பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 28

பதிவு செய்த நாள் : 22 மே 2017

மோஹனாவின் அப்பா பேர் ரங்கமணி என்று தெரியும். ஒரு காலும் கையும் சூம்பினவர் என்று தெரியும். கடலூருக்குப் பக்கம் என்று தெரியும்... இவை போதுமா?

கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன்னால் ரங்கமணி கடலூர் பக்கத்தில் இருந்தார்... இப்போதும் இருப்பாரா? செத்துப்போயிருந்தால்? எங்கே என்று போய்த் தேடுவது? என்னவென்று சொல்லி விசாரிப்பது?

என்னவானாலும் சரி, முயற்சி பண்ணிப் பார்த்துவிடவேண்டியதுதான் என்று தோன்ற, மதியமே காரில் கடலூருக்குக் கிளம்பினார்கள்.

போஸ்ட் ஆபீஸ்களில் நிறுத்தி, மிராசுதார் ரங்கமணி என்ற அங்க அடையாளங்களைச் சொல்லி விசாரித்தார்கள். பக்கத்து கிராமங்களில் தெருத்தெருவாய் சுற்றினார்கள்.

ம்ஹூம், ஒரு விவரமும் கிடைக்கவில்லை.

அடுத்து என்ன?

டெல்லி சினேகிதிகள்...

அவர்கள் விலாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஆ... கிரிதரிடம் கேட்டால்?

வெட்கம் மானம் எல்லாம் பார்த்தால் இப்போது நடக்காது...

டெல்லி விலாசம் தெரியவேண்டுமானால், கிரிதரிடம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரிய, கடலூரிலிருந்து திரும்பிய அன்றே நேரே அவனைப் பார்க்கப் போனார்கள்.

"மோஹனா வீட்டைவிட்டுப் போய்விட்டாள்... டெல்லிக்குப் போயிருக்கலாமோ என்னவோ! அவளுடைய பழைய விலாசம் வேண்டும்..." என்று மொட்டையாகச் சொன்னார்கள்.

கிரி ஒரு ஜென்டில்மேன்தான்... என்ன ஏது என்று துருவவில்லை. டெல்லி விலாசத்தைச் சொன்னதுமல்லாமல், பரத்தும் ஷ்யாமும் புறப்பட்டபோது, "விஷயம் என் மூலமாய் யாருக்கும் போகாது... ப்ளீஸ், கவலைப்படாதீங்கோ..." என்றும் சொன்னான்.

டெல்லிக்குக் கிளம்புமுன், இனியும் அம்மாவிடமிருந்து உண்மையை மறைக்கக் கூடாது என்று நினைத்த பரத், அன்றிரவு, அதாவது மோஹனா ஓடிப்போன மூன்றாம் நாள் இரவு, "நா சத்தியத்தை மீறி குடிச்சுட்டேங்கற கோவத்துல, மோஹனா குழந்தையோட வீட்டை விட்டுப் போயிட்டாம்மா... மூணு நாளா நா உன்கிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சுடு! டிரைவர் வந்து அவாளை ஸ்டேஷன்ல விட்டேன்னு சொன்னப்பறம், ஷ்யாமோட ஸ்டேஷனையும் மெட்றாஸையும் சலிச்சுப் பாத்துட்டேன்... நாளைக்குக்கூட அவாளைத் தேடிண்டு டெல்லிக்குப் போறதாயிருக்கேன்... அதுக்கு முன்னால உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தோணித்தும்மா... சொல்லிட்டேன்..." நீட்டி முழக்கி விவரங்களைச் சொல்லாமல், அம்மாவுக்குத் தெரியவேண்டியதை மட்டும் கூறினான் பரத்.

கண்களில் நீர் ததும்ப மகன் பேசியதை நம்பமுடியாதவள்போல, ஜெயம்மா சுவரில் சாய்ந்துகொண்டாள்.

நெஞ்சில் கையை வைத்து அழுத்திக்கொண்டாள். 'முருகா, முருகா' என்று முணுமுணுத்தாள். மாலைமாலையாய் கண்ணீர் வழிய, "உடனே பேப்பர்ல விளம்பரம் குடுக்கறதுதானே, பரத்? தெரியாம குடிச்சுட்டேன், இனிமே சத்தியமா அப்படி நடக்காதுன்னு குடுக்கறதுதானேப்பா?" என்று தனக்குத் தோன்றியதைக் கேட்டாள்.

பரத் முடியாது என்று தலையாட்டினான்.

"அந்த மாதிரி பகிரங்கப்படுத்தினா, ஏடாகூடமா ஏதாவது செஞ்சுப்பேன்னு லெட்டர் எழுதிவெச்சுட்டுப் போயிருக்காம்மா..."

நிஜமாகவா? மோஹனாவா? லெட்டர் எழுதிவைத்துவிட்டுப் போய்விட்டாளா? கடவுளே! நல்ல பெண் என்ற நம்பியவள், மாபாரமாய் தலையில் கல்லைப் போட்டு விட்டாளே!

இப்போது என்ன பண்ணுவேன்!

நளினி போன பிறகு அஸ்தமித்த வாழ்க்கை, இந்தப் பெண்ணால் புனர்ஜென்மம் பெற்றுவிட்டது என்று சந்தோஷப்பட்டதெல்லாம் வீண்தானா?

பூஜையறைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு ஆயிரம் யோசனை செய்த நிமிஷங்களில், இனி மகனுக்கு ஆறுதலாய் இருப்பதுதான் என் கடமை என்று தோன்றியிருக்கவேண்டும்... நொந்துபோயிருக்கும் பிள்ளைக்கு இனி நான்தான் சகலமும் என்று நினைத்திருக்கவேண்டும்... ஜெயம்மா கல்லாய்த் தன்னை இறுக்கிக்கொண்டு விட்டாள்.

இந்த இரண்டு மாசத்தில் பரத் எதிரில் இப்படி கண்ணால் ஜலம் விட்டு ஜெயம்மா விசும்புவது இதுதான் இரண்டாம் முறை.

அம்மாவும் பிள்ளையும் பரிதவிப்பதை, ஏதோ சிட்டுக்குருவி காதில் வந்து சொன்ன மாதிரி அன்று மதியம் பரத் ஆபீஸுக்கு மோஹனா போன் செய்தாள்.

பைலைப் படிக்க முயற்சி பண்ணிய பரத்தின் கவனம், டெலிபோன் மணி ஓசையால் கலைந்தது.

"எஸ்?"

டெலிபோன் ஆபரேட்டர் பேசினாள். "உங்களுக்குத்தான் சார்..."

"யார் அது?"

"பேர் சொல்ல மாட்டேங்கறாங்க... கனெக்ஷன் குடுக்கட்டுமா?"

"ம்... ஹலோ... பரத் ஹியர்..."

"ஹலோ..." என்றது ஒரு பெண்ணின் மென்மையான குரல், பதிலுக்கு.

பரத் கையில் பிடித்திருந்த ரிஸீவர் தடக்கென்று நழுவியது.

மோஹனாவா?

இவள் குரலை ஆபரேட்டரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையா?

"யாருன்னு புரியலையா? நான்தான் மோனா..."

மோனாவா? மோஹனா என்று சொல்லாமல் மோனா என்ன, மோனா?

இப்படி என்னை ஹிம்சிப்பதில் இவளுக்கு எத்தனை சுகம்!

சுர்ரென்று கோபம் எழுந்ததில், மோஹனா போன் செய்தால் இதமாய்ப் பேசி வீட்டுக்கு வரவழைப்பதில் குறியாக இருக்கவேண்டும், தாஜா செய்து பக்குவமாய்ப் பேசி அவள் இருப்பிடத்தை அறிந்துகொண்டுவிட வேண்டும் என்று தனக்குத்தானே யோசித்து வைத்திருந்த முடிவு காற்றில் பறக்க, "மை காட்! உன் திமிர் உன்னை விட்டு இன்னும் போகலையா!" என்றான் அடிக்குரலில்.

"கூடப்பிறந்ததாச்சே... போறது கஷ்டம்தான்!"

எதையும் ஒருவித அலட்சியத்துடன் எடுத்துக்கொள்ளும் அதே மனப்பான்மை... அவள் துளிக்கூட மாறவில்லை.

"போவேண்டாம்... கெட்டியா பிடிச்சுவெச்சுக்கோ! உன்னோட என்ன பேச்சு... என் ஸந்த்யா எங்க? நீ எங்கேந்து பேசறே? அதைச் சொல்லு முதல்ல..."

"எங்களைப் பாக்கறது அத்தனை சுலபமில்ல, பரத்... இது எஸ்.டீ.டி. கால்..."

டைரக்ட் டயலிங் செய்து பேசுகிறாளா? அப்படியென்றால், எந்த ஊரிலிருந்து?

"உன்னோடு என்ன பேச்சுன்னு நீங்க சொன்னப்பறமும் நா பேசிண்டிருக்கறது சரியில்ல... நா இன்னிக்கு போன் பண்ணதுக்கு முக்கியக் காரணம், ஸந்த்யா பிறந்த நாளை நாங்க மறக்கலைன்னு சொல்றதுக்குதான்..."

"நா... நாங்கன்னா யாரு?"

"ஸாரி, பரத்... சொல்றதுக்கில்ல..."

பரத்துள் வக்ரம் தலைவிரித்து ஆடியது.

"ரெண்டு மாசத்துக்குள்ள ஒரு ஆளைப் பிடிச்சுட்டியா? நாட் பேட்! என்னோட இருந்தா நா ஒருத்தன்தான்... இப்ப ஆயிரம் பேர்! ரைட்?"

பரத் பேசின பேச்சுக்களை ஜீரணம் பண்ணுகிற தினுசில் மோஹனா அரை நிமிஷம் மெளனமாய் இருந்தாள். பிறகு நிதானமாய்ப் பேசினாள். "நா தப்புப் பண்ணிட்டேன், பரத்... இந்த ரெண்டு மாசத்துல நீங்க மாறியிருப்பேள்னு நா தப்புக்கணக்குப் போட்டுட்டேன்... கஷ்டப்பட்டு இந்த போன் பண்ணினது, ஆபரேட்டருக்கு என் குரல் தெரியக்கூடாதுன்னு பிரயத்தனப்பட்டு குரலை மாத்திப் பேசினது, எல்லாம் வேஸ்ட்! நீங்க மாறவேயில்ல... அதனால, நானும் மாறப்போறதில்லை! பை... பை..."

அடுத்த கணம் டெலிபோன் தொடர்பு விட்டுப்போய் செத்துப்போனது.

கண்களை விரித்து, மோஹனா தன்னோடு பேசியதை நம்பமுடியாத தினுசில் விழித்த பரத்துக்கு, திடுமென்று கோபம்கோபமாய் வந்தது.

நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டேனே! நான் ஒரு முட்டாள்!

இதமாக அன்பாகப் பேசி வீட்டுக்கு அவளையும் குழந்தையையும் வரவழைக்கும் வழியைப் பார்க்காமல், எதற்காக இடக்காகப் பேசினேன்?

எங்கேயிருந்து பேசுகிறாள், என்ன நம்பர் என்ற விவரங்களையாவது தெரிந்து கொண்டிருந்தால், இவள் இங்கு வராவிட்டாலும், குழந்தையையாவது எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமே...

நான் ஒரு மடையன்... மகா மடையன்!

ஒரு நிமிஷம்கூட என் கோபதாபங்களை மூட்டைகட்டிவைக்க முடியாதா?

அதென்ன அவ்வளவு ரோஷம்!

மோஹனா மூலம் உண்டான காயம் இன்னும் ரணகளமாகவே இருப்பதால்தான், இப்படி அவசரப்பட்டுப் பேசிவிட்டேனோ?

மேற்கொண்டு ஆபீஸில் உட்கார பரத்துக்கு விருப்பமில்லை.

ரமணன் அறையில் யாருமில்லை என்பதைத் தெரிந்துகொண்டு அவரைப் பார்க்கப் போனான்.

"கம் இன், பரத்... ஸிட் டவுன்..."

நாற்காலியில் அமர்ந்த பரத்தின் முகம் நன்றாக இல்லாததை ரமணனால் தெரிந்துகொள்ள முடிந்தது.

"என்ன பரத், ஏதாவது பிரச்சினையா?"

"ஜுரம் வர்ற மாதிரி இருக்கு, சார்... வீட்டுக்குப் போலாமான்னு பாக்கறேன்..."

ரமணனின் கண்களைக் கவலை லேசாய் இடுங்கவைத்தது.

"மோஹனா ஊருக்குப் போனதுலேந்து நீ தெம்பாவே இல்லேன்னு எனக்குத் தோண்றது... அவளைப் பிரிஞ்சிருக்கறது அத்தனை கஷ்டமாயிருந்தா, வரச்சொல்லி போன் பண்ணிடவேண்டியதுதானே, பரத்? ஏன் வீணா அவஸ்தைப்படறே? ம்? ஓகே, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ..."

ஒரு தகப்பனின் அன்புடன் ரமணன் பேசியதற்குத் தலையை ஆட்டிக்கொண்டே எழுந்து வெளியில் வந்து காரில் ஏறியவன், டிரைவரிடம், "ஷ்யாம் சார் ஆபீஸுக்குப் போ..." என்று சொல்லிவிட்டு, சீட்டில் சாய்ந்துகொண்டான்.

மோஹனா ஓடிப்போன மூன்றாம் நாள் அம்மாவிடம் உண்மையைப் போட்டு உடைத்த பிறகு, தான் டெல்லிக்குப் போனது, கிரிதர் கொடுத்த கனாட் ப்ளேஸ் விலாசத்தைத் தேடிக் கண்டுபிடித்தது, 'மில்க் அண்ட் ஷுகர் குக்கரி க்ளாஸ்' என்ற போர்டு அங்கு தொங்கினது, கதவைத் தட்டினதும் தலைநரைத்த இரண்டு பெண்மணிகள் ஹிந்தியில் 'கோன் ஹை?' என்றது, அப்புறம் அந்த விலாசத்தில் ப்ரதீமா, ஷர்மிளா என்று யாருமில்லை என்று சொன்னது, எதுவும் புரிபடாமல் சென்னைக்கு வந்தது, அன்றிரவு அம்மா, ஷ்யாமோடு ரொம்ப நேரத்துக்குக் கலந்தாலோசித்தது... எல்லாம் சினிமாக் காட்சிகளாய் கண்முன் விரிந்தன.

"விளையாட்டுப் போல ஒரு வாரம் ஆயிடுத்து... எங்க இருக்கா, என்ன பண்றானு ஒரு விவரமும் தெரியலை! சுத்தியிருக்கறவா, மோஹனா எங்க, ஸந்த்யா எங்கனு கேக்க ஆரம்பிச்சுட்டா... இனிமேயும் எதையாவது அசட்டுத்தனமா சொல்லி சமாளிக்க முடியாது... எல்லாரும் நம்பற தினுசுல ஒரு காரணத்தைச் சொல்லணும்... என் மானம் கப்பலேறாம இருக்கணும்னா, உடனடியா நன்னா யோசனை பண்ணி எதையாவது சொல்லியாகணும்..."

பேசிமுடிப்பதற்குள் பரத்தின் குரல் செம்மிப்போனதும், உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது என்று உதட்டை அவன் அழுந்த கடித்துக்கொள்வதும் மற்ற இருவருக்கும் புரிந்தது.

தெளிவாய் யோசனை பண்ணி ஒரு வழியைச் சொன்னது ஷ்யாம்தான்.

"சிங்கப்பூர்லேந்து போன் வந்தது... நளினியோட அப்பா அம்மா, குழந்தையப் பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க... என்னால ஆபீஸ் வேலைய விட்டுட்டு திடும்னு போக முடியாததால, மோஹனா குழந்தைய எடுத்துகிட்டுப் போயிருக்காங்கனு சொன்னா...? ஒரு மாசம் ஆகும் திரும்பவரனு சொன்னா...?"

"ஒரு மாசத்துல மோஹனா திரும்பி வரணுமே... அதுக்கு என்ன பண்றது, ஷ்யாம்?"

"ஒரு மாசம் கழிச்சு அதைப் பாத்துக்கலாம்... இன்னொரு மாசம் அங்க இருக்கப் போறாங்கன்னு சொல்லிட்டாப்போச்சு! இப்படியே ரெண்டு மூணு மாசத்தைக் கடத்திட்டா, அதுக்குள்ள மோஹனாவைக் கண்டுபிடிக்காமயா இருந்துடுவோம்! என்னம்மா நா சொல்றது?"

ஜெயம்மா ஜடமாய் உட்கார்ந்திருந்தாள்... என் பிள்ளையின் நிம்மதிதான் எனக்கு முக்கியம், நீங்கள் இரண்டு பேருமாய் எது சொன்னாலும் அது எனக்குச் சம்மதம்தான் என்பதுபோல.

முடிவு செய்த தினுசில் பரத் இதையே ஆபீஸில் சொன்னான்.

"அதென்னப்பா திடீர் சிங்கப்பூர் பயணம்? இப்பத்தான் உங்களுக்குக் கல்யாணம் ஆயிருக்கு... அதுக்குள்ள ஒரு மாசப் பிரிவா? நீயும் வேணா பத்து நாள் போயிட்டு வரியா?"

"வேண்டாம், சார்... மோஹனா போறது போதும்... என் மாமனார் மாமியாரோட எனக்கு ரொம்ப பழக்கமில்ல..."

நளினியின் பெற்றோர், ஸந்த்யாவைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். தான் போய் மாட்டிக்கொள்ளாமல், மோஹனாவை அனுப்புவதன் மூலம், அவர்கள் இழந்த மகளை மோஹனாவில் பார்க்கலாம்...

ரமணன் சமாதானமடைந்துவிட்டார்.

சுலபமாய் ஆபீஸ்காரர்களை, நண்பர்களைச் சரிக்கட்டின தினுசில், ஜெயம்மாவால் வீட்டு ஆட்களையும் உறவுக்காரர்களையும் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

தலைக்குத் தலை நூறு கேள்விகள் கேட்டார்கள்.

முடிந்தவரை இயல்பாக பதில் சொன்ன ஜெயம்மா, எதுவும் முடியாமல்போகும்போது, பூஜையறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டாள்... அவ்வளவுதான்.

சில நாட்கள் வரைக்கும் பொறுத்து கொண்டிருந்தவர்கள், மோஹனாவும் குழந்தையும் வரும் வழியாகக் காணாதபோது, 'பணக்கார வூட்ல என்ன நடக்குதுன்னு நமக்கு என்ன புரியுது! புருசன் பொஞ்சாதிக்கு என்ன தகராறோ! ஆரு கண்டது!' என்று வாயை ஒரு கையால் மூடி ரகசியமாய் கிசுகிசுத்தது, மேற்கொண்டு ஒரு மாசம் போவதற்குள் டிரைவர் மூலமாய் ஆபீஸுக்கும், இங்குமங்கும் பரவத் தொடங்கியது.

ஆரம்பத்தில், 'மோஹனா இல்லாம பரத் முகத்தைப் பார்க்கச் சகிக்கலை!' என்றும்...

'இளைச்சுத் துரும்பாப் போயிட்டார்!' என்றும்...

'கவலைப்படாதீங்க மிஸ்டர் பரத்... இங்க இருக்கற சிங்கப்பூர்தானே? ஒரு தந்தி அடிச்சா நாலு மணிநேரத்துல வந்துடப்போறாங்க!' என்றும் கேலிபண்ணிய சினேகிதர்கள், எல்லாவற்றுக்கும் பரத் ஒரு அசட்டுச் சிரிப்புடன் நிற்பதையும், நறுக்கெனறு எந்த பதிலையும் சொல்லாததையும், காதில் விழுந்த கிசுகிசுவுடன் முடிச்சுப்போட்ட பிறகு, கொஞ்சம்  கொஞ்சமாய் வாயடைத்துப் போனார்கள்.

இப்போதுகூட, 'மோஹனாவை வரவழைச்சுடு, பரத்...' என்று ரமணன் சொன்னபோதுகூட, அவர் குரலில் ஒருவித நம்பிக்கையின்மை இருப்பதை உணர முடிந்ததால், ஷ்யாமின் ஆபீஸை அடைந்து உள்ளே நுழைந்த பரத் மிகவும் நொந்திருந்தான்.

இவனைக் கண்டதும் ஷ்யாம் எழுந்து அருகில் வந்து தோளில் கையை வைத்து, "என்ன விஷயம்?" என்றான் மெள்ள.

"அவ போன் பண்ணா, ஷ்யாம்..."

"என்னது? யா... யாரு, மோஹனாவா?"

பரத் தலையசைத்தான்.

"என்னப்பா, இத்தனை ஆயாசத்தோட சொல்றே? குஷியா, சந்தோஷத்தோட சொல்லவேண்டிய சேதின்னா இது!"

பரத் எட்டி ஷ்யாமின் சிகரெட் கேஸிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். பெருமூச்சாக இழுத்து நுரையீரல்களைப் புகையால் நிரப்பிக்கொண்டான்.

மோஹனாவைப் பிரிந்த நாளாய், மதுவுக்குத் தம்பியாய் இந்தப் பழக்கம் பிறந்திருக்கிறது. ராத்திரியில் தனிமை ஆளை வறுத்தெடுக்கும்போது, தூக்கம் வராமல் குறுக்கும் நெடுக்கும் நடக்கும்போது, கண்டகண்ட சிந்தனைகள் நெஞ்சில் அலையும் போது, இந்த சிகரெட்டின் துணை இதமாய் இருக்கிறது... தெம்பாய் இருக்கிறது.

"அவ ஒண்ணுமே பேசலை, ஷ்யாம்... இன்னிக்கு ஸந்த்யா பிறந்தநாளை நாங்க மறக்கலைன்னு சொன்னா..."

"நாங்களா? அப்படீன்னா?"

"உனக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது... அதைக் கேட்டதுக்குதான் அவளுக்குக் கோவம் வந்துடுத்து! நீங்க மாறவேயில்லை, நா போன் பண்ணது தப்புனு போனை வெச்சுட்டா..."

"அரே ராம்!" ஷ்யாம் தலையில் கையை வைத்துக்கொணடு உட்கார்ந்துவிட்டான். "எங்கேயிருந்து பேசினாங்க?"

"தெரியாது... எஸ்.டீ.டி. கால்னு சொன்னா..."

"எஸ்.டீ.டி.யா? அப்ப, டெல்லி, பாம்பே, கல்கத்தா, பெங்களூர்னு எத்தனையோ ஊர் இருக்கே, பரத்?"

தெரியும் என்பதுபோலத் தலையை ஆட்டின பரத், "எனக்கு ஒரு ட்ரிங்க் வேணும் இப்ப..." என்றான் சின்னக் குரலில்.

மதுவா, இந்த மத்தியான நேரத்திலா - என்று ஷ்யாம் கண்களை விரிக்கவில்லை... கேள்விகளைக் கேட்கவில்லை. நண்பனின் வேதனை புரிந்த தினுசில், செக்ரட்டரியிடம் சொல்லிவிட்டு பரத்தோடு வீட்டுக்குப் போனான்.

இரண்டு பெக் உள்ளே போன பிறகு, பரத் புலம்பத் தொடங்கினான்.

"இனிமே இந்த நடத்தைகெட்டவளை நினைச்சு நா கலங்கித் தவிக்கப்போறதில்லை, ஏங்கப்போறதில்லை... நடக்கறது நடக்கட்டும்! என் நளினி போனதையே நா தாங்கிக்கலையா? இப்போ அது முடியாதா? இனிமே வேதனையே படப்போறதில்ல... நா முடிவு பண்ணிட்டேன்! கல்லா இறுகிப்போறதுதான் இனிமே எனக்கு நல்லது! எங்கம்மாவே தன்னைத் தேத்திண்டப்பறம், இவ எக்கேடு கெட்டா எனக்கென்ன! என் குழந்தை... என் ஸந்த்யா... அவளை மட்டும் நல்லபடியா என்கிட்ட

கடவுள் கொண்டு சேர்த்துட்டார்னா

போதும்! அதுக்காகத்தான் வேண்டிக்கறேன்... அந்தக் கேடுகெட்டவ எவனோட வேணும்னாலும் போகட்டும், எப்படி வேணும்னாலும் வாழட்டும்... எனக்குக் கவலையில்ல!"

மோஹனாவின்பால் பொங்கியெழுந்த ஆத்திரம் மனசைக் கசந்துபோக வைத்ததால், அவளை நினைத்த மாத்திரத்தில் பரத் வெகுண்டெழத் தொடங்கினான். மோஹனாவை வெறுத்தான். அவளைப் பற்றின பேச்சை வெறுத்தான். அவள் நினைப்பைக்கூட வெறுத்தான்.

அதனால், அடுத்து வந்த வருஷங்களில் அத்திபூத்த மாதிரி மோஹனா போன் மூலம் தொடர்புகொண்ட சமயங்கள், இருவருக்கும் கீரியும் பாம்புமாய் சம்பாஷணைகள் அமைய உதவினவே தவிர, உருப்படியாய் எந்தக் காரியத்தையும் சாதிக்கவேயில்லை.

 (தொடரும்)