திண்ணை 28–5–17

பதிவு செய்த நாள் : 28 மே 2017

வேற்றுமையில் ஒற்றுமை!

பரந்து விரிந்து நிற்கும் ஜனநாயக நாடு நம் இந்திய தேசம். இந்தியாவிற்கு ஒரு பாரம்பரிய பெருமை உண்டு. பல மொழிகள், பலதரப்பட்ட மக்கள், வந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஜனநாயக நாடு நம் நாடு. இதற்கு காரணம் தொன்று தொட்டே இந்தியப் பெருநாட்டின் ஒற்றுமைக்காக இதிகாசம், புராணகாலத்திலிருந்தே இது விதைக்கப்பட்டது. நாம் உலக அளவில் பேசப்பட காரணம் நம் நாட்டின் ஆன்மிகம், தொன்மை கலாசாரம் தான். அந்த வகையில் நீங்கள் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் நம் புராண தெய்வமாகக் கருதப்படும் ராமரை தனித்துப்பார்க்க முடியாது. ராமர் கோயில் என்றாலே, அங்கு சீதா, ராமர், லட்சுமணர், அனுமார் என்று குரூப்பாகத்தான் ராமர் இருப்பார். அந்த வகையில் வேற்றுமையிலும் ஒற்றுமையை கடைப்பிடிப்பது ராமதத்துவம். வட இந்திய கடவுள், ராமர். ஆனால் அவர் தென்னிந்தியா வரை வந்து ராமேஸ்வரம் தலத்தில் சிவனை வணங்கினார். இதனால் வட இந்திய மக்கள் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரையாக இங்கு வந்து செல்கிறார்கள். தென்னிந்திய மக்களுக்கோ காசியில் சிவனை தரிசிப்பது புண்ணியம் என்று காசிக்கு செல்கிறார்கள். இப்படி வேற்றுமையில் ஒற்றுமையை கண்டது நம் இந்திய திருநாடு. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் ஐவராக இருந்தாலும் கர்ணனோடு சேர்ந்து ஆறு பேரானார்கள். இருந்தாலும் பஞ்சபாண்டவரை வழி நடத்த ஆங்கோர் கிருஷ்ணர் இருந்தார். பகவான் கிருஷ்ணரின் பக்கபலமே பாண்டவரின் வெற்றிக்கு வழிவகுத்தது. ராமாயணத்தில் ராமசகோதரர்கள் நால்வர்தான். குகனோடு சேர்ந்து ஐவரானார்கள். சுக்ரீவன், விபீடணனுடன் சேர்ந்து ராமரின் பலம் பெருகியது. பிரிந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இப்படித்தான் ஒரு ராஜா தன் குடிமக்களிடம் அபரிமிதமாக வரிச்சுமைகளை ஏற்றி மக்களை அவதிப்பட வைத்தான். மன்னரிடம் நியாயத்தை எடுத்துச்சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. அதையும் மீறி மந்திரி பிரதானிகள் தயக்கத்துடன் கூறினால், மன்னன் உடனே "நாட்டின் பாதுகாப்புக்கான பணிகள் நடக்கிறது. மக்களுக்கு அத்தியாவசியத்தேவைக்குரிய தண்ணீர் வசதி பெருக குளம், ஆறு வெட்டுகிறோம், சாலை போக்குவரத்தை உடனடியாக சீர்படுத்தினால்தான் மக்கள் போக்குவரத்து சிரமமின்றி வாழ முடியும்" என்று சொல்லி அவர்களை வாயடைத்து விடுவார். மன்னரிடம் தைரியமாகவும் அவர் புரிந்து கொள்ளும் வகையிலும் பேசுவதற்கு மன்னர் மதிக்கும் புலவரை நாடினார்கள். புலவரும் மக்களின் நிலை உணர்ந்து மன்னரிடம் பேச ஒப்புக்கொண்டார். மன்னரை சந்தித்து அவர் மனம் மகிழும் வகையில் நல்ல பாடல்களை பாடினார். மன்னர் சந்தோஷமாக பேசிய சமயம் புலவர் மன்னரிடம் ஒரு கேள்வி கேட்டார். "மன்னா... ஒரு யானை திருப்தியாக உணவு உண்ண என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். உடனே மன்னன் "யானைக்கு விருப்பமான தீனியை கொடுக்க வேண்டும்" என்று சொல்ல "மன்னா... யானை நன்கு முற்றியக் கதிர்கள் நிறைந்த வயலுக்குள் தன்னிச்சையாக விட்டு மேயவிட்டால் அது இஷ்டம் போல் வயலுக்குள் நடந்து சென்று அது உண்டால், அதிகமான அளவில் நெல் மணிகளும் பயிர்களும் அதன் காலடியில் நைந்து வீணாகிப்போகும். அதே போல் கரும்புத்தோட்டம், வாழைத்தோப்பில் யானை புகுந்தால் துவம்சம்தான். அப்படி வீணாகாமல் அதன் தேவைக்கு ஏற்ப அளவோடு நாம் பறித்து வீணாகாமல் யானையின் பசியைப் போக்கலாம். யானையும் திருப்தியாக உண்ணும்" என்று சொன்னார். மன்னனும் புலவரின் கருத்தை ஆமோதித்துப் பாராட்டினான். அப்போது புலவர் மன்னன் மக்கள் நலனுக்காக செய்யும் பணிகளுக்கு மக்களை இம்சித்து அதிக அளவில் வரி வசூலிப்பது யானையை வயலுக்குள் விட்டு அதன் போக்கில் உணவை உண்டு வயிற்றை நிரப்பும் கதைதான் என்று சொல்ல, மன்னருக்கு புலவரின் கருத்து புரிந்தது. புலவர் உடனே "மன்னா... மக்களுக்கு நன்மை செய்வதற்காக மறைமுகமாக அவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது போல்தான் தங்கள் வரி வசூலிக்கும் முறை உள்ளது. அதை மறு பரிசீலனை செய்து மக்கள் சிரமத்தை குறைத்து பலனைப் பெருக்குங்கள்" என்று சொன்னார். மன்னரும் அதை ஏற்றுக் கொண்டு மந்திரிகளிடம்

"வரி வசூலிக்கும் முறையில் புதிய மாற்றம் ஏற்படுத்துங்கள்" என்று உத்தரவிட்டான். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருவள்ளுவர் சொன்ன கருத்து

எவ்வளவு சிறப்பானது என்று புரியும். புரிதல் இருந்தால் வேற்றுமையிலும் நம்மால் ஒற்றுமையுடன் சிறப்பாக வாழ முடியும்.

* * *

ராமருக்கு தேனும் மீனும் தந்த குகன்!

 தீவிர பக்தி, முழுமையான ஈடுபாடு, ஆத்மார்த்தமான நட்பு. இவை செயல்பாடுகளில் சிறப்பு சேர்க்கும். அதுமட்டுமல்ல வெற்றிக்கும் வழிவகுக்கும். இதைத்தான் கவிஞரின் அற்புதமான பாடல்வரிகள் குறிப்பிடும். நெஞ்சில் ஒரு களங்கமில்லை. சொல்லில் ஒரு பொய்யுமில்லை. வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை என்று ஆத்மார்த்தமான அன்பில் குறை இருந்தாலும் அது நிறைவாகவே தோன்றும். ஏனெனில் புறத்தோற்றம் சிப்பியாக இருந்தாலும் உள்ளுக்குள் இருப்பது முத்து. இதை மனதில் கொள்ள வேண்டும். அதுவே நம்மை வெற்றி பெற வழிநடத்தும். இதற்கு ராமாயணத்தில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவத்தை கூறலாம். ராமர், சீதை, லட்சுமணன் பின் தொடர அயோத்தியை விட்டு வெளியேறி கங்கைக் கரைப்பகுதியில் உள்ள வனத்திற்கு வருகிறார். அங்கிருக்கும் முனிவர்கள் அவரை உபசரித்து ஒரு பர்ணசாலையில் தங்க வைக்கின்றனர். ராமரோ கங்கையை கடந்து செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அங்கு தங்கிச் செல்வதாக முனிவர்களிடம் கூறுகிறார். ராமர் வந்திருக்கும் செய்தியை அறிந்த கங்கைக்கரையில் இருக்கும் சிருங்கிபேரம் பகுதியின் தலைவனான குகன், ராமரை தரிசிக்க விரும்புகிறான். ஆயிரம் படகுகளுக்குத் தலைவனான குகன் ராமரைக் காண தன் படைப்பட்டாளத்துடன் கிளம்புகிறான்.

அவன் கங்கைக் கரையில் நீண்ட காலமாகப் படகோட்டி வாழ்பவன். சிறந்த வில்லாளி. வேட்டை நாய்களை உடையவன். பெருத்த, கருத்த சரீரம். கணத்த மீசை, பெரும் சேனைக்குத் தலைவன். எப்போதும் இறைச்சியும், மீனும் தின்று தின்று வாய் புலால் நாற்றமடிக்கும். அப்படிப்பட்ட கொடிய தோற்றமுடைய அந்த படகோட்டி குகன், தன் கைகளிலே தேன் நிறைந்த குடுவைகளையும், சமைத்த சுவையுள்ள மீன்களையும், எடுத்துக்கொண்டு ராமரை தரிசிக்க வந்தான். உடன் வந்த சுற்றத்தாரை வெளியே நிறுத்திவிட்டு தனது இடைவாளை கழற்றி வைத்துவிட்டு பவ்யமாக பயபக்தியுடன் ராமர் இருந்த பர்ணசாலைக்கு முன் வாயிலில் வந்து நின்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தான். "இறைவா... என் தெய்வமே... தங்களைக் காண நன்றியுள்ள நாய் வந்திருக்கிறேன். தரிசனம் தர வேண்டும்" என்று சொல்லி முடிக்க வாயிலுக்கு வந்த லட்சுமணன் "நீ யார்... எதற்கு வந்தாய்?" என்று கேட்க, "அரசே... நாயினும் கீழானவன் நான்... கங்கையில் ஓடம் விட்டு பிழைப்பவன். என் பெயர் குகன். தாங்கள் தொழும் ராமபிரானின் பாதங்களை தரிசிக்க வந்தேன்" என்று சொல்ல... "அப்படியா? இங்கே இரு. இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற லட்சுமணன் ராமரிடம் "தோற்றத்தில் கடுமையாக இருந்தாலும் துாய உள்ளத்தவன் தாயினும் அன்பு கொண்டவன் பண்பில் உயர்ந்த குகன், கங்கையில் ஓடம் விடும் வேடன். தங்களைக் காண தன் சுற்றத்தாருடன் வந்திருக்கிறான்." என்று கூற ராமர் மகிழ்ந்து "சிறந்த வில்லாளி.... படகு ஓட்டுவதில் கை தேர்ந்தவன்..

நமது நாட்டின் எல்லைப்பகுதியை எதிரிகள் தொட்டு விடாமல் இருக்க அவனது தந்தை காலத்தில் இருந்தே கங்கை கரைப்பகுதியில் அரணாக நின்று பாதுகாப்பவர்கள். சிறுவயதில் கங்கை நதியில் எதிரிப்படைகளை எதிர்த்து போரிட்ட சமயம் பார்த்தது. நல்ல நண்பன்.. அழைத்து வா காண வேண்டும்" என்று கூறினார். லட்சுமணன் குகனை அழைத்து வர குகன் ராமரை கண்டு மெய்சிலிர்த்து நின்றான். அவனது சிவந்த கண்களில் அன்பு தெரிந்தது. அருள் கொஞ்சும் ராமரின் முகம் பார்த்து மன மகிழ்ந்த குகன். அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினான். பின் எழுந்து வாயை பொத்தி பணிவுடன் நின்றான். பணிவுடன் நின்ற குகனைப் பார்த்த ராமர், "குகனே.... உன் வரவால் மனம் மகிழ்ந்தோம். நலமா.. எங்கே உன் சுற்றத்தார் அவர்களையும் வரச்சொல்" என்றார். உடனே குகன் "தேவரீர்... தாங்கள் நீண்ட துhரம் பயணப்பட்டு வந்திருக்கிறீர்கள். தங்களுக்காக இனிய கொம்புத் தேனும், சமைத்த சுவையுள்ள மீனும், கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் அன்பு காணிக்கை ஏற்றுக்கொண்டு தாங்கள் பசியாற்ற வேண்டும்" என்று குகன் கூறிய அந்தக் கணத்தில் ராமருக்கு காளத்தி நாதருக்கு வேடன் கண்ணப்பன் பன்றி மாமிசத்தை அன்புடன் கொடுத்து புசிக்கச் சொன்னது சிவனின் கண்களில் ரத்தம் வடிவதைப் பார்த்து தன் கண்களை தோண்டி சிவனுக்கு வைத்த அந்த ஆத்மார்த்த அன்பு, குகனிடம் தெரிந்தது. மீண்டும் குகன் ராமரிடம் "இனிமையான கொம்புத்தேனும், சுவையுள்ள சமைத்த மீனும், உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். தேவரீர் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூற ராமர், அருகில் இருந்த வயது முதிர்ந்த முனிவரிடம் "தோற்றத்திற்கும் பேச்சுக்கும் உள்ள மாற்றத்தை பாருங்கள் முனிவரே தீவிர அன்பு" என்று கூறிவிட்டு, குகனிடம் "என்பால் கொண்ட உன் அன்பு என்னை மகிழ்விக்கிறது. ஆத்மார்த்தமாக என் பசியாற நீ கொண்டு வந்திருக்கும் இந்த தேனும், மீனும் அமிர்தத்திற்கு இணையானது. அன்புடன் நீ அளித்த இந்த உணவை நான் விரும்பி ஏற்கிறேன். உள்ளன்புடன் நீ பசியாறக் கூறியதில் என் பசி அடங்கி, வயிறு நிறைந்தது போலாயிற்று. நீ கொண்டு வந்த பொருளை பற்றி சிந்திக்காமல் அவற்றை துhய உணவாகவே ஏற்கிறோம்" என்று கூறினார். பிறகு குகனிடம் "நாங்கள் இங்கு தங்கி நாளைக் கங்கையை கடக்க நினைத்துள்ளோம். ஆதலால் நீ சுற்றத்தாருடன் உன் படைகளை அழைத்துக் கொண்டு உன் வீட்டிற்கு போய் விட்டு நாளை விடியலில் மரக்கலத்துடன் வா.. எங்களை சேர்க்க" என்று கூறினார். "இந்த கானகத்தில் தங்களை தனியே விட்டு சொல்ல என் மனம் இடம் தராது.  

அய்யனே.. என் பரிவாரங்களுடன் இன்று இரவு தங்கள் பர்ண சாலை சுற்றி காவல் இருப்போம். நாளை தங்களை கங்கையின் அடுத்த கரை சேர்ப்பித்த பின்பே, நான் மீண்டும் என் இல்லம் செல்வேன்" என்று கூறினான். இந்த சம்பவத்தில் குகனின் ஆத்மார்த்தமான அன்பு முழு ஈடுபாடு வெளிப்படுகிறது. அதுதான் ராமரை ஈர்த்தது. நால்வருடன் சேர்த்து நீ ஐந்தாவது சகோதரன் என்று அன்புடன் அணைத்துக்கொண்டார் ராமர். அதுதான் குகனுக்கு கிடைத்த வெற்றி.

– ஹெச். வசந்தகுமார்