மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 07 மே 2017 19:25


மதுரை,

மதுரையில் இன்று மீனாட்சிஅம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை என்றாலே நினைவுக்கு வரும் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதலே மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமும் மீனாட்சி அம்மன், பிரியா விடை - சுந்தரேசுவரர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான பட்டாபிஷேகம் 5-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு மீனாட்சி அம்மன் தனது பரிவாரங்களுடன் மாசி வீதிகளில் திருவீதி உலா வந்தார்.  திருவிழாவின் மற்றொரு சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை நடந்தது. இதற்காக மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு - வடக்கு ஆடி வீதியில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ரூ. 15 லட்சம் செலவில் மலர் அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது.

காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், திருமணத்தின்போது மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்க திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். மாசி வீதிகளை வெள்ளி சிம்மாசனத்தில் வலம் வந்த சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தனர். காலை 8.35 மணிக்கு திருக்கல்யாண வைபவம் தொடங்கியது.

பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, சுந்தரேசுரவரின் பிரதிநிதியான பட்டர் வைரத்தினாலான மங்கல நாணை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார். அப்போது திருக்கல்யாண மண்டபம் மற்றும் சித்திரை வீதிகளில் குடியிருக்கும் பெண்கள், மீனாட்சி அம்மனை வழிபட்டு புது தாலி அணிந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் காண வசதியாக சித்திரை வீதி, ஆடி, ஆவணி வீதிகளில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அதிக அளவில் வைக்கப்பட்டு இருந்தது. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் திருக்கல்யாணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளிலும் வலம் வருகின்றனர்.

நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்மன் எழுந்தருளும் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 9ம்  தேதி  தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

 மதுரையின் மற்றொரு சிறப்பு வாய்ந்த விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்  விழா மே 10-ம் தேதி நடைபெற உள்ளது.