பிரெஞ்ச் ஓபனில் அசத்தல் காலிறுதியில் ஆன்டி முர்ரே

பதிவு செய்த நாள் : 06 ஜூன் 2017 08:23


பாரிஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு கால்இறுதிக்கு பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ருமேனியாவின் ஹாலெப் உள்ளிட்டோர் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், உலகின் நம்பர்-1 பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ரஷ்யாவின் கசானோவ் மோதினர். இரண்டு மணி நேரம், 4 நிமிடம் வரை நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய முர்ரே 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் ரமோஸ்வி-னோலசை தோற்கடித்தார்.

ஹாலெப் முன்னேற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் கார்லா சாரஸ் நவரோ மோதினர். அசத்தலாக ஆடிய ஹாலெப் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வென்று, கால்இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 4-6, 6-3, 7-5 என்ற கணக்கில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை தோற்கடித்தார்.