சென்னையில் ரஜினியின் உருவப்பொம்மை எரிப்பு

பதிவு செய்த நாள் : 22 மே 2017 19:03


சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப்படை கட்சி சார்பில் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினிகாந்தின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்து வருகிறார். சென்ற வாரத்தில் அவர் ரசிகர்களுடன் பேசியபோது அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தமிழர் முன்னேற்றப்படை சார்பில் ரஜினியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கன்னடரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக, தமிழர் முன்னேற்றப் படையின்  நிறுவனத் தலைவர் வீரலட்சுமி, தமது ஆதரவாளர்களுடன், ரஜினியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தார்.

இதையடுத்து, ரஜினியின் வீட்டுக்கு வழக்கமாக இருக்கும் பாதுகாப்பை விட, கூடுதலாக சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர். பேரணியாக வரும் தமிழக முன்னேற்றப் படையினரை தடுக்க செம்மொழி பூங்கா அருகேயும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னி சாலை, கதீட்ரல் சாலை, போயஸ் சாலை உள்ளிட்ட ரஜினி இல்லத்துக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.