பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு 2017-18ல் ரூ. 523 கோடி நிதி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் : 26 மே 2017 03:48

சென்னை:

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் கிடைக்க செய்வதற்காக 2017-18ல் கூடுதல் விவசாயிகளை சேர்க்க வசதியாக ரூ. 522.70 கோடி, பிரீமியம் நிதிக்காக ஒதுக்கிட நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவு:  
வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுகட்டும் வகையில் செயல்படுத்தப்படும் பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த ரூ. 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு உரிய பங்களிப்புகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  
இந்த நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், மார்ச் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘இயற்கை சீற்றங்களால் விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளிலிருந்தும், அதனால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையிலிருந்தும், விவசாயிகளை பாதுகாக்க ‘பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்’ என்ற புதிய மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தை 2016 முதல் தமிழக அரசு செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 2016–17ல் பயிர் காப்பீடு பெற 15.20 லட்சம் விவசாயிகள், 30.33 லட்சம் ஏக்கர் பயன் பெறும் வகையில் பதிவு செய்தனர். இதற்கு காப்பீட்டு மானியமாக தமிழக அரசு ரூ. 487.33 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது. இந்த நிதியாண்டில் கூடுதல் விவசாயிகளை பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வசதியாக காப்பீட்டு மானியத்துக்கு ரூ. 522.70 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவித்தார்.  

இதன் அடிப்படையில் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பயிர் மற்றும் தென்னை காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி இந்த நிதியாண்டில் செயல்படுத்தவும், ஒருங்கிணைந்த குழு காப்பீட்டு திட்டத்தை முன்னோடி திட்டமாக இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்படும் கடலுார், நாகை மாவட்டங்களில் செயல்படுத்தவும் அனுமதி கேட்டு அரசுக்கு, வேளாண் துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.  

இந்த திட்டத்தின் கீழ் 23.90 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்றும், திட்டத்தை செயல்படுத்த இந்த நிதியாண்டுக்கு ரூ. 522.70 கோடி நிதி ஒதுக்க கேட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். வேளாண் துறை இயக்குனரின் பரிந்துரையை ஏற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் தோட்டக்கலை பயிர்களுக்கு சென்னை நீங்கலாக காப்பீடு செய்ய ரூ. 9.50 கோடி உட்பட மொத்தம் ரூ. 522.70 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிடப்படுகிறது.  

இவ்வாறு ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.