காஷ்மீர் பிரச்சினைக்கு பாஜ அரசு நிரந்தர தீர்வு காணும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

பதிவு செய்த நாள் : 22 மே 2017 02:44

பெல்லிங் (சிக்கிம்):

காஷ்மீர் பள்ளதாக்குப் பகுதிகளில் அசாதாரண சூழல் நீடித்து வரும் நிலைமையில், காஷ்மீர் பிரச்சினைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிரந்தர தீர்வு காணும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய-சீனா எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக சிக்கிம் மாநிலத்தில் அவர் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிக்கிமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. காஷ்மீர் மாநிலத்து மக்கள் நமது மக்கள். காஷ்மீர் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காணும்.

பாகிஸ்தான் உள்பட அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவைத் தான் இந்தியா விரும்புகிறது. புதிய அரசு அமைந்ததும் இந்தியா இதை தெரிவித்தது.

ஆனால், பாகிஸ்தானின் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீரில் பிரச்சினையை தூண்டி விட்டு இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் அணுகுமுறை மாறும் என்று நம்புவோம். பாகிஸ்தான் தன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால் நாம் அவர்களை மாற்ற வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒரு நாடு இன்னொரு நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதை சர்வதேச சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தோ-சீனா எல்லை மற்றும் இந்தோ-நேபாள் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.