பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 27

பதிவு செய்த நாள் : 15 மே 2017ராத்திரி முழுவதும் தூங்காமல் அவஸ்தைப்பட்டுவிட்டு, விடிகிற நேரத்தில் லேசாய் கண்களை மூடின பரத், யாரோ உலுக்கி எழுப்பின மாதிரி விழித்துக்கொண்டான்.

அடிவயிற்றில் சொரேர் என்றது.

இன்றைக்கு ஸந்த்யாவின் பிறந்த நாள்!

முதல் வருஷத்தைத்தான் சரியாகக் கொண்டாடவில்லை. இந்த முறையாவது சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று மனசுக்குள் ஆயிரம் திட்டமிட்டு ஏங்கிய நாள்.

"நம்ப ஸந்த்யாவோட பர்த்டே அன்னிக்கு உங்க சினேகிதா குழந்தைகள் அத்தனை பேரையும் கூப்பிட்டு, வீட்டுல பார்ட்டி அது இதுன்னு தடபுடல் பண்ணிடணும், பரத்! தோட்டத்துல ஒரு ரங்கராட்டினம் வாடகைக்குப் போட்டுடலாம்... குழந்தைகள் ஆசைதீர சுத்தட்டும்! அப்பறம், இன்னிக்கு ஷ்யாம் வீட்டுல பாத்த மாதிரி, ஒரு செப்பிடு வித்தைக்காரனைக் கூப்பிட்டு அரைமணி வித்தை காட்டச் சொல்லணும்... குழந்தைகள் ரொம்ப ரசிப்பா! ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது நல்ல பரிசு வாங்கித் தரணும்... அப்பறம்..."

"ஹேய்... ஹோல்டான்! இன்னும் நாலு மாசம் இருக்கற பர்த்டேக்கு, இப்ப ப்ளான் பண்ணா என்ன அர்த்தம்?"

அன்றொரு நாள், ஷ்யாமின் குழந்தைக்குப் பிறந்தநாள் என்று போய்விட்டுத் திரும்பும்போது, காரில் ஸந்த்யாவை மடியில் அமர்த்திக்கொண்டு, கண்கள் பிரகாசமாய் ஜொலிக்கஜொலிக்க மோஹனா பேசிய பேச்சுக்கள்.

பேசிய வார்த்தைகள் எத்தனை! போட்ட திட்டங்கள் எத்தனை!

ரங்கராட்டினம் என்ன, செப்பிடு வித்தைக்காரன் என்ன...

அப்படி ஜோடித்துப் பேசிய குழந்தைக்கு, இன்றைக்குப் பிறந்த நாள் என்பதாவது அவளுக்கு நினைவிருக்குமா?

எங்கே இருக்கிறார்கள் அவர்கள்?

இரண்டு மாசமாய் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடுபவர்களின் பிடியில் அகப்படாமல், எங்கே ஒளிந்திருக்கிறார்கள்?

உயிரோடு இருக்கிறார்களா, இல்லை...?

பரத்தின் உடம்பு லேசாய் நடுங்கியது.

போர்வையை உதறித் தள்ளிவிட்டு பால்கனிக்குப் போனான்.

வானத்தில் சூரியன் இன்னும் விளக்குப் போடவில்லை.

அரைகுறை இருட்டு... காற்றில் கலந்திருந்த பனிச்சாரல்...

குட்டைச் சுவரில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டான்.

என் குழந்தை எங்கே? என் ஸந்த்யா எங்கே?

என்னோடு வாழ இஷ்டமில்லாதவள், எங்கு வேண்டுமானாலும் போகட்டும், எப்படி வேண்டுமானாலும் வாழட்டும்... ஆனால், என் ஸந்த்யாவை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடட்டும்... ஸந்த்யா... என் ஸந்த்யா...

எத்தனை அலைச்சல்! எத்தனை வேதனை!

ஒன்றிற்காவது கடுகத்தனைகூடப் பலனில்லையே!

மோஹனா வீட்டைவிட்டுப் போன தினத்துக்கு அடுத்த நாள் காலையே, பேசிக்கொண்ட தினுசில் பரத்தும் ஷ்யாமும் கமிஷனரைச் சந்தித்தனர்.

பரத்துக்கும் மோஹனாவுக்கும் இடையே நடந்த சம்பாஷணை, அவள் லெட்டர் ஆகியவற்றைப்பற்றிச் சொல்லவோ காட்டவோ அவசியமில்லை என்று கருதி, தேவையான விவரங்களை மட்டும் ஷ்யாம் கூறினான்.

"குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு குடிச்சதுல கோவம்னு நினைக்கறோம்... என்ன ஏதுன்னு விவரம் சரியா புரியலை... ஆனந்த்கிட்டயிருந்து முப்பதாயிரம் பணத்தை வாங்கிக்கிட்டு, குழந்தையோட நிமிஷத்துல காணாமப்போயிட்டாங்க! இன்னும் இவங்க அம்மாவுக்குக்கூட விஷயம் தெரியாது! மூணாம் மனுஷருக்குத் தெரியாம இவங்களைக் கண்டுபிடிக்கறது முக்கியம்... குடும்ப மானம், பரத்தோட எதிர்காலம்னு எல்லாத்தையும் நினைச்சுப்பாக்க வேண்டியிருக்கு... நீங்க புரிஞ்சுக்கணும், ப்ளீஸ்..."

கமிஷனர் புரிந்துகொண்டார். ஷ்யாம் குடும்பத்தோடு பல ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டவர் என்ற காரணத்தால், தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக வாக்குக் கொடுத்தார்.

தேவையான கேள்விகளைக் கேட்டார்... நிறைய யோசித்தார்...

மோஹனா, ஸந்த்யாவின் படங்களைக் கொண்டுவந்து கொடுத்தால், மஃப்டி போலீஸை விட்டுத் தீவிரமாய் தேடச் சொல்வதாகச் சொன்னார். ஆனந்திடம் முப்பதாயிரம் பணம் வாங்கிக்கொண்டவள், கண்டிப்பாய் வெளியூருக்குப் போகும் எண்ணத்தில்தான் இருப்பாள் என்பதால், ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாப்களில் ஆட்களைத் தொடர்ந்து சில நாட்களுக்கு நிறுத்திக் கண்காணிப்பதாகச் சொன்னார்.

"அவங்க ஏற்கனவே ஊரைவிட்டுப் போயிருந்தா, என்ன பண்றது, சார்?"

"ம்? அப்ப கஷ்டம்தான்... அவங்களோட உறவுக்காரங்க, சினேகிதங்களை நீங்க காண்டாக்ட் பண்ணி, சந்தேகம் வராதபடி விசாரிச்சுப் பாருங்களேன்..."

"மோஹனாவுக்கு, எங்களுக்குத் தெரிஞ்சு அப்படி யாருமே கிடையாதே!"

"அப்ப இன்னும் கஷ்டம்... எனிவே... குழந்தைய எடுத்துட்டுப் போயிருக்கறதால, ஏதோ திட்டத்தோடதான் போயிருக்கணும்... உங்களோட லெட்டர் மூலமாவோ, போன் மூலமாவோ தொடர்புகொள்ள முயற்சி பண்ணுவாங்கன்னு தோணுது... அதனால உங்க வீட்டு போனை கொஞ்ச நாளைக்கு 'டாப்' பண்ணி கண்காணிக்கறது நல்லது..." நீளமாய் கமிஷனர் பேசி, உத்தரவுகளைப் போட்டார்.

என்ன போட்டு என்ன!

இரண்டு மாசங்கள் ஓடிவிட்டன. மோஹனாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

உயிரோடு இருக்கிறாளா... இல்லை, செத்துப்போய்விட்டாளா?

என் ஸந்த்யா?

"பனியில நின்னுண்டு என்ன பண்றே, பரத்? காபி கொண்டுவந்திருக்கேன்... உள்ள வாப்பா..."

பரத் அசையாமல் நிற்கவே, ஜெயம்மா பிள்ளையிடம் வந்தாள்.

தோளில் கையை வைத்து அவனை உலுக்கினாள்.

ஆரஞ்சு உருண்டையாக எழுந்த சூரியனின் வெளிச்சத்தில், பரத்தின் கன்னத்துக் கண்ணீர் பளபளத்தது.

"சிங்கமாட்டம் திரிஞ்சிண்டிருந்த பிள்ளை, ரெண்டே மாசத்துல உருத்தெரியாமப் போயிட்டியே, பரத்! உன்னைப் பாத்தா என் வயறு எரியறதுப்பா! உங்கப்பா செத்தப்போ கூட உன் கண்ல ஒரு சொட்டு ஜலத்தைப் பாத்ததில்லை... ஆனா... இப்போ..."

ஜெயம்மாவின் குரல் தழுதழுத்தது.

"உன் கண்ல ஜலம் வந்தா என் தேகம் ஆடிப்போயிடறது, பரத்... தேத்திக்கோப்பா... நா இல்லியா, அத்தனையும் தாங்கிண்டு, கல்லாட்டம்..."

இரண்டு நிமிஷம் மெளனத்தில் மறைந்தது. ஜெயம்மாவின் சன்னமான விசும்பல் அந்த நிசப்தத்தில் பெரிசாய் ஒலித்தது.

பரத் ஒன்றுமே பேசாமல் படுக்கையறைக்குள் சென்று படுக்கையில் உட்கார்ந்தான்.

அம்மா நீட்டிய காபியை வாங்கிக் குடித்தான்.

"இன்னிக்கு ஸந்த்யாவுக்குப் பிறந்த நாள்... ஞாபகம் இருக்கா?"

இருக்கிறது என்று பரத் தலையாட்டினான்.

"குழந்தை எங்க இருக்கானுகூடத் தெரியலையேப்பா... இது என்ன சோதனை! போன ஜன்மத்துல யாருக்கோ நாம பெரிசா துரோகம் பண்ணியிருக்கோம்... அந்தப் பாவம்தான் இப்படித் தொரத்தறது... நானும் ஜடமா, மரமா இருக்கணும்னுதான் பாக்கறேன்... முடியலயேப்பா! அதுவும் இன்னிக்குத் தாங்க முடியலை, பரத்... நா என்ன பண்ணுவேன்?"

பக்கத்தில் உட்கார்ந்து அம்மா விசும்புவதைக் காணச் சகியாது பரத் கண்களை மூடிக்கொண்டான்.

போலீஸ் கமிஷனரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், இனி என்ன பண்ணுவது என்ற எண்ணம் ஆளைப் புரட்ட, பரத் ஷ்யாமிடம் பேசினான்.

"இப்போ என்ன பண்றது, ஷ்யாம்?"

"ம்... கமிஷனர் சொன்ன மாதிரி மோஹனாவுக்கு வேண்டியவங்க யாரையாவது தேட முடியுமா, பரத்? அவங்க அப்பா, டெல்லி சினேகிதிங்கனு யாரையாவது?"

"எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அவளுக்கு யார்கிட்டயும் தொடர்பில்ல... எதுக்கும் வீட்டுல அவ அலமாரில தேடிப்பாக்கலாமா?"

"அதை முதல்ல செய்வோம்..."

"ஷ்யாம்..."

"ம்?"

"வீட்டுக்குப் போனா அம்மாவை சமாளிக்கணுமே, ஷ்யாம்..."

"ம்... நானும் அதப்பத்தி யோசிச்சேன்... பேசாம உண்மையச் சொல்லிட்டா என்ன, பரத்?"

அம்மாவிடமா? நிஜத்தையா?

ஐயோ... வேண்டாம்...

"வேண்டாம், ஷ்யாம்... ரெண்டு மூணு நாள் ஏதாவது பொய் சொல்லி தாக்குப் பிடிக்கறது பெட்டர்... ஏன்னா, அவங்க ஏற்கனவே இதய நோயாளி... இந்த சமயத்துல அம்மாக்கு ஏதாவது ஆயிடுத்துன்னா, என்னால தாங்க முடியாது, ஷ்யாம்..."

வீட்டில் கார் போய் நின்றதும், ஆவலோடு ஓட்டமும் நடையுமாய் வந்த ஜெயம்மா, மருமகளையும் பேத்தியையும் காணாமல் ஏமாந்தது தெளிவானது.

"அவா எங்கப்பா? நீங்க மட்டும் ஏன் தனியா வரேள்?"

"அடடா... மருமகளைப் பிரிஞ்சு ஒருநாள்கூட இருக்க முடியாதாம்மா உங்களால!" வேண்டுமேன்றே கேலியோடு பேசின ஷ்யாம், சட்டென்று முகத்தை வருத்தமாக்கிக் கொண்டான். "அந்தப் ப்ரதீமாவோட குழந்தை சமீபத்துல செத்துடுச்சும்மா... பாவம், அவங்க மனசு உடைஞ்சுபோயிருக்காங்க! ரெண்டு நாள் அவங்களோட மோஹனாவும் ஸந்த்யாவும் இருக்கறது நல்லதுன்னு மகாபலிபுரத்துலயே அவங்களை விட்டுட்டு வந்திருக்கோம்..."

"என்னப்பா பரத், ஷ்யாம் என்னென்னவோ சொல்றானே! வேணும்னா, அந்தப் பொண்ணை இங்க கூட்டிண்டு வர்றது... அதை விட்டுட்டு எதுக்காக இவா அங்க போகணும்? மகாபலிபுரத்துல என்ன வெச்சிருக்கு? எனக்கு ஒண்ணும் புரியலையே!"

மலங்கமலங்க ஜெயம்மா விழித்துக்கொண்டு நிற்கையிலேயே, இப்போதைக்கு இது போதும் என்று நண்பர்கள் இருவரும் மாடிக்குப் போனார்கள். மோஹனாவின் அலமாரியைத் தலைகுப்புறப் புரட்டினார்கள்.

ஒரு டைரி? ஒரு கடிதம்? ஒரு சின்ன தகவல்?

ம்ஹூம்... ஒரு மண்ணும் இல்லை.

 (தொடரும்)