பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 26

பதிவு செய்த நாள் : 08 மே 2017
என்னது!

மோஹனா வீட்டை விட்டுப் போய்விட்டாளா? ஸந்த்யாவை ஒரு விபசாரியாக வளர்க்கப்போகிறாளா?

ப்ளடி பிட்ச்!

மூளை கீளை பிசகிப்போய்விட்டதா, என்ன?

கன்னாபின்னாவென்று என்னென்னவோ எழுதியிருக்கிறாளே!

தேவடியாத்தனம், விபசாரித்தனம்... ச்சே!

என்னமாய் அசிங்கமான வார்த்தை களை உபயோகித்திருக்கிறாள்! என்ன ஆயிற்று இவளுக்கு?

மனசு இப்படிக் கொதித்துப்போகும்படி நான் என்ன அப்படிச் சொல்லிவிட்டேன்?

அழுந்த யோசித்த நிமிஷத்தில், 'கிரி உன்னை கிஸ் பண்ணினானா?' என்று கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.

தப்புதான்... ஒரு கணவன் தன் மனைவியிடம் கேட்கும் கேள்வி இல்லைதான். அதற்காக...?

ஏதோ குடிவெறி என்று விட்டுத்தள்ளாமல், அந்த வார்த்தைகளை சீரியஸாக ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?

என்னைச் சீண்டுவதற்காக, என் தவறை நான் உணர்வதற்காகவா இத்தனை ஸ்ட்ராங்காக எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறாள்?

'மடையா! உன் குடியையும், உன் வெறி வார்த்தைகளையும் நீ கட்டுப்படுத்திக் கொள்' என்று எதிரில் நின்று சொல்லப் பிடிக்காமல், புது வழியைக் கையாள விரும்புகிறாளா?

இப்படியொரு கடிதம் எழுதி என்னை பயமுறுத்திவிட்டு, என்ன பண்ணுவேன் என்று தவிக்க விட்டுவிட்டு, நான் என் தவறை உணர்ந்ததும் வந்துவிடுவதுதான் திட்டமா?

அதற்கு என் ஸந்த்யாவை கால் கேர்லாக வளர்க்கப்போகிறேன், அப்படியிப்படி என்று ஏன் எழுதவேண்டும்?

வாயால், 'நோ பரத்... நீங்க நடந்துக்கற முறை எனக்குப் பிடிக்கலை...' என்று சுவாதீனத்தோடு என்னைக் கோபித்துக் கண்டிக்க உரிமை உள்ளவள், இந்தக் கேவலமான, மிரட்டுகிற வழியை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்?

கடவுளே! மோஹனாவா இப்படியொரு கடிதம் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறாள்!

அவள் குடும்பத்தில் விபசார ரத்தம் ஓடுகிறது என்று நான் சொன்னதாய் எழுதியிருக்கிறாளே... எப்போது சொன்னேன்?

சே... அத்தனை மட்டமாய் பேசுவது எனக்கு எப்படி சாத்தியம்! அப்புறம், அவளாகக் கற்பனை பண்ணிக்கொண்டா எழுதியிருக்கிறாள்?

அடிபட்டவுடன் வலி தெரியாத மாதிரி, லெட்டரின் வாசகம் மனசைப் பிறாண்டிய வேதனையில், தன் மேலேயே கோபம், பச்சாதாபம், ஆத்திரம் என்று எல்லாமாக எழ, ஒன்றும் புரியாமல் பரத் குழம்பி நின்ற நிமிஷத்தில் போன் ஒலிப்பது கேட்டது.

மோஹனாவாக இருக்குமோ? உணர்ச்சிவசப்பட்டு அசட்டுத்தனமாய் ஏதோ எழுதி விட்டேன் என்று சொல்லத்தான் கூப்பிடுகிறாளோ? அவளாக இருந்தால், 'ஸாரி டார்லிங், ஐ'ம் ரியலி ஸாரி! உன் மனசு புண்படும்படி நடந்துகொண்டுவிட்டேன்... இனிமேல் பாரேன், இந்தக் கணத்திலிருந்து நீ ஒரு புது பரத்தைத்தான் பார்க்கப்போகிறாய்!' என்று வெட்கத்தைவிட்டுப் பேச வேண்டும்... வீட்டுக்கு ஸந்த்யாவையும் அவளையும் வரவழைப்பதுதான் முதல் வேலை... அப்புறம் எப்போதாவது இரண்டு மூன்று நாட்கள் கழித்து, அவளுடைய கடிதத்தின் ரசக்குறைவை மெதுவாய் சுட்டிக்காட்டி கண்டிக்க வேண்டும். இப்போது உடனடியாய் கோபம், தாபம், கத்தல் ஒன்றும் கூடாது! நல்ல கணவனாய், நிதானம், விவேகம் உள்ளவனாய், அவள் மதிக்கும் மனிதனாய் நடந்து கொண்டு, அவர்களை வரவழைப்பதுதான் இப்போது முக்கியம்!

கால்களை அகலஅகலமாய் வைத்து படுக்கையறைக்கு வந்து, அங்கிருந்த போனை எடுத்து, "ஹலோ..." என்றான் பரத்.

மோஹனா இல்லை.

ஆனந்தகுமார் ஜெயின்... வட்டிக்கடைக்காரன்... பணக்காரன், சக்ரவர்த்தி அண்ட் அஸோஸியேட்ஸின் வாடிக்கையாளன். பரத்துக்கு நன்றாய்த் தெரிந்தவன்.

"ஹாப்பி நியூ இயர், மிஸ்டர் பரத்..."

இவன் எதற்காக இப்போது கனகாரியமாய்ப் பேசுகிறான்? பரத்துக்கு அவனுடன் பேசும் மனநிலை இல்லை. அசுவாரஸ்யமாக பதிலுக்கு வாழ்த்து தெரிவித்தான்.

"புது வருஷமும் அதுவுமா ஜம்முனு நிலம் வாங்கிட்டீங்களே... வெல்டன்!"

நிலம் வாங்கினேனா? பரத் விழித்தான்.

"நீங்க கேட்ட தொகையைக் குடுக்க முடியாததுக்கு மன்னிக்கணும்... நேத்தே போன் பண்ணிச் சொல்லியிருந்தீங்கன்னா, எப்படியாவது புரட்டியிருப்பேன்... அரைமணி நேரத்துல முப்பது ரூபாதான் ரொக்கமா திரட்ட முடிஞ்சது... பார்ட்டிக்கு அட்வான்ஸ் குடுத்துட்டீங்க, இல்லே?"

என்ன சொல்கிறான் இவன்?

"நீங்க அதிகமா கேட்டு நா கம்மியா குடுத்துட்டேன்னு உங்களுக்கு வருத்தமா, மிஸ்டர் பரத்? நிலைமை அப்படி எசகுபிசகாயிருச்சு... ப்ளீஸ், புரிஞ்சுக்கங்க! மிஸஸ் பரத்கிட்டக்கூட நா சொன்னேன், 'சாயந்தரம் வரை டைம் குடுங்க... அம்பது ரூபாயையும் ரொக்கமா குடுத்துடறேன்'னு... ஆனா அவங்க, 'இல்லே, முப்பது போறும், நாங்க சமாளிச்சுக்கறோம்'னு சொல்லிட்டாங்க... பார்ட்டி செங்கல்பட்டுகிட்ட இருக்கறதாவும், நீங்க போய் பணம் குடுத்துட்டு வீடு திரும்ப எட்டு மணி ஆயிடும்னும் சொன்னாங்க... அதான் இப்ப போன் பண்றேன். போன காரியம் முடிஞ்சுதா? நாளைக்கு வேணா பாக்கி இருபதை ரெடி பண்ணிவெக்கட்டுமா? நீங்க ப்ரோநோட் கையெழுத்துப் போட வரும்போது வாங்கிக்கலாம்..."

இங்குமங்குமாய் விஷயம் புரிந்து, எதுவும் பேசத் தோன்றாமல் அதிர்ந்து நின்றான் பரத்.

ஆனந்திடம் - வட்டிக்குப் பணம் கொடுக்கும் நபரிடம் - மோஹனா ஐம்பதாயிரம் கேட்டிருக்கிறாள்... நிலம் வாங்க முன்பணம் கொடுக்கவேண்டும், பாங்க் விடுமுறை என்று சரடுவிட்டிருக்கிறாள்... ஆனந்த் எனக்கு போன் பண்ணி தொடர்புகொள்ள முடியாதபடி, நான் செங்கல்பட்டு போயிருப்பதாய் சொல்லியிருக்கிறாள்... அவனிடம் ஐம்பது இல்லை என்றதும், கிடைத்தவரை லாபம் என்று முப்பதாயிரம் வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறாள்...

அப்படியென்றால், மோஹனா திட்டமிட்டுத்தான் வீட்டைவிட்டு ஓடியிருக்கிறாளா? என்னை பயமுறுத்த ஆடும் நாடகம் இல்லையா?

பரத்துக்கு திடுமென்று தொண்டை அடைத்துப்போனது. மூச்சு விடுவது சிரமமாய் இருந்தது.

நெஞ்சுக்கு மேல் யாரோ ஏறிக் குதித்து த்வம்ஸம் பண்ணுகிற வேதனை.

"நாளைக்கு முப்பதாயிரத்தைக் குடுத்துடறேன்... தேங்க்ஸ்..." என்று சொல்லி ரிஸீவரை வைத்தவன், உடம்பு பலவீனமாகிவிட்ட தினுசில் படுக்கையில் மல்லாந்து விழுந்தான்.

என்ன செய்வேன்?

நிலைமையை எப்படிச் சமாளிப்பேன்?

மோஹனா ஓடிப்போய்விட்டாளா?

என் குழந்தை... என் ஸந்த்யா... ஐயோ, அவள் கதி என்ன?

முதல்முறையாக நிஜம் விஸ்வரூபம் எடுத்துக் கண்முன் பரவ, பரத் பயந்துபோனான்.

பட்பட்டென்று நெற்றியில் ஓங்கி அறைந்துகொண்டான். தலைகாணிகளை எடுத்து வீசியடித்தான்.

மலங்கமலங்க அவன் விழித்துக்கொண்டிருந்த சமயத்தில், கதவைத் திறந்து கொண்டு ஜெயம்மா உள்ளே வந்தாள்.

"இன்னும் அவாளைக் காணுமேப்பா... எனக்குக் கவலையா இருக்கு... மணி எட்டடிச்சுடுத்தே..."

பரத் அதீத பிரயத்தனத்துடன் நிதானத்துக்கு வந்தான்.

முதலில் அம்மாவைச் சமாளிக்க வேண்டும்... என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், அம்மாவை எதையாவது சொல்லி சமாதானப்படுத்த வேண்டும்.

என்ன... என்ன சொல்வது?

"போன் யாருப்பா? நா ஒரு நிமிஷம் மோஹனாதான் லேட்டாயிடுத்து, கவலைப்படாதீங்கோனு சொல்ல பண்ணாளோன்னு நினைச்சேன்..."

"ஓ... அ... அது மோஹனாதாம்மா... அவ டெல்லி ப்ரெண்ட் ப்ரதீமா திடும்னு மெட்றாஸுக்கு வந்திருக்காளாம்... அவசரமா வந்ததுல, தகவல் சொல்லாம வந்துட்டேன், அம்மாகிட்ட சொல்லுங்கோன்னா..."

உன் பேச்சை நம்பச் சொல்கிறாயா என்ற தினுசில் ஜெயம்மா பார்த்ததைத் தவிர்க்கவேண்டி, பரத் அவசரமாய்த் திரும்பி கண்ணாடி முன் நின்று தலைவாரத் தொடங்கினான்.

"நானும் போயி அந்தப் ப்ரதீமாவைப் பாத்துட்டு வரேன்... லேட்டானா கவலைப்படாதே... என்ன?"

அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல், பரத் கார் சாவியையும் பர்ஸையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

யாரிடமாவது மனசுவிட்டுப் பேசி, இதற்கு என்ன வழி என்று கேட்டால் என்ன?

யாரிடம்?

ஷ்யாம்தான்... ஏற்கனவே மோஹனாவைப் பற்றின உண்மையைத் தெரிந்த அவனை விட்டால் வேறு யார்!

ஷ்யாமின் வீட்டை அடைந்தபோது அவன் வீட்டில் இல்லை.

க்ளப்புக்குப் போயிருப்பதாய் அவன் மனைவி சொன்னாள்.

க்ளப்புக்குச் சென்று, அந்தக் கூட்டத்தில் அவனைத் தேடிப்பிடித்து, "ஷ்யாம், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... என்னென்னவோ நடந்துடுத்து..." என்ற பரத்தின் முகத்தைப் பார்த்த ஷ்யாம், என்ன இது என்ற திகைப்போடு உடனே கிளம்பினான்.

வீட்டுக்கு வந்து மாடியறையில் உட்கார்ந்தார்கள்.

பத்து நிமிஷங்களில், கொஞ்சம் நிதானமடைந்த பிறகு, துண்டுத்துண்டாய் தனக்குத் தெரிந்த விவரங்களைக் கூறினான்.

"அந்த லெட்டரைப் பாத்தப்பறம்கூட, என்னைச் சும்மா பயமுறுத்தறான்னுதான் நினைச்சேன், ஷ்யாம்... ஆனா, ஆனந்த் போன் பண்ணதும், இது விளையாட்டு இல்ல, வினைதான்னு புரிஞ்சுபோச்சு! நா என்ன பண்ணுவேன், ஷ்யாம்? உன் பொண்டாட்டி எங்கடானு எல்லாரும் கேட்டா, எப்படி சமாளிக்கப்போறேன்? ஸந்த்யாவைப்பத்தி எழுதியிருக்கறதை நிஜமாவே செஞ்சுடுவாளா? தெரியாத்தனமா ஒரு ராட்சஸிகிட்ட மாட்டிண்டுட்டேன், ஷ்யாம்! என் குழந்தை... எனக்கு அவ வேணும்... மோஹனா ஒரு கேடுகெட்டவ... ப்ளடி பிட்ச்! நா ஏமாந்துபோயிட்டேன்..."

"ஆல்ரைட்... நடந்துபோனதைப்பத்தி பேசிப் பிரயோஜனமில்ல... இனிமே நடக்கப்போறதை யோசிக்கலாம்... முதல்ல அம்மாவைச் சமாளிக்கணும்... நீ இப்ப உங்கம்மாவுக்கு போன் பண்ணி, இன்னி ராத்திரியை நீங்க எல்லாரும் ப்ரதீமா வீட்டுல கழிக்கறதா சொல்லிடு... அப்போ காலைவரை நமக்கு டைம் இருக்கு... நிதானமா யோசிக்கலாம்... தேடிப்பாக்கலாம்..."

பரத் அம்மாவை போனில் அழைத்தான். குரலை சகஜமாக்கிக்கொண்டான்.

"நாலு கார்ல எல்லாருமா சேர்ந்துண்டு மகாபலிபுரம் போப்போறோம்மா... அங்கயே ரூம் எடுத்துத் தங்கிண்டு, நாளைக்கு மத்தியானம் வந்துடுவோம்! இதுல கவலைப்பட என்ன இருக்கு? நாந்தான் கூட இருக்கேனே, அப்பறம் என்னம்மா!"

ஒருதினுசாய் அம்மாவைத் தற்காலிகமாய் சமாளித்தாகிவிட்டது.

அடுத்து என்ன செய்வது?

ஊரைச் சுற்றிவந்து, எங்காவது மோஹனா கண்ணில் தட்டுப்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே யோசித்தால்?

இண்டு இடுக்கு விடாமல் தேடினார்கள். கால் வலிக்கவலிக்க நடந்தார்கள்.

ம்ஹூம், பலன் ஏதுமில்லை.

"பகிரங்கமா தேடறதுல ரெண்டு சங்கடம் இருக்கு... மோஹனா லெட்டர்ல குறிப்பிட்டிருக்கற மாதிரி ஏதாவது அசட்டுத்தனம் செஞ்சிடலாம்... ரெண்டாவது, ஊர் உலகத்துக்கு நம்ம வீட்டுப் பிரச்சினை டமாரம் போட்டாப்பல ஆயிடும்! அதனால, உடனடியா அவசரப்பட்டு எதுவும் செய்ய வேணாம்... போலீஸ் கமிஷனர் எனக்கு வேண்டியவர்... ரெண்டாம் பேருக்குத் தெரியாம அவரைப் பாக்கலாம்... அவர் எப்படி உதவ முடியும்னு கேக்கலாம்..."

ஷ்யாம் சொன்னதற்கு சரி என்று தலையாட்டியபோது, பரத்தின் மனசில் தெம்பும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.

 (தொடரும்)