பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சீன ஜோடி கொலை: ஐ.எஸ். இயக்கம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2017 21:39

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டா நகரில் மே மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட சீன ஜோடி குவெட்டா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் உருது மொழி பயின்று வந்தனர். மே மாதம் அவர்கள் இருவர் மற்றும் இன்னொரு சீனப் பெண் என 3 பேரை துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் கடத்திக் கொண்டு சென்றார்.
சிறிது நாள் கழித்து அதில் ஒரு பெண் தப்பி வந்தார். மீதமுள்ள இருவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை யார் கடத்தினார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
இந்நிலையில் கடத்தப்பட்ட இரு சீனர்களும் கொல்லப்பட்டனர் என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவித்து உள்ளது.
ஐ.எஸ். இயக்கத்துக்குச் சொந்தமான அமாக் நியூஸ் ஏஜென்சி ஊடகத்தில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மாஸ்டாங் மாவட்டத்தில் ஐ.எஸ். எதிர்ப்பு வேட்டையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது.

இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சீனர்கள் கொல்லப்பட்ட தகவலை ஐஎஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.