இனிமே ஒரு கணம்கூடப் பிரியாம பக்கத்துலயே வெச்சுக்கணும்!

நீ என்ன பண்ணப்போறேன்னு நீங்க கேக்கலாம்...

நானா?

நேரா மதர்கிட்ட ஓடப்போறேன்... பண்ண பாவங்கள், சொன்ன பொய்கள் எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லப்போறேன்... அப்பறம், முடிவு பண்றது மதர் கையில... எனக்கு தண்டனை குடுக்கறதோ, இல்லை என்னை மன்னிச்சு ஏத்துக்கறதோ, இனிமே மதர் கையிலதான் இருக்கு!

ஸிஸ்டர் மோனிகாவா மாறிட்ட நா, பழைய மோஹனாவா மாறறதுங்கறது மட்டும் இனி இந்த ஜன்மத்துல இல்ல! ஏசுபிரான் என்னை மன்னிச்சு ஏத்துப்பார்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.

உங்க பொண்ணை, நீங்களே புகழறபடி வளர்த்து பத்திரமா ஒப்படைச்சுட்டேன். அவகிட்ட, நடந்த விவரங்களை சுருக்கமா சொல்லி, உங்கப்பாவோட நீ வாழவேண்டிய நேரம் வந்துடுத்துன்னு சொல்லி அனுப்பியிருக்கேன்.

அவ்வளவுதான்... இனி சொல்ல பாக்கி என்ன இருக்கு?

உங்க ரெண்டு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

- ஸிஸ்டர் மோனிகா.

படித்து நிமிர்ந்தபோது, பரத்தின் உடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது.

கண்களில் நீர் பூத்திருக்கிறது.

என் மகளா? வந்திருக்கிறாளா?

எ... எங்கே?

"தம்...பூ..." பெரிசாய் குரலெடுத்து பரத் கத்தின கத்தலில், தம்பு என்னவோ ஏதோவென்று ஓடிவருகிறான்.

"இந்த லெட்டரைக் கொண்டுவந்தது யாரு? அவ எங்க?"

"வாசல்ல இருக்கச் சொல்லிட்டு வந்தேன்..."

தம்பு முடிப்பதற்காகக் காத்திருக்க முடியாமல் பரத் வேகமாய் வாசலுக்கு ஓடுகிறான்...

வாசல் வராந்தாவில் மங்கலாய் டோம் விளக்கு வெளிச்சம்...

வராந்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண், இவனைக் கண்டதும் எழுந்து நிற்கிறாள்.

ஸமந்தா...!

விழாவில் தலைசிறந்த மாணவி என்று பரிசு வாங்கின ஸமந்தா!

ஸமந்தாவா... ஸந்த்யாவா?

உடம்பும் மனசும் சிலிர்த்துப்போகின்றன.

கண்களில் பூத்த பூக்கள், கன்னத்தில் சிதறத் தொடங்குகின்றன.

சட்டென்று, மோஹனா... மோஹனா என்று வாய்கொள்ளாமல் அவள் பெயரை அரற்றவேண்டும்போல இருக்கிறது...

எத்தனை உசத்தியான காரியத்தைச் சாதித்திருக்கிறாய், மோஹனா!

நீ செய்திருக்கும் இந்த நல்ல செயலுக்காக, என்றென்றும் உன்னைப் போற்றுவேன், ஸிஸ்டர் மோனிகா... தாங்க்யூ ஸோ மச் பார் எவ்ரிதிங்!

பரத்தின் அவஸ்தை, அதிர்ச்சி புரிந்த தினுசில், ஸந்த்யா ஓரடி எடுத்து கிட்டத்தில் வருகிறாள்...

தலையைச் சாய்த்து அவனுடைய நளினி சிரிக்கிற மாதிரி அழகாய் சிரிக்கிறாள்...

அப்புறம், "ஹலோ, டாடி... ஹாப்பி நியூ இயர்!" என்கிறாள்.

(முடிந்தது)