பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவையை மே 23ல் துவங்குகிறது

பதிவு செய்த நாள் : 18 மே 2017 02:58

புதுடில்லி,

பேடிஎம் (Paytm) நிறுவனம், தன் கட்டண வங்கி (Payments bank) சேவையை இந்த மாதம் 23ம் தேதி துவங்குகிறது. ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்ததால் பல மாதங்களுக்குப் பின் இந்த வங்கி துவங்கப்படுகிறது.

மக்களுக்கு மொபைல் போன் மூலமாக ஆன்லைன் பணபரிமாற்ற சேவையை வழங்கி வரும் நிறுவனம் பேடிஎம். கடந்த நவம்பர் மாதம், 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை தொடர்ந்து பலர் ஆன்லைன் பண பறிமாற்றத்திற்கு மாறியதால் பேடிஎம் பிரபலமானது. தற்போது பேடிஎம் சேவையை சுமார் 22 கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பேடிஎம் நிறுவனம், சிறிய அளவிலான கட்டண வங்கி சேவையை துவங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. இதற்கான அனுமதியை பேடிஎம் உரிமையாளர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியதால் இந்த மாதம் 23ம் தேதி பேடிஎம் கட்டண வங்கி துவங்கப்படும் என்று பேடிஎம் அறிவித்துள்ளது.

இதுவரை பேடிஎம் சேவை பெறும் மக்களின் கணக்குகள் இந்த கட்டண வங்கிக்கு மாற்றப்படும். இதை விரும்பாதவர்கள் மே 23ம் தேதி முன்பே தகவல் அளித்தால், வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் அவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்று பேடிஎம் அறிவித்துள்ளது. ஆறு மாதத்திற்கு மேல் பேடிஎம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களின் கணக்கு அவர்களின் ஒப்புதல் பெற்ற பின் மாற்றப்படும் என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.

பேமெண்ட் வங்கி சிறிய அளவில் வங்கி சேவையைச் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த வங்கியில் அதிகபட்சமாக ஒரு லட்சம் மட்டுமே டெபாஸிட் செய்ய முடியும். மேலும் இத்தகைய வங்கியில் கடனுதவியோ கிரெடிட் கார்டுகளோ பெற முடியாது.

கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கும் வங்கி சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் சிறு நிதி வங்கிகள் மற்றும் கட்டண வங்கிகளை துவங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி சில வருடங்கள் முன் அறிவித்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் வங்கி சேவையை துவங்க 21 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது.

ஆனால் டெக் மகேந்திரா, சோழமண்டல முதலீட்டு நிறுவனம், ஐ.டி.எப்.சி வங்கி உட்பட 5 நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறின.

தற்போது ஏர்டெல் மற்றும் இந்திய அஞ்சல் துறை மட்டுமே பேமெண்ட் வங்கி சேவையைத் துவங்கியுள்ளன. பேடிஎம்-மை தொடர்ந்து ஆதித்யா பிர்லா ஐடியா நிறுவனத்தின் பேமெண்ட் வங்கி இந்த வருடம் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.