பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 30

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2017"என்ன பரத், தூக்கம் இன்னும் கலையலியா? இல்லே, ராத்திரி குடிச்ச ட்ரிங்க்ஸோட மயக்கம் ஆளை அமுக்கறதா?"

விரக்தியோடு பரத் சிரித்தான்.

"தூக்கமும் இல்லே, ட்ரிங்க்கும் இல்லே... தூக்கமும் சந்தோஷமும் என்னைவிட்டுப் போயி இன்னியோட பதினாலு வருஷம் ஆறது... ட்ரிங்க்ஸ் போயி ஒரு வருஷம் ஆறது! இப்போ அந்தப் பேச்சு எதுக்கு? ஸந்த்யா எப்படியிருக்கா? ஏன் நீ ஒரு வருஷமா எனக்கு போனே பண்ணலை? என் குழந்தைக்கு என்ன ஆயிடுத்தோன்னு நா தவிச்ச தவிப்பு உனக்குக் கொஞ்சமாவது புரிஞ்சிருந்தா, இப்படிப் பேசாம இருக்கமாட்டே..."

"நா ஒரு வருஷமா போன் பண்ணாத காரணத்தை அப்பறமா சொல்றேன்... முதல்ல, உங்களைப் பாராட்டணும்... ஸொஸைட்டில பெரிய ஆளாயிட்டேள் போலருக்கே!"

"என்ன சொல்றே?"

"ஆபீஸ்ல நீங்க இப்போ சீனியர்மோஸ்ட் பார்ட்னர்! ரோட்டரி கிளப்ல கவர்னர்! இன்ஸ்டிட்யூட் ஆப் சார்ட்டர்ட் அகெளண்டன்ட்ஸ்ல வைஸ் பிரஸிடெண்ட்... அடேயப்பா! என்னென்ன பதவி, அந்தஸ்து!"

உண்மைதான்... மோஹனா, ஸந்த்யா, இருவரையும் மறக்க வேலையில் தன் கவனத்தைத் திருப்பி, பிசாசாய், ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரங்கள் பரத் உழைத்த உழைப்பு வீணாகப்போகவில்லைதான்...

படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு... வெளியிடங்களில் செல்வாக்கு...

அதுசரி, இந்த விவரமெல்லாம், பம்பாய், டெல்லி என்று அலைந்துகொண்டிருக்கும் இவளுக்கு எப்படித் தெரியும்?

பரத்துக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

"உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும், மோஹனா?"

"என் வாடிக்கைக்காரர் ஒருத்தர் சொன்னார்..."

"யார் அது?"

"விவரமெல்லாம் எதுக்கு, பரத்? விடுங்கோ! நா ஒரு வருஷமா உங்களோட ஏன் பேசலைன்னு கேட்டேளே, அதுக்கு பதில் சொல்றேன்... ராஜஸ்தானுக்குப் போயிருந்தேன்... ஒரு மாஜி மகாராஜா கூப்பிட்டிருந்தார்... ஆறு மாசத்துல போரடிச்சுடுத்து! அப்பறம், ஒரு அரசியல்வாதி என்னோட வாயேன்னார்... காஷ்மீர்ல ஒரு மாசம், காட்மண்டுல ஒரு மாசம்... இப்போ திரும்ப டெல்லி! டைம் ஓடினது தெரியலை..."

பரத்துக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. பதில் ஏதும் பேசாமல் இருந்தான்.

பரத்தின் மெளனம் புதுசாய் இருக்க, "ஏன் பேசாம இருக்கேள், பரத்? 'உன் தெருநாய் குணத்தைப்பத்தி இனிமேதான் புதுசாச் சொல்லணுமா?'னு ஏன் கேக்காம இருக்கேள்? 'ப்ளடி பிட்ச், டர்ட்டி அனிமல், கேடுகெட்டவ'னு வாடிகையாத் திட்டறதையெல்லாம் ஏன் சொல்லாம இருக்கேள்? ஆச்சர்யமா இருக்கே!" மோஹனா பேசிக்கொண்டுபோனபோது, சடாரென்று பரத் குறுக்கே பேசினான்.

"வேண்டாம், மோஹனா... என்னைக் கேலி பண்ணாதே... ப்ளீஸ்... ஸொஸைட்டில நா பெரிய ஆளா இருக்கலாம்... ஆனா, என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நா ஒரு பெரிய ஜீரோ! அதுவும், இப்பல்லாம் துளிக்கூட மனசுல பலம் இல்லே... என்னை டீஸ் பண்ணாதே, மோஹனா... ப்ளீஸ்..."

"டீஸ் பண்றேனா? நானா? உங்களையா? வேடிக்கைதான், பரத்! என்னமோ தெரியலை, இன்னிக்கு உங்க பேச்சும் குரலும் புதுசாதான் இருக்கு..." கொஞ்சம் தாமதித்தபின் மோஹனா தொடர்ந்தாள். "எதுக்காக போன் பண்ணினேனோ அதை மறந்துட்டு என்னென்னமோ பேசறேன்... கேளுங்கோ, பரத், ஸந்த்யாவுக்கு டேட் குறிக்கப்போறேன்... இன்னும் எத்தனை நாள் காத்திருக்கறதுன்னு பார்ட்டி அவசரப்படுத்தறார்... ஸந்த்யாவும் 'நா ரெடி, மம்மி'னு சொல்லிட்டா! அட்வான்ஸ் வாங்கிட்டேன்... இன்னிக்கு ராத்திரி நல்ல நாள் குறிக்கப்போறோம்... இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோதான்... அப்பறம்... ஓ, பரத்... சந்தோஷமா இருக்கு! ஸந்த்யா அழகுக்கும் துடிப்புக்கும், அவ டாப் ரேட் பொண்ணா இருக்கப்போறான்னு எல்லாரும் சொல்றா! என்ன பரத், கேக்கறேளா?"

அடிவயிற்றில் கத்தியைச் செருகிவிட்ட மாதிரி பரத் இரண்டாக மடிந்து கொண்டான்.

வலி... வலி... வலி...

"வே... வேண்டாம், மோஹனா... உன் கால்ல வேணுன்னாலும் விழறேன்... ப்ளீஸ் ஸ்டாப் இட்! உனக்கு இது மூலமா என்ன கிடைக்கப்போறது? பணம்தானே? ஒரு லட்சம்...? அஞ்சு? பத்து? எவ்வளவு? அதை உனக்கு நா விட்டெறியறேன்... என் வீடு, சொத்து, பணம் எல்லாம், எல்லாம் தரேன்... ப்ளீஸ், என் ஸந்த்யாவை விட்டுடு, மோஹனா... நீ சொல்றதை மட்டும் நிறைவேத்திட்டேன்னா, அதைக் கேக்க நா உயிரோட இருக்க மாட்டேன்! மோஹனா... ப்ளீஸ்... ப்ளீஸ்..."

பேசமுடியாமல் பரத் அழத் தொடங்கிவிட்டது மோஹனாவுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். மெளனமாய் இருந்தாள்.

"மோஹனா... கேக்கறியா? ஒண்ணு உனக்குச் சொல்லட்டுமா? இப்ப நா பழைய பரத் இல்லே, மோஹனா... அந்தத் திமிர்பிடிச்ச, குடிகார, வார்த்தையால ஆளை விரட்டற பரத் இல்லே, மோஹனா! நா மாறிட்டேன்... அம்மா போனதுலேந்து நா குடிக்கறதில்லே, மோஹனா... சத்தியமா இல்லே! ஒரே ஒரு தரம் என்னை நேர்ல பாரு... அப்பறம் உனக்கே புரியும்... ஊர் உலகத்துக்கு என் பதவியும் அந்தஸ்தும் பெரிசாப் படலாம்... ஆனா, நா நடைப் பிணமாத்தான் வாழ்ந்துண்டிருக்கேன்... மனசு செல்லரிச்சுப்போயிடுத்து... ஒரு குத்துகூட அது இனிமே தாங்காது! வேலைல என்னை நா அழுத்திக்கறது, என் கவனத்தை, நினைப்பை பிஸியா வெச்சுக்கறதுக்காகத்தான்! ப்ளீஸ், என்னை நம்பு... எனக்கு அந்தஸ்து, பணம் எதுலயும் ஆசை இல்லே... என்கிட்ட கொஞ்சநஞ்சம் ஒட்டிண்டிருக்கற நம்பிக்கையையும் பறிச்சுடாதே, மோஹனா... என் ஸந்த்யாவை கெளரவமா வாழ விடு... ப்ளீஸ்... ப்ளீஸ்... அம்மா சாகறதுக்கு முன்னால, 'மோஹனா ரொம்ப நல்லவ... அவ திரும்பி வருவா... நம்பிக்கையோட இரு'னு சொல்லிட்டுப்போனதை, அந்தப் பெரிய மனுஷி வாக்கை நிரூபிக்கறதுக்காகவாவது என் ஸந்த்யாவை என்கிட்ட நல்லபடியா திருப்பிக் குடுத்துடு... ப்ளீஸ்... மோஹனா..."

பரத் வாய்விட்டே அழத் தொடங்கிவிட்டான்.

சில கணங்களுக்கு ஏதும் பேசாமல் இருந்துவிட்டுப் பேசினபோது, மோஹனாவின் குரல் தழுதழுத்தது.

"அம்மா போயிட்டாரா? நிஜமாவா? எப்போ?"

"பத்து மாசமாறது... நா தனியா தவிக்கறேன், மோஹனா... கல்லா இருந்த நானே இளகிட்டேன்... அப்பறம் உனக்கு ஏன் இத்தனை ரோஷம்? உன் கால்ல விழணுமா? விழறேன். மன்னிப்பு கேக்கணுமா? கேக்கறேன். இன்னும் வேற என்ன பண்ணணும்? சொல்லு மோஹனா..."

மோஹனா திரும்ப மெளனமாய் இருந்தாள். அப்புறம் சன்னமாய்ப் பேசினாள்.

"அம்மா போயிட்டதைக் கேக்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, பரத்... அவர் நிஜமாவே ஒரு நல்ல மனுஷி! என்கிட்ட மனப்பூர்வமான ஆசையோட இருந்தார்... ஐ'ம் ஸாரி... வெரி ஸாரி! எனக்கு இப்ப என்ன பேசறதுன்னே தெரியலை... நா அப்பறமா பேசறேன்..."

கண்களைத் துடைத்து, லேசாய் ஆஸ்வாசப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து பேச பரத் தன்னைத் தயார் பண்ணிக் கொள்கையிலேயே, மோஹனா தொடர்பைத் துண்டித்து விட்டாள்.

ரிஸீவரைத் தூக்கியெறிந்த பரத், அப்படியே மல்லாந்து படுத்துக்கொண்டான்.

அட்வான்ஸ் வாங்கிவிட்டாளா?

பார்ட்டி தொந்தரவு பண்ணுகிறார்களா?

ஸந்த்யா, 'நான் ரெடி' என்று சொல்லிவிட்டாளா?

ஐயோ... நான் என்ன பண்ணுவேன்!

இத்தனை புகழ், பணம், புத்தி இருந்தென்ன?

பதினாலு வருஷங்களாய் என் மகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க வக்கில்லாதவனாய் இருக்கிறேனே!

மோஹனா தன் சபதத்தை நிச்சயம் நிறைவேற்றத்தான் போகிறாளா?

புத்தி மாறி வந்துவிடுவாள், நான் தெளிந்ததைப்போல அவளும் தெளிந்துவிடுவாள் என்று அடிமனசில் சின்னதாய் நம்பியது வீண்தானா?

பலபலவென்று விடிந்த பின்னரும், பரத் படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் படுத்துக் கிடந்தான்.

பெரியபெரிய ஆசாமிகளெல்லாம் புதுவருஷ வாழ்த்து கூற போனில் அழைத்த போதும், நேரில் வந்திருப்பதாக தம்பு சொன்னபோதும், எழுந்திருக்க பரத் மறுத்து விட்டான்.

காபியோடு காலையில் மேலே வந்த தம்புவிடம், "எனக்கு உடம்பு சரியில்லே... அதனால, போன் வந்தா கனெக்ஷன் குடுக்காதே! யாராவது பாக்க வந்தா, 'ஐயா வீட்ல இல்லே'னு சொல்லிடு..." என்று கூறிவிட்டான்.

பதினொரு மணிக்கு ஷ்யாம், தம்புவை மீறிக்கொண்டு மாடிக்கு வந்தான்.

"என்ன விஷயம், பரத்... போன் பண்ணாக்கூட பேசமாட்டேங்கறே?"

"..............."

"எழுந்திரு... வருஷப்பிறப்புன்னாலே நீ நடுங்கறது எனக்குப் புரியாதுன்னா நினைச்சே? இப்படிப் படுத்துட்டேயிருந்தா, நிலைமை மாறிடுமா? ம்... எழுந்திரு... சாயங்காலம் யூனிவர்ஸிடி சென்டினரி ஹால்ல விழா இருக்கே, மறந்துட்டியா? ரோட்டரி கவர்னர்... ஆர்கனைஸர்... நேரத்தோட போய் ஏற்பாடுகளைக் கவனிக்காட்டா எப்படி? ம்... கெட் அப்..."

பரத் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

மாலையில் நடக்கப்போகும் விழாவை எப்படி அடியோடு மறந்துபோனேன்?

வரமாட்டேன் என்று சொல்ல முடியாது... ஷ்யாம் சொல்வதுபோல, இந்த விழாவை ஏற்பாடு பண்ணியிருப்பது, ரோட்டரி சங்கத்தின் இந்தப் பகுதிதான்... அப்புறம், அதன் கவர்னர் போகாவிட்டால் எப்படி?

1979 - குழந்தைகளின் ஆண்டு என்பதால், அவர்களைச் சிறப்பிக்க, அவர்களுடைய சிறப்புக்களை வெளிக்கொணர, பல போட்டிகளை ரோட்டரி சங்கம் நடத்தியது. தமிழ்நாட்டின் அத்தனை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், 'உங்கள் சிறந்த மாணவ-மாணவியை இப்போட்டியில் கலந்துகொள்ள அனுப்புங்கள்' என்று நோட்டிஸ் அனுப்பி, நூற்றுக்கணக்கில் குழந்தைகளைப் போக்குவரத்து செலவு கொடுத்து வரவழைத்து, நாலு நாட்கள் சென்னையில் தங்கவைத்து, போட்டிகள் நடத்தி, தேர்ந்தெடுத்த மாணவ-மாணவிகளுக்கு இன்று சென்டினரி ஹாலில் பரிசு வழங்கப் போகிறார்கள். மத்திய கல்வி அமைச்சர் கலந்துகொள்கிறார். மொத்தம் பத்துப் பரிசுகள்... பணமாய் இரண்டாயிரமும் புஸ்தகங்களும் கொடுப்பது போக, இந்தப் பத்து குழந்தைகளின் மேல்படிப்புச் செலவையும் ரோட்டரி சங்கம் ஏற்றுக்கொள்ளும். இத்தனை அமர்க்களம் போதாதென்று, 'ஆன் தி ஸ்பாட் க்விஸ்' என்று ஒன்றை விழா மேடையில் நடத்தி, இரண்டு குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அமெரிக்காவுக்கு ஒரு மாசம் அனுப்பும் திட்டமும் உள்ளது.

விழாவைப் பற்றின நினைப்பு வந்ததும், பரத் பரபரவென்று எழுந்தான். மோஹனா-ஸந்த்யாவைத் தன் நினைவிலிருந்து அப்புறப்படுத்தினான். ஆகவேண்டிய கடைசி நிமிஷ வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

ஐந்து மணிக்கு சென்டினரி கட்டடத்தில் அவன் நின்றிருந்தபோது, கூட்டம்கூட்டமாய் மாணவ-மாணவிகளுடன் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வந்து கூடிய நாழிகையில், ஸந்த்யாவும் நளினியும் பரத் மனசில் மீண்டும் ஏறி உட்கார்நத்¡ர்கள்.

'என் வயசுதானேப்பா இந்தப் பசங்களுக்கெல்லாம்? இவா மாதிரி நா ஏன் இல்லேப்பா?' என்றாள் ஸந்த்யா.

'என் குழந்தை வாழ்க்கையக் கெடுத்துட்டேளே, பரத்! அநியாயமா ஒரு ராட்சஸி கையில குடுத்து, குட்டிச்சுவராக்கிட்டேளே! எங்கயோ கேவலமான விபசாரியா வாழறதுக்கா நா அவளைப் பெத்தேன்? உங்களை நம்பித்தானே விட்டுட்டுப் போனேன்... ஏமாத்திட்டேளே!' என்று நளினி புலம்பினாள்.

விழா துவங்கப்பட்டது.

வண்ணாத்திப்பூச்சிகளைப் போல வரிசைவரிசையாய் உட்கார்ந்திருந்த மாணவிகளைப் பார்க்கப்பார்க்க பரத்தின் இதயத்தை ஓர் இரும்புக்கரம் அழுத்திப் பிசைந்தது.

ஸந்த்யா இப்போது எப்படியிருப்பாள்?

அதோ... இரட்டைப் பின்னலும் சிரித்த முகமுமாய் ஒரு பெண் இருக்கிறாளே, அவளை மாதிரி இருப்பாளோ? ம்ஹூம், இல்லை. முதல் வரிசையில் தலைமுடியை பாப் பண்ணிக்கொண்டு சிரிக்கும் பெண் போலத்தான் இருப்பாள்...

அந்தப் பெண்ணின் உயரம் இருப்பாளா? நிறம்?

ஒவ்வொரு பெண் பக்கத்திலும், முகத்தில் பெருமை தாண்டவமாட அவளைப் பெற்ற தந்தை, தாய்...

நிமிஷம் ஆகஆக பரத்தின் வேதனை அதிகமானது.

க்விஸ் ப்ரோக்ராம் முடிந்துவிட்டது. ஜட்ஜ்கள் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துவிட்டார்கள்.

மத்திய மந்திரி எழுந்து, பரிசுகளைக் கொடுக்கத் தொடங்கினார்.

பத்து பரிசுகளை எட்டு குழந்தைகள் வாங்கிக்கொண்டார்கள்.

விவேக் என்ற பையனுக்கும், ஸமந்தா என்ற பெண்ணுக்கும் தலா இரண்டு பரிசுகள்... க்விஸ்ஸில் வென்று, அமெரிக்கா போகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களும் இவர்கள்தாம்.

நன்றியுரை கூற பரத் எழுந்து நின்றான். வழக்கப்படி அனைவரையும் வரவேற்று முடித்த பின்னர், என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தவனின் வயிற்றில் அசாத்திய சங்கடம்... தொண்டைக் குழியில் நாக்கு மடங்கி ஒட்டிக்கொண்டது.

"என்னென்னவோ பேசவேண்டு மென்று ஆசைப்படுகிறேன்... ஆனால், வார்த்தைகள் ஒளிந்துகொண்டு என்னை எமாற்றுகின்றன! குழந்தைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது... அழகாய், புத்திசாலியாய், நல்ல குணம் கொண்டவர்களாய், நாடு போற்றும் மணிகளாய் வளர்ப்பதில்தான் பெருமை இருக்கிறது! இந்தக் குழந்தைகளைப் பெற்று வளர்த்தவர்களைக் கையெடுத்துக் கும்பிடவேண்டும்போல எனக்குத் தோன்றுகிறது... தங்கள் குழந்தைகளோடு, தாங்களும் நல்லதொரு வழிகாட்டிகளாய் இந்தச் சமூகத்துக்குத் திகழும் அவர்களுக்கு என் நன்றி..."

மேலே ஒரு வார்த்தைகூடப் பேச இயலாதபடி, ஸந்த்யாவைத் தான் பெற்றதும், இன்று அவளைப் பொறுப்பில்லாமல் நடுத்தெருவில் நாறடித்திருப்பதும் கண்முன் தாண்டவமாட, கண்களில் ஜலம் ததும்ப, குரல் தழுதழுக்க, பரத் தன் பேச்சை முடித்துக் கொண்டான்.

சங்கத்தின் கவர்னர் என்ற ரீதியில், விழா முடிந்ததும் கொஞ்சம் நின்று, கூட்டம் கலைந்ததும் நேராக வீட்டுக்கு வந்து சோபாவில் சாய்ந்தான்.

ஸந்த்யா விஸ்வரூபம் எடுத்து ஆளை ஓடஓட விரட்டினாள்.

மணி என்ன?

பத்தா?

இதற்குள் மோஹனா, டெல்லியில் ஸந்த்யா விலைபோக நாளைக் குறித்திருப்பாளோ?

ஐயோ, நான் என்ன செய்வேன்!

திரும்ப எப்போது அவள் போன் செய்வாள்?

செய்வாளா, மாட்டாளா?

கடவுளே... கடவுளே...

எதுவும் பிடிக்காமல் கைகளில் தலையை முட்டுக்கொடுத்தவண்ணம் பரத் உட்கார்ந்திருக்கையில், வாசல்மணி இனிமையாய் ஒரு தரம் அழைத்தது...

 (தொடரும்)