வாமனனின் ‘நிழலல்ல நிஜம் – 8

பதிவு செய்த நாள்

26
ஜனவரி 2016
00:34

திரை உலகில் சோ மீது போர் தொடுத்த துக்ளக்!

பிரார்த்தனையின் சக்தி, எம்.ஜி.ஆருடைய வாழ்க்கையின் திருப்புமுனைகளில் வெளிப்பட்ட தாக பலர் நினைப்பார்கள். குண்டடி பட்டபின் மீண்டும் திரைக்கு வந்து ‘நான் செத்து பிழைச்சவன்டா’ என்று பாடினார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின், திரும்பி வந்து இறுதிவரை முதல் அமைச்சராக இருந்தார். பொதுமக்களின் வேண்டுதல்கள் இவற்றுக்கு வழிவகுத்ததாக பலர் கருதுவார்கள்.

அதே போல், சோவின் விஷயத்திலும் மக்களின் பிரார்த்தனை பலித்திருக்கிறது என்பது அவருடைய அபிமானிகளின் கருத்து. அதுதான், பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சோவை, துக்ளக் பத்திரிகையின் 46வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, தற்கால அரசியல் நிலை குறித்த அவருடைய ஆணித்தரமான கருத்துக்களை முன் வைக்க உதவியிருக்கிறது என்பது அவர்கள் அபிப்பிராயம். சோவும் அப்படித்தான் கருதுகிறார்.

எம்.ஜி.ஆருக்கும் சோவுக்கும் வேறு யாருக்கும் இல்லாத இன்னொரு பொருத்தமும் உண்டு. எம்.ஜி.ஆரின் திரை உலக வாழ்க்கையில் சினிமாவும் அரசியலும் கையோடு கைகோர்த்து நடந்தன. அரசியல் மீது கண் வைத்த எத்தனையோ நடிகர்களுக்கு கிடைக்காத வெற்றியை அவருக்கு சாத்தியமாக்கிய அம்சங்களில் இது முக்கியமானது.

எம்.ஜி.ஆரைப் போல் சோவின் கலையுலக வாழ்க்கையிலும் கலையும் அரசியலும் பிணைந்தவாறே வந்திருக்கின்றன. நாடக மற்றும் திரைப்பிர வேசங்களின் ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசியல் விமர்சனங்களை நையாண்டியாகச் சேர்க்கும் தனிப்பாணியை மேற்கொண்டுவிட்டார் சோ. அதுதான் போட்டிக்கு வந்த பல சிரிப்பு அலைகளையெல்லாம் மீறி, திரை உலகில் அவர் முப்பது ஆண்டுகளுக்கு மேல் வலம் வரும்படிச் செய்தது. எத்தனை பெரிய அதிகார பீடங்களின்  அச்சுறுத்தல்கள் வந்தாலும், அஞ்சாமல் கருத்துக்களை முன் வைக்கும் தைரியம் அவரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டியது. 

ஆனால் சோவின் அறிமுகப் படமான ‘பார் மகளே பார்’ படத்தில், எந்த அரசியல் கலப்பும் இல்லை! மெக்கானிக்கல் மாடசாமியாக ஓட்டைக் காருடனும் மெட்ராஸ் தமிழுடனும் மதுரை வீதிகளில்  சோ வரும் முதல் காட்சியிலேயே, நகைச்சுவையின் கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறது. 

எத்தனையோ படங்களில் இணையப்போகிற மனோரமாவுடன் முதல் படத்திலேயே மோதல்....காமெடி நடிப்பில் ஜாம்பவானான ஏ. கருணாநிதி யுடன் நகைச்சுவை லடாய்...‘பேரு மாடசாமி, பேஷனா மாடு மாடுன்னு கூப்பிடுவாங்க,’ என்று சிவாஜியிடம் ஓர் அறிமுகம். ஒரு புதுமுக நடிகரின் வண்டவாளம் எளிதாக தண்டவாளம் ஏறிவிடக்கூடிய இத்தகைய காட்சிகளில், சோ தடுமாறவில்லை, மாறாகப் பரிமளித்தார். ஆனால், நாகேஷ் நயாகராவை மீறிய ஆற்றலுடன் சர்வர் சுந்தரமாகவும் திருவிளையாடல் தருமியாகவும்  ஆக்கிரமித்த காலத்தில், இன்னொரு நகைச்சுவை நடிகருக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் வந்துவிடுமா? வந்தாலும் தடம் பதிக்க முடியுமா?

இந்தப் படு பயங்கரப்போட்டியை சமாளிக்க, படுவேகமாக நாடகங்களுக்கு கதை வசனம் எழுதிய அனுபவம் சோவுக்கு பயன்பட்டது. 

துரிதமாகவும் சிக்கனமாகவும் படங்கள் எடுத்த முக்தா சீனிவாசனுக்கு சோவின் கதை, வசனங்கள் வரப்பிரசாதமாக அமைந்தன. ‘தேன் மழை’ (1966), ‘நினைவில் நின்றவள்’ (1967), ‘பொம்மலாட்டம்’ (1968), ‘ஆயிரம் பொய்’ (1969) என்று ஆண்டுக்கு  ஆண்டு, சோ கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த படங்கள் வெளிவந்தன. 

எல்லாம் நாடகப் பாணியான படங்கள்தான், தனக்கு சினிமா மீடியம் பிடிபடவில்லை என்று வெளிப்படையாகவே கூட சோ கூறுவார். ஆனால் மேற்படி படங்களில், நினைவில் நிற்கும் சில பிம்பங்களும் அமைந்தன. ஜாம்பஜார் ஜக்குவாக  ‘வா வாத்யாரே வூட்டாண்டே’வில் சோ காட்டிய நடிப்பு ஒரு தனி வகை. ஸ்டைல் நடிப்பில் இறங்கினால் அவரால் எத்தகைய ஒரு சாதனையும் செய்ய முடியும் என்பதற்கு அது ஒரு சான்று. ‘தேன் மழை’யில் நாகேஷுடன் சேர்ந்து இரட்டைக் குழல் நகைச்சுவை அமைந்தது. ஒரு காட்சியில் நாகேஷும் சோவும் பத்திரிகையில் ‘ஆட்கள் தேவை’ பகுதியைப் பார்த்துக்கொண்டிருக்கி றார்கள். மனிதன் நிலவில் கால் வைத்திருக்கும் செய்தி பத்திரிகையில் பளிச்சிடுகிறது. நிலவில் இறங்கிவிட்ட மனிதன் நிலவை இருட்டாக்கிவிட்டால் என்ன செய்வது, பூமிக்கு வெளிச்சம் இல்லாமல் போய்விடுமே என்று கவலை வந்துவிடுகிறது! ‘இப்போ நாம பூமிக்கு  வருவோம்’ என்று தான் எழுதிய வசனத்திற்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார் சோ. சாதாரணமான ஒரு காட்சியில், வினோதமான முறையில் சிந்தனையைத் தூண்டும் அம்சம். ‘நினைவில் நின்றவ’ளில், மனைவி மனோரமாவின் புடவையைக் கத்தரித்து சட்டை போடும் மனோதத்துவ டாக்டர் சம்பந்தமாக வருகிறார் சோ. காட்சிகளில் மனோரமாவிற்கும் சோவுக்குமான புரிதல் அபாரம். சிரிப்பு ஒரு பக்கம் என்றால், சிந்தனையை ஆழமாகத் தூண்டும் போக்கும் சோவிடம் உண்டு. பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனின் அடிப்படையில் அவர் படைத்த ‘மனம் ஒரு குரங்கு’ இந்த ரகம். நாடகமாக அரங்கேறிய பின் திரைப்படம் ஆனது (சிறப்பாக இயக்கியவர் ஏ. டி. கிருஷ்ணசாமி). காய்கறி விற்கும் மருதாயி, சினிமா நடிகை மல்லிகாதேவியாக உருமாற்றப்படுகிறாள். இதற்குப் பின், அவளுடைய வாழ்விலும், அவளை புதிதாக உருவாக்கிய இயக்குநர் கோபிநாத் வாழ்க்கையிலும், அவளை முதலில் மணக்கவிருந்த முருகேசன் வாழ்விலும் மாற்றம் நேர்கிறது. ‘மருதாயி, மல்லிகா தேவி ஆகலாம். ஆனால் மல்லிகாதேவி மீண்டும் மருதாயி ஆக முடியாது’  என்ற புரிதல் ஏற்படுகிறது. இந்தக் கசப்பான உண்மையை, ‘மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு’ என்ற பாடல் தீட்சண்யமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வித்வான் லட்சுமணன் எழுதி, டி.பி. ராமசந்திரன் இசை அமைத்து டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடல், சோவையே பிரமிக்க வைத்த ஒன்று.

மனம் ஒரு குரங்கில் டி.எஸ்.பாலையா-, சோ இணைவு   சிறப்பாக அமைந்தது. ‘காதலிக்க நேரமில்லை’யில் பாலையா-, நாகேஷ் இணைவைப் போன்றது இது. மனம் ஒரு குரங்கில் சோவுக்கும் செல்லப்பா என்றுதான் பெயர்!  கடினமான இலக்கை நிர்ணயித்து பயணம் மேற்கொள்ளும் தைரியம் சோவுக்கு இருந்தது. அந்தத் துணிச்சல் அவரைக் கைவிடவில்லை. மனம் ஒரு குரங்கில் செய்தது போலவே, சமூக பிரச்னைகளை தனது நாடகங்களில் சோ எடுத்துக் கொள்ளத்தான் செய்தார் (உதாரணத்திற்கு, யாருக்கும் வெட்கமில்லை -- விலைமாதர் பிரச்னை). 

ஆர்.கே. நாராயணன் எழுதிய ‘மிஸ்டர் சம்பத்’ நாவலை ஜெமினி வாசன் ‘மிஸ் மாலினி’ ஆக்கினார் (1947). இந்தப் படத்தில் வாய்ச்சவடால் பேசி ஏமாற்றித்திரிபவன் வேடத்தில் கொத்தமங்கலம் சுப்பு பிரமாதமாக நடித்தார். அதை மிகவும் ரசித்த சோ, சுப்புவின் பாணியைப் பின்பற்றி நடித்து, தானே படத்தையும் இயக்கினார் (மிஸ்டர் சம்பத்–1972). 

திரைப்பிரவேசம் செய்த நான்கு ஆண்டுகளிலேயே,  அன்றைய முதன்மை நட்சத்திரமான எம்.ஜி.ஆரின் காமெடி இணைவாக, ‘ஒளி விளக்’கில் வெளுத்துக்கட்டினார் சோ. ‘இவன் எனக்கு பெஸ்ட் பிரண்டு, பேரு கத்திரி,’ என்று படத்தில் சோவை எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்வார். இவரோ, ‘வாத்தியாரே, வாத்தியாரே’ என்று உருகுவார்.  எம்.ஜி.ஆர். மீது பித்தாக உள்ள ரசிகரை, சோ ‘எங்கள் தங்க’த்தில் சித்தரித்துக் காட்டியது போல், சிறப்பாக யாரும் செய்ததில்லை. ‘வாத்தியாரே, உன்னை ஒரு தபா தொட்டுப் பாத்துக்கிட்டா....நீ கேட்டா துட்டு என்ன வாத்தியாரே, என் உசிரையே கொடுப்பேன்’என்று உணர்ச்சி பொங்க கூறுவார். மேடைக்கு ஓடி வந்து சிறு சேமிப்பு நிகழ்ச்சிக்காக அரசு சார்பில் வந்திருக்கும் எம்.ஜி.ஆரை இப்படி அணுகும் காட்சியில், சோவின் நடிப்பு அபாரம். குமரிக்கோட்டத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று பாடலை முனகிக்கொண்டு வருவார் எம்.ஜி.ஆர். சோம்பேறித்தனத்தை நமது பகைவன் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று நண்பர் சோவிடம் கூறுவார். ‘ஆனா பகைவன் மேலேயும் அன்பு செலுத்தணும்னு சொல்லி யிருக்காங்களே’ என்று ஒரு போடு போடுவார் சோ. 

எம்.ஜி.ஆருடன் சில முக்கியமான படங்களில் நடித்தாலும், துக்ளக் பத்திரிகையில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் விமர்சனம் சில குறைகளைக் கூறியது.  இதனால் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்புகள் வற்றிவிட்டன (விமர்சனம் எழுதியவர் பின்னாள் இயக்குநர் மகேந்திரன்).

ஜெயலலிதா நடித்த பல படங்களில் பங்கு கொண்ட சோ, ‘வந்தாளே மகராசி’யில் ஜெயலலிதாவின் கணவராக நடித்தார். ஒரு காட்சியில் ஜெயலலிதாவைப் பார்த்துச்சொல்வார் --  ‘தமிழ்நாட்டுச் சரித்திரத்தில உனக்கு ஒரு இடம் உண்டு’. இது 1973ல்.

எம்.ஜி.ஆரோடு நடிக்கும் போது இருந்ததை விட, சிவாஜி படங்களில் சோவுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைத்தது. அரசியல் சரவெடிகள் உதிர்க்கும் சந்தர்ப்பங்களும் இருந்தன. ‘தங்கப்பதக்கம்’, ‘ரோஜாவின் ராஜா’ போன்ற படங்களில் இப்படித்தான். 

அறுபதுகளின் இரண்டாம் பாதியில், ‘முகமதுபின் துக்ளக்’ அரங்கேறியது ; 1971ல் திரைப்படமாகவும் வந்தது (இயக்கம் சோ). படத்தை  எப்படியாவது தடைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற அரசியல் எதிரிகளை முறியடிக்கத்தான், ‘அல்லா அல்லா’ பாடல் சேர்க்கப்பட்டது.  ‘துக்ளக்’ என்ற பெயரே சோவின் முத்திரையாகி, 1970ல் அவருடைய பத்திரிகையின் பெயரானது. இந்த நிலையில்தான், எல்லா படங்களிலும் சோவின் வசனங்களில் அரசியல் நையாண்டி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

 படத்தில் ஏற்கும் கதாபாத்திரத்தை மீறி,  எம்.ஜி.ஆருக்கு பொது மக்களி டையே இருந்த பிம்பத்தை அவருடைய திரை வசனங்கள் வெளிப்படுத்தும். அதே போல், சோவின் வசனங்களும் அமைந்தன.  திரைப்படத்தை மீறிய அரசியல் விமர்சனங்களை மேற்கொண்டன. சோவை ஒரு பிரபல அரசியல் விமர்சகராக முன்னிலை ப்படுத்தின. ஒரு படத்தில் அவர் கூறுவார் - ‘நான் ரகளையில எல்லாம் கலந்துக்க மாட்டேன். கிளப்பி விட்டுட்டு ஒதுங்கிடுவேன்’ (தனிக்கு டித்தனம்–1977). இது  பத்திரிகையாளர் என்ற முறையிலே அவர் கிளப்பும் பிரச்னை களைக் குறிப்பிடுவது.  இன்னொரு படத்தில், ‘நமக்கு வேண்டாம்பா அரசியல் எல்லாம்’  என்பார் சோ.  ‘அதை நீ சொல்றே?’ என்று ரஜினியிடமிருந்து பதில் வரும். அந்த ‘நீ’யில் வரும் அழுத்தம், சோவின் அரசியல் பரிமாணத்தைக் குறித்தது (ஆறிலிருந்து 60 வரை). ரஜினி- சோ கூட்டு, எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து பல ஆண்டுகள் பல படங்களில் விரிந்தது...’கழுகு’, ‘அடுத்த வாரிசு’, ‘நான் மகான் அல்ல’, ‘மனிதன்’, ‘அதிசய பிறவி’...இப்படி. ‘அவர் எனக்கு அண்ணன் மாதிரி’ என்று ஒரு படத்தில் ரஜினிகாந்த் சோவைக் குறிப்பிடுவார்...அந்த அண்ணன் காட்டிய வழி அரசியல் தளத்திற்கும்  விரிந்து, ஒரு பொதுத் தேர்தலின் முடிவுகளையே பாதித்தது.இருநூறு படங்கள், நான்கு படங்களின் இயக்கம், 14 படங்களுக்கு கதை வசனம் என்று விரிந்தது சோவின் திரைப்படலம். 

பிரபல அரசியல் விமர்சகர் என்ற அவருடைய இமேஜ் அதை ஆக்கிரமித்தது. அது அவரை மற்ற சிரிப்பு நடிகர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. அவருக்கு ஒரு தனி இடத்தை தந்தது. ஆனால் அவருடைய நடிப்பாற்றலின் எல்லைகளை அந்த அரசியல் வாடை சுருக்கியது. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பது வாழ்க்கையின் நியதி அல்லவா? 

(தொட­ரும்)