காலை சிற்றுண்டி எவரெஸ்ட் சிகரத்தில்.... போகலாமா?

பதிவு செய்த நாள் : 05 மே 2017


காலையில் ஜப்பானில் காபி… மதியம் பிரான்சில் உணவு… இரவு இந்தியாவில் மாலை உணவு என்று மிகவும் தமாஷாக சொல்வார்கள். வசதி படைத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இதுபோல செய்வார்கள் என்கிற பல தகவல்களை உங்கள் பெற்றோர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதுபோன்று யாருமே கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் துவங்கி இருக்கிறது. காலையில் ஏழு மணிக்கு எழுந்தவுடன் காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் ஏறினால் எட்டு மணியளவில் மவுண்ட் எவரெஸ்டில் உள்ள கோங்டே என்கிற சமதளப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் உங்களை இறக்கி விடுவார்கள். அங்கு பனிப்படுக்கை போல இருக்கும் சமதளப் பகுதியில் மேஜைகள் அமைக்கப்பட்டு அழகான விரிக்கைகள் இருக்கும். நீங்கள் ஆர்டர் செய்த அனைத்து உணவு வகைகளும் மேஜையில் விரிக்கப்பட்டிருக்கும். ஹாயாக சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு நீங்கள் சென்னைக்கே வந்துவிடலாம்.

இந்தப் பயணத்திற்கு ஆகும் செலவு 6.5 லட்சம். மூன்று பேர் வரை அனுமதிப்பார்கள். காட்மாண்டுவிலிருந்து எவரெஸ்ட்டின் சமதளப் பகுதியில் 14,000 அடி உயரம் கொண்டது. ஆக காலை உணவை உலகின் உயரமான இடத்திலிருந்து பனிப்பாறைகளுக்கு நடுவே சாப்பிடலாம்.

பனிமலை ஏறுபவர்கள் வாரக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் இந்த உச்சியைத் தொட. இந்தக் காலை உணவிற்காக நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் 15லிருந்து 20 நிமிடம்தான். அதில் நேபாள உணவு வகைகள் இடம்பெற்றிருக்கும்.

தட்பவெப்பநிலை சரியாக இருந்தால் 50 விருந்தினர்களை எவரெஸ்ட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். பனிப்பொழிவு அதிகம் இருந்தால் பயணம் ரத்து ஆகிவிடும்.

நியூயார்க்கைச் சேர்ந்த நேபாளியான பிரபுல் குருங் என்பவரின் மனதில் தோன்றிய ஐடியாவே இது. 2010ம் ஆண்டு இவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இவ்வளவு சிரமப்பட்டு பயணம் செய்து மலையேறுவது அனைவராலும் முடியாத காரியம். அதற்கு சரியான உடல் அமைப்பு இருக்க வேண்டும். கடும் பனியைத் தாங்குவதற்கான மன உறுதியும், மலை ஏறும் பயிற்சியும் இருக்க வேண்டும். கீழே உள்ள காம்பில் மாதக்கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும். மலையேற ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகும். இதில் உயிர் அபாயம் அதிகம் உள்ளது. எனவே குருங் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. இதுபோன்ற ஒரு கம்பெனி ஆரம்பித்து அனைவருக்கும் எவரெஸ்ட்டில் காலை உணவை அளிக்கலாம் என்று முடிவு செய்தார். அதன் பயனாக உருவானதே இந்த முயற்சி.

பிரபுல் குருங் மிகச்சிறந்த பேஷன் டிசைனர். டெமி மூர், கேட் ஹட்சன், பிரியங்கா சோப்ரா, ஆலியாபட் போன்றவர்களுக்கு ஆடைவடிவ மைப்பாளராக இருக்கிறார். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமாவும் இவரது கிளையண்ட்.  தற்போது பல்வேறு கம்பெ னிகள் இதுபோன்ற பயணங்களை ஏற்பாடு செய்கி றார்கள். ஆக, பயணம் செய்யும்போது தீர விசாரித்து விட்டு பயணம் செய்யவும். ஏனெனில் போலிக் கம்பெனிகள் தற்போது பெருகிவிட்டது. http://www.everestforbreakfast.com/ www.remotelands.com போன்றவைகள் நம்பிக்கையான கம்பெனிகள்.


உடல்நிலை நன்றாக உள்ளவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம். 14 ஆயிரம் அடி உயரம் என்பதால் சில சமயம் ஆக்சிஜன் கிடைப்பதற்கு சிரமமாக இருக்கும். வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாம். அதனால் பயணத்திற்கு முன்பு ஆஸ்பிரின் மருந்தை உட்கொள்ளவும். இதனால் ரத்தம் இலேசாகி மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

பயண விவரம்

காட்மாண்டுவிலிருந்து நம்மை லுக்லா என்கிற இடத்திற்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்வார்கள். பின்னர் மற்றொரு ஹெலிகாப்டரில் கோங்டேவுக்கு அழைத்துச் செல்வார்கள். மொத்த செலவு 3 நபர்ளுக்கு ரூபாய் 6.5 லட்சம்.