குல்பூஷன் ஜாதவ் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்

பதிவு செய்த நாள் : 24 மே 2017 10:28


புதுடில்லி:

  குல்பூஷன் ஜாதவ் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று  சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி இருக்கிறது.

       இந்தியக் கடற்படையை சேர்ந்த முன்னாள்  அதிகாரி குல்பூஷன் ஜாதவ்.  இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என்றும் கராச்சி குண்டுவெடிப்பில் தொடர்பு உடையவர் என்று குற்றம்சாட்டி அந்த நாட்டு உளவுத்துறையினர் கைது செய்தனர். இவருக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ நீதிபதி , குல்பூஷன் ஜாதவுக்கு கடந்த  ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

     ஜாதவ்  பயங்கரவாதி அல்ல என்றும் ஈரானுக்கு சென்றிருந்த அவரை கடந்த மார்ச் மாதம்  கடத்தி இது போன்ற பொய்வழக்கை போட்டுள்ளனர் என்றும் அவரை விடுவிக்குமாறும் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு செவிசாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.

     இதற்கிடையே கடந்த 18ம் தேதி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தும், அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும்  சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சர்வதேச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளது என்று தலைமை நீதிபதி ரோனி ஆபிரகாம் கூறி இருந்தார். சர்வதேச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவானது  பாகிஸ்தான் நடவடிக்கைக்கு பெருத்த அடியாக அமைந்தது. இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

       ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச நீதிமன்ற ரிஜிஸ்திராருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம்  இந்த கடிதத்தை எழுதி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்த வழக்கு விசாரணையை முடிக்க பாகிஸ்தான் விரும்புவதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது. வரும் நவம்பரில் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்தல் நடபெற இருக்கும் நிலையில் பாகிஸ்தான் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

    இருப்பினும்  இந்த வழக்கை அக்டோபர் மாதம் தான் சர்வதேச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க துவங்கும் என மூத்த அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தானோ அடுத்த 6 வாரங்களில் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

––––––––––––––––––––––––––