ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு :அமைச்சர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 27 மே 2017 07:26

சென்னை:  

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  

தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித் துறை அறிவித்தது.  

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக, திருத்தணியில் 114 டிகிரி பதிவானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முன் எப்போதும் இல்லாத வகையில் 100 முதல் 110 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என்று கூறப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.  

சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில், பள்ளிகள் உள் கட்டமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். இதில், இந்திய அளவிலான பள்ளிகளின் உள்கட்டமைப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.  

இது தொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பள்ளிகளில், கழிவறைகள், வகுப்பறைகள் உட்பட உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த உள் கட்டமைப்பு நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்’ என்றார்.  

இதையடுத்து, கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, செல்போன் மூலம் முதல்வர் பழனிசாமியுடன் தொடர்பு கொண்டு, இதுகுறித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியது:  

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, அதிகமாக உள்ள வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறப்பு, ஜூன் 1ம் தேதிக்கு பதிலாக, ஜூன் 7ம் தேதி திறக்கப்படும்.  

அன்றைய தினமே புத்தகங்கள் வழங்கப்படும். ஒரு வார காலத்திற்குள் பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார்.