பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 29

பதிவு செய்த நாள் : 29 மே 2017பதினாலு வருஷங்களா?

ஆமாம்... நிம்மதியில்லாத பதினாலு நீளமான வருஷங்கள்!

பரத் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் பத்து நிமிஷங்களில் 1980-ம் வருஷம் பிறந்துவிடும்.

புதுவருஷ பார்ட்டிக்கு யார்யாரிடமிருந்தோ அழைப்பு வந்திருந்தும், அத்தனையையும் பரத் நிராகரித்துவிட்டான்.

தனியாய் இருக்கவேண்டும்போல ஒரு தவிப்பு...

பதினாலு வருஷங்களுக்கு முன் தஸ்தூர் வீட்டுக்குப் போனதையும், திரும்பி வந்த மோஹனாவைக் கண்டபடி கேள்வி கேட்டதையும், அவள் மகா ரோஷக்காரியாக குழந்தையுடன் ஓடிப்போனதையும், அப்புறம் வந்த வருஷங்களில் இருந்த பேச்சு வார்த்தைகளையும், ஒண்டியாய் உட்கார்ந்து ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்டிவைக்க, பரத் ஒருத்தர் வீட்டுக்கும் வரச் சம்மதிக்கவில்லை.

"என் பார்ட்டிக்குக் கூடவா, பரத்?"

ஆதுரத்துடன் ஷ்யாம் கேட்டதற்கு, 'ஆமாம்' என்று பரத் தலையசைத்தான்.

"ஆமா... இந்த தரம் தனியா இருக்க நினைக்கறேன்... ஒவ்வொரு வருஷமும் இந்தப் புது வருஷத்தைப் பாக்க பயந்துண்டு விடியவிடியக் குடிச்சு என்னையே மறந்து போவேன்... இந்த வருஷம் அப்படியில்ல... அதை பாத்தேதீரணும்! அதோட, குடிக்காம வெறும நா வந்து உக்காந்துண்டிருந்தா, உங்களுக்கும் கஷ்டம்... அதனால, என்னை விட்டுடு, ப்ளீஸ்..."

ஷ்யாம் அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை.

பரத் பத்துமாச காலமாய் குடியையும் சிகரெட்டையும் தொடுவதில்லை என்பது அவனுக்குத் தெரிந்த சமாச்சாரம்தான்.

மாரடைப்பில் படுத்த ஜெயம்மா, இந்த முறை எழுந்திருக்கவில்லை... ஒரேயடியாய்ப் போய்விட்டாள்.

போகும்முன், நினைவு தப்பும் முன், பிள்ளையைக் கிட்டத்தில் உட்காரவைத்துக் கொண்டாள். முகத்தைத் தடவிக்கொடுத்தாள். கண்களில் ஜலம் தளும்பப் பேசினாள். "நானும் உன்னைவிட்டுப் போற சமயம் வந்துடுத்துன்னு தோண்றது, பரத்... இனிமே, உனக்கு அந்த பகவான்தான் துணை... தைரியமா இருப்பா... நடந்ததை நினைச்சு மனசைக் குழப்பிக்காதே... சுருக்க உன் கஷ்டமெல்லாம் விடிஞ்சுடும்! மோஹனாவும் ஸந்த்யாவும் எங்கயோ செளக்கியமா இருக்காங்கறது, அவ அப்பப்ப போன் பண்றதுலேந்து நமக்குத் தெரியறது... என் பிரார்த்தனையை தெய்வம் ஏத்துண்டு, அவாளை உன்கிட்ட சீக்கிரமா கொண்டுசேர்த்துடும்னு எனக்கு என்னமோ தோண்றது... நம்பிக்கையோட இருப்பா..."

பேசிக்கொண்டேபோன அம்மா, கொஞ்சம் தயங்குகிற மாதிரி தோன்ற, "என்னம்மா?" என்றான் பரத்.

"ஒருவேளை நா வேண்டிக்கறது பலிச்சு, மோஹனாவும் குழந்தையும் உன்னண்ட திரும்ப வந்தா, நீ அவாளை அன்போட ஏத்துக்கணும்... ஏத்துப்பியா? மோஹனா நல்லவதான், பரத்... என்னமோ போறாத காலம், விதி அவளை ஓடிவெச்சிடுத்து... அவ உன்கிட்ட திரும்ப வர்ற அன்னிக்கு நீ குடிக்காம இருந்து, அவளை நல்ல மனசோட வர§ற்கணும்னு நா ஆசைப்படறேன்! எனக்கு நீ ஒரு சத்தியம் பண்ணித்தரணுமேப்பா... செய்வியா, பரத்? இனிமே இந்தக் குடியைத் தொடறதில்லேன்னு சத்தியம் பண்ணிக் குடுப்பியா, பரத்?"

மோஹனாவா? நல்லவளா?

அம்மா... அவ மனசு பூரா விஷம்மா... அவளையா நல்லவனு சொல்றே? நம்ப ஸந்த்யாவை அவ ஒரு விபசாரியா வளர்த்துண்டிருக்காம்மா... உன்கிட்ட நா எதையுமே சொல்லாம இருந்ததால, உனக்கு ஒண்ணும் புரியலை... மோஹனாவுக்கு உடம்பு பூரா விஷம்மா... ஆலகால விஷம்...

மனசில் கசந்துபோனாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல் பரத் அம்மாவுக்கு சத்தியம் செய்துகொடுத்ததும், அம்மா போன பிறகு, இந்தப் பத்து மாசங்களில் குடிக்காகவும், சிகரெட்டுக்காகவும் ஒருகணம்கூட ஏங்காததும் நிஜம்தான்.

இதையெல்லாம் விட்டொழிப்பது இத்தனை சுலபமா? வேண்டாம் என்று தட்டி விடுவது இத்தனை எளிதா?

பின், நான் ஏன் ஆரம்பத்திலேயே இப்படி இருக்கவில்லை? ஒரு 'பெக்'குக்காக நாக்கு வறண்டு தவித்தது எதற்காக?

நின்று நிதானமாய் யோசித்தபோது, அன்று மனசில் பக்குவம் இல்லாததும், இன்று அடிபட்டு விவேகமும் நிதானமும் கூடி, நினைத்ததை சாதிக்கும் மனோபலம் உண்டாகியிருப்பதும் புரிந்தது.

மாடிக் கூடத்து கடிகாரம் இனிமையாய் பன்னிரண்டு அடிப்பது காதில் விழ, பரத் எழுந்தான்.

டேபிள் மேல் இருந்த நளினி, ஸந்த்யா புகைப்படங்களைக் கண்சிமிட்டாமல் பார்த்தான்.

அன்று ஒண்ணரை வயசுக் குழந்தையாய் இருந்த ஸந்த்யாவுக்கு, இன்று பதினைந்து முடிந்துவிட்டது.

ஸந்த்யா யாரைப்போல இருப்பாள்? என் மாதிரியா? இல்லை, நளினி போலவா? உயரமாய் இருப்பாளா? நிறம்? பேச்சும் சிரிப்பும் நளினியுடையதைப்போல கலகலக்குமா?

ஸந்த்யா... நீ எங்கேயம்மா இருக்கிறாய்? உன்னைப் பார்க்கவேண்டுமென்று நான் துடிப்பதை உன்னிடம் யாராவது சொல்வார்களா?

ஏதோ நினைப்பு வந்த மாதிரி பரத் டெலிபோன் வைத்திருந்த டேபிளிடம் சென்றான்.

மூன்று வருஷங்களாய் சதா டெலிபோன் டேபிளிலேயே உட்கார்ந்திருந்த காஸட் டேப் ரெகார்டர் மேல் படிந்திருந்த தூசியைத் தட்டினான்.

ரீவைண்ட் செய்து டேப்பை ஓடவிட்டான்.

கடந்த பதினாலு வருஷங்களில் மோஹனா, கண்டிப்பாய் வருஷத்தில் ஒரு தடவையாவது அவனோடு போன் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறாள்.

ஸந்த்யாவின் பிறந்த நாள், பரத்தின் பிறந்த நாள், தங்கள் திருமண நாள், நளினி இறந்த நாள், தான் ஓடிப்போன நாள் என்று ஏதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கூப்பிடுவாள்.

முதல்முறை ஸந்த்யாவின் பிறந்த நாள் அன்று அழைத்ததால், அடுத்த வருஷம் நாள் பூராவும் ஆபீஸை விட்டு இந்தண்டை அந்தண்டை போகாமல் பரத் டெலிபோனிடமே பழிகிடந்தான்.

அன்று அவனை மோஹனா ஏமாற்றினாலும், சற்றும் எதிர்பாராத தினுசில் பரத் பிறந்த நாள் அன்று தொடர்புகொண்டாள்.

அடுத்த வருஷம், நளினி இறந்த தினத்தில், அதற்கும் அடுத்த வருஷம் ஜனவரி முதல் தேதியன்று.

ஐந்து ஆறு வருஷங்கள் ஆவதற்குள், மோஹனா ஒரு எமகாதகி, குறிப்பிட்ட நாளில் அழைத்து மாட்டிக்கொள்ள விரும்பாமல் திட்டமிட்டுச் செயல்படுகிறாள் என்பதும், வீட்டு போனை 'டாப்' பண்ணியிருக்கலாம் என்ற ஊகத்தில், ஆபீஸைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதும் பரத்துக்குத் தெளிவாய்ப் புரிந்துபோயின.

அந்த வருஷம் அவள் போன் செய்தபோது பேசிய இரண்டு நிமிஷங்களில், பரத் தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டான்.

"ஸந்த்யா எப்படியிருக்கா? அவளை என்கிட்ட அனுப்பிடேன்..." என்று மாமூலாகக் கெஞ்சுவதுபோலக் கெஞ்சினவன், எதற்கும் பதில் சொல்லாமல் மோஹனா சிரித்துவிட்டு, "ஓகே, தென்..." என்று ஆரம்பித்ததும், "ப்ளீஸ், வெக்காதே... உன்கிட்ட பேசணும்..." என்று சொல்லி, "நீ ஏன் ஆபீஸுக்கே போன் பண்றே, மோஹனா? வீட்டுக்குச் செய்யக் கூடாதா? போன தடவை என் முன்னால நாலு க்ளையண்ட்ஸ் இருந்தா... என்னால சரியாப் பேசவே முடியலை... ஸந்த்யாவைப்பத்தி இன்னும் கொஞ்ச நாழியாவது பேசலாம் இல்லியா? ப்ளீஸ்... ப்ளீஸ்..." என்று கேட்டான்.

"ஏன்? வீட்டு போனை 'டாப்' பண்ணியிருக்கேளா? நா மாட்டிப்பேன்னு நம்பிக்கையா?"

"இல்லே... நிச்சயமா இல்லே... முத வருஷம் 'டாப்' பண்ணியிருந்தது நிஜம்தான்... ஆனா, இப்போ இல்ல... சத்தியமா இல்லே..."

"உங்க சத்தியத்தை நம்பச் சொல்றேளா?"

மோஹனா கேலியாய்க் கேட்டுவிட்டு, போனை வைத்தாலும், அடுத்த வருஷம் வீட்டில்தான் அவனை அழைத்தாள். சில வருஷங்கள் இப்படிப் போனபிறகு, திடுமென்று தங்கள் பேச்சுக்களை பதிவு பண்ணினால் என்ன என்ற எண்ணம் தோன்ற, அதற்குப் பிறகுதான் எதற்கும் இருக்கட்டும் என்று காஸெட் டேப் ரெகார்டரை டெலிபோனுக்குப் பக்கத்தில் பொருத்திவைத்தான்.

மூன்று வருஷங்களாக மோஹனாவோடு பேசிய பேச்சுக்கள் டேப்பில் பதிவாகியுள்ளன.

பட்டனை அழுத்தியதும், பரத்தின் 'ஹலோ'வோடு டேப் சுற்றத் தொடங்கியது.

"நான்தான்..."

ஒரு வருஷமோ, அதற்கு மேலோ, இடைவெளிகளில் மோஹனாவின் குரலைக் கேட்பதால், ஒவ்வொரு முறையும் முதல் சில வினாடிகளுக்குக் கோர்வையாய் எதுவும் பேசத்தெரியாமல் பரத் செயலிழந்துபோவான்.

"எப்படியிருக்கேள், பரத்?"

"..............."

"இந்தத் தடவை உங்களுக்கு ஒரு ஆச்சர்யம்... எப்பவும் 'எங்கேயிருந்து பேசறே?'ம்பேள்... நா சொல்ல மாட்டேன். ஆனா, இந்தத் தரம் சொல்லப்போறேன்... நா இப்போ பெங்களூர்ல இருக்கேன், பரத்..."

பெங்களூரா? இருநூறு மைல் கிட்டத்திலா?

"ஸந்த்யா?"

"அவளும் என்கூடத்தான் இருக்கா... அவ நன்னா வளர்ந்திருக்கா, பரத்... நன்னா பாடறா, டான்ஸ் ஆடறா... வெரி ஸ்மார்ட்!"

"பாட்டும் ஆட்டமும் இருக்கட்டும்... அவ படிப்பு என்னாச்சு? இப்ப எந்த க்ளாஸ்ல இருக்கா?"

வழக்கமாய் இரண்டு நிமிஷங்களில் தங்களைப் பற்றின எந்தத் தகவலும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிடும் மோஹனா, இந்த முறை நீளமாய்ப் பேசியதில் பரத் பரபரப்படைந்திருந்தான்.

"க்ளாஸா? விபசாரிக்குப் படிப்பு எதுக்கு, பரத்?"

"மோஹனா... ப்ளீஸ், விளையாடாதயேன்..."

"இதுல என்ன விளையாட்டு? ஸந்த்யாவை நா அதுக்குதானே டிரெயின் பண்றேன்! இங்க, எங்க 'ஹவுஸ்'ல பாட்டும் டான்ஸும் தெரிஞ்ச பெண்களுக்குத்தான் டிமாண்ட் ஜாஸ்தி!"

"ஹவுஸா? அப்படீன்னா?"

"ஓ... நா அதை உங்களுக்குச் சொல்லலியா? இப்ப நா பழையபடி கால் கேர்ல் பிஸினெஸ் பண்ணலை... ஒரு 'ப்ராதல் ஹவுஸ்'ல இருக்கேன்... ரொம்ப செளகர்யமான வாழ்க்கை..."

ப்ராதல் ஹவுஸ்... விபசார விடுதி... ஆடம்பரமான வாழ்க்கை...

"மோ... மோஹனா... ப்ளீஸ்..."

அவனைப் பேசவிடாமல் மோஹனா குறுக்கிட்டாள். "சரி, நாழியாயிடுத்து... ஆ, முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே... இன்னிக்கு நாங்க ஹைதராபாத்துக்குப் போறோம்... அதனால, வீணா பெங்களூர்ல வந்து தேடியலையாதீங்கோ... பை!"

மோஹனா சொன்னதைக் காதில் வாங்காமல், ஷ்யாமோடு நாலு நாட்கள் பெங்களூரில் பரத் தெருத்தெருவாய் சுற்றவே செய்தான்.

அடுத்த சம்பாஷணை கல்கத்தாவிலிருந்து.

அடுத்தது டெல்லியிலிருந்து.

"ஆறு மாசமா டெல்லில இருக்கோம்... வொண்டர்புல் லைப்! இன்னிககு உங்களுக்கு நா போன் பண்ணினதுக்கு முக்கியக் காரணம் இருக்கு... கேக்கறேளா? ஸந்த்யா பெரியவளாயிட்டா... எப்படி! என் சத்தியத்தை இனிமே எந்த நிமிஷமும் நிறைவேத்திடலாம்னு நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, பரத்! ஆனா, நா இன்னும் கொஞ்ச நாள் காத்துண்டிருக்கப்போறேன்... நா கால் கேர்லா மாறினப்போ எனக்கு வயசு பதினாறு... அதனால, ஸந்த்யாவையும் அந்த வயசுல இந்தத் தொழில்ல அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்படறேன்! இங்க ஒரு சேட்ஜி... கோடீஸ்வரர்... ஸந்த்யாவோட முதல் டேட் தனக்கு வேணும்னு பிடிவாதம் பண்றார்... பணத்தைக் கொட்டிக்குடுக்கத் தயாரா இருக்கார்! என்ன பரத், நா சொல்றதெல்லாம் கேக்கறதா?"

மோஹனா பேசப்பேச பரத்தின் ஆத்திரம் வெட்டிக்கொண்டு எழுந்தது.

"யூ ப்ளடி ஸ்வைன்... டர்ட்டி பிட்ச்! என்ன தைரியமிருந்தா இப்படியெல்லாம் பேசுவே! துணிச்சலிருந்தா எனக்கு எதிர்ல வந்து இப்படிப் பேசு, பாக்கலாம்! கண்ணுக்குத் தெரியாம ஒளிஞ்சுண்டு விளையாட்டா காட்டறே! நாளைக்கே டெல்லிக்கு வந்து எப்படியாவது உன்னைக் கண்டுபிடிக்கறேன், பார்... லட்சக்கணக்குல செலவழிஞ்சாலும் பரவாயில்ல... உன்னைக் கண்டுபிடிக்காம விடமாட்டேன்! நாய்... தெருநாய்! உன்னை... உன்னை..."

மேலே பேச முடியாமல் உணர்ச்சிவசப்பட்டுப்போனதால், பரத்தின் தொண்டை அடைத்துப்போனது புரிந்ததோ, புரியவில்லையோ... மோஹனா சிரித்துக்கொண்டே தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.

அந்த போன்தான் கடைசி... ஏனோ, அதற்குப் பிறகு முழுசாய் ஒரு வருஷம் ஓடிவிட்டது. மோஹனாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

ஸந்த்யாவுக்குப் பதினாறு வயசாக இன்னும் எத்தனை மாசங்கள் பாக்கியிருக்கின்றன? நாலா, ஐந்தா?

அதற்குப் பிறகு?

கடவுளே... மோஹனா சொன்னதைச் செய்துவிடுவாளோ?

காஸட் டேப்பின் உதவியோடு, மோஹனா எங்கிருந்து பேசுகிறாள் என்று கண்டுபிடிக்க முடியுமா என்று பரத்தும் ஷ்யாமும் மண்டையை உடைத்துக்கொண்டு விட்டார்கள்.

ம்ஹூம், ஒன்றும் புரியவில்லை.

தொப்பையும் தொந்தியுமாய் ஒரு சிவந்த வடநாட்டுக்காரன் ஸந்த்யாவை பலாத்காரம் பண்ணுவது போலவும், ஸந்த்யா முயல்குட்டி மாதிரி மூலையில் ஒடுங்கி, 'ப்ளீஸ் அங்கிள், என்னை விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சுவது போலவும் கற்பனை பண்ணிப்பண்ணி, இந்த ஒரு வருஷத்தில் பரத் நடுங்கிச் செத்த நாட்கள் அநேகம்.

டேப்பை நிறுத்திவிட்டு பால்கனிக்குப் போய் உட்கார்ந்து, இருட்டை ரொம்ப நேரத்துக்கு வெறித்த பின் கண்ணயர்ந்தவனை, டெலிபோன் மணி எழுப்பியது.

எடுத்து, "ஹலோ..." என்றான் தூக்கம் கலைந்தவனாய்.

"ஹாப்பி நியூ இயர், பரத்..."

எதிர்பார்த்துப்பார்த்து பல நாட்கள் ஏமாந்திருந்ததாலும், சற்றும் எதிர்பார்க்காத தினுசில் இந்தக் காலைவேளையில் அவள் அழைப்பதாலும், மனசு படபடக்கத் தொடங்கி விட்டதைத் தாங்கமுடியாதவன் மாதிரி, பரத் கண்களை மூடிக்கொண்டான்.

 (தொடரும்)