பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 25

பதிவு செய்த நாள் : 01 மே 2017
வீம்பாக ஒரு வார்த்தைகூட மோஹனாவிடம் பேசாமல் ஆபீஸ் வந்துவிட்டாலும், பொருந்தி வேலையைக் கவனிக்க முடியாதபடி பரத்தின் மனசு குறுகுறுத்துக்கொண்டேயிருந்தது.

ஸ்டெனோவிடம் லெட்டர் டிக்டேட் செய்யும்போதும், ரமணன்-சிவராமனுடன் முக்கியமான வாடிக்கையாளர் ஒருவரைப்பற்றி விவாதித்தபோதும், மக்கிஜானி அண்ட் சன்ஸ் கம்பெனியின் பாலன்ஸ் ஷீட்டைச் சரிபார்த்தபோதும், மனசுக்குள் மோஹனா உட்கார்ந்து அவனை ஹிம்ஸித்தாள்.

வெளுத்துப்போய் இறுகின அந்த முகம்... அந்த வேதனை... 'என்ன இப்படி நடந்து கொண்டுவிட்டீர்களே!' என்று குற்றம்சாட்டும் பார்வை...

பதினோரு மணிக்கு, ஷ்யாம் போனில் அழைத்தான்.

"ஹலோ..."

"ஹாய், பரத்! எப்படியிருக்கே? நேத்து நீ குடிச்ச அளவுக்கு, சரியான ஹாங் ஓவர் இருக்கணுமே! ஆமா, டின்னர் சாப்பிடாம கிளம்பற அளவுக்கு உனக்கு அப்படியென்ன கோவம்? ம்?"

டின்னர் சாப்பிடாமல் கிளம்பினேனா?

ஒருகணம் யோசித்தபோது பனிமூட்டமாய் முதல்நாள் சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

"எனக்கு என்ன கோவம், ஷ்யாம்... மோஹனா டயர்டா இருந்தா... அதான் கிளம்பிட்டோம்..."

உன் நொண்டிச் சாக்கை நம்ப வேறு ஆளைப் பாரு என்கிற தினுசில் ஷ்யாம் சிரித்தான். அப்புறம், "கோவம் கீவம் ஒண்ணுமில்லேன்னா சரிதான், பரத்... ஹாப்பி நியூ இயர் அகெய்ன்! அப்பறம் பாக்கலாம்..." என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தான்.

நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்த பரத்திற்கு, திடீரென்று அவமானமாக இருந்தது.

அதிகம் குடித்தேன் என்று ஷ்யாம் சொல்கிற அளவிலா, என் கோபதாபங்களை மூன்றாம் மனிதர் அறிந்துகொள்ளும் அளவிலா, நேற்று என் நடத்தை இருந்தது?

கிரியை மோஹனாவுக்கு அருகில் பார்த்தது ஆத்திரத்தை மூட்டியது நிஜம்தான்...

விளக்குகள் அணைந்த நிமிஷங்களில், இவர்கள் நெருக்கமாய் நின்றிருந்ததை விஷயம் தெரிந்தவர் யாராவது பார்த்திருந்தால் என்ன பண்ணுவது என்ற பயம் எழுந்ததும் நிஜம்தான்...

அதற்காக, இந்த ஆத்திரத்தையும் பயத்தையும், சுற்றியிருந்தவர்கள் சுலபமாய்ப் புரிந்துகொள்ளும் தினுசிலா நடந்துகொணடேன்?

மது உள்ளே போனால் என் வசத்தை நான் இழப்பது புரிந்ததுதானே... அப்புறம் ஏன் குடித்தேன்?

'குடிக்க மாட்டேன்' என்று மோஹனாவிடம் சத்தியம் பண்ணியது திடுமென நினைவுக்கு வர, பரத்தின் அவமான உணர்ச்சி அதிகமாகிப்போனது.

வீட்டுக்கு வந்து மோஹனாவிடம், கிரி உன்னிடம் எப்படி நடந்துகொண்டான் என்று ஏன் கேட்டேன்?

மோஹனாமீது எனக்கு அத்தனைகூடவா நம்பிக்கை இல்லை?

மோஹனா இன்று காலை ஏன் அப்படி அடிபட்டு உட்கார்ந்திருந்தாள்?

அந்த முகமும் அந்தப் பார்வையும்...

போன் பண்ணி மோஹனாவிடம் பேசினால் என்ன?

இரண்டு தரம் ரிஸீவரைத் தொட்டவன், வேண்டாம், சாயங்காலம் சுருக்கப் போய் நேரிலேயே அவளை சமாதானப்படுத்துவதுதான் சரி என்று தீர்மானித்துக் கையை மடக்கிக் கொண்டான்.

முடிவு செய்தபடி அவசரம் அவசரமாய் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு பரத் வந்த போது மணி ஐந்தரைதான்.

வீடு நிசப்தமாய் இருந்தது.

காபியோடு மாடிக்கு வந்த அம்மாவை, நீ ஏன் எடுத்துக்கொண்டு வருகிறாய் என்று கேட்கும் பார்வையாய்ப் பார்த்தான்.

"ஸந்த்யாவை எடுத்துண்டு அப்பவே மோஹனா வெளில போயிட்டாளே, பரத்... உன்கிட்ட சொல்லலையா?"

பரத் காபி குடித்து முடிக்கும்வரை மேற்கொண்டு ஜெயம்மா ஒன்றும் பேசவில்லை. காலி தம்ளரை அவன் நீட்டியதும் வாங்கினவள், ஏதோ சொல்லத் தயங்குவதுபோல அங்கேயே நின்றாள்.

"என்னம்மா?"

"வந்து..."

"சொல்லும்மா... என்ன விஷயம்?"

"நீ மோஹனாவை எதுக்காவது கோச்சுண்டியாப்பா?"

"..............."

"இல்லே... கார்த்தால நீ போனப்பறம், கீழ எறங்கிவந்தவ மூஞ்சி நன்னாவேயில்லே... அழுது உப்பின மாதிரி சிவந்திருந்தது... உடம்பு சரியில்லாத பொண்ணு... அவளை ராக்கண்ணு முழிக்கவெக்காதேன்னா நீ கேக்கமாட்டேங்கறே... என்ன புது வருஷமோ, என்ன பார்ட்டியோ... எனக்கு ஒண்ணும் பிடிக்கலப்பா!"

பரத் 'ரீடர்ஸ் டைஜஸ்டை' எடுத்துப் புரட்டினான்.

"ஏம்மா எப்படியோ இருக்கேனு அவளைக் கேட்டேன்... 'ஒண்ணுமில்லே, தலைவலி... ராத்திரி சரியா தூக்கம் இல்லாததால ஜலதோஷம் பிடிச்சிருக்கு'னு சொன்னா... என்னமோ சமாளிக்கற பேச்சா எனக்குப் பட்டுது! டிபன் சாப்பிட வான்னேன்... வேண்டாம்னுட்டா. வெறும் காபியைக் குடிச்சிட்டு, தனியா உக்காந்துண்டு யோசிச்சுண்டேயிருந்தா... பன்னெண்டு மணி வாக்குல வெளில கிளம்பினா... 'தலைவலிங்கறே, எங்கம்மா போறே?'ன்னேன்... 'அவசரமா ஒரு வேலைய கவனிக்கணும், இதோ வந்துடறேன்'னு போயிட்டு, அரைமணில வந்தா... ரெண்டு வாய் சாதம்கூட சாப்பிடலை... மாடிக்குப் போய் ஸந்த்யாவை அழைச்சுண்டு போயிட்டா... அவளுக்கு என்னமோ வேதனை... சொல்ல மாட்டேங்கறா... நீயாவது என்ன ஏதுன்னு கேக்கக் கூடாதா, பரத்? அவளுக்கும் நம்மைவிட்டா வேற யாரு, சொல்லு..."

பரத் எதற்கும் பதில் சொல்லாமல் கல்லுளிமங்கன்போல உட்கார்ந்திருக்கவே, ஜெயம்மா அதோடு பேச்சை முடித்துக்கொண்டு கீழே போனாள்.

பரத் பால்கனிக்குச் சென்றான்.

மாலைக்காற்று உடம்பை இதமாக வருடிக்கொடுத்தது.

பறவைகள் கூட்டுக்குத் திரும்பும் உற்சாகத்தோடு கூட்டமாய்ப் பறந்து சென்றன.  

அலுப்பாக இருந்தது.

ராக்கிங் சேரில் உட்கார்ந்து கண்ணை மூடியவன், தன்னை மறந்து தூங்கியிருக்க வேண்டும்.

திரும்ப திடுக்கிட்டுக் கண்ணை விழித்தபோது, இருட்டு ஆளைத் தழுவிக் கொண்டிருந்தது.

வானத்தில் இங்குமங்குமாய் நட்சத்திரங்கள் மினுமினுத்தன.

மணி என்ன?

ரேடியம் டயல் வாட்ச், ஏழரை என்றது.

மோஹனா வந்துவிட்டாளோ? ஏன் மேலே வரவில்லை? குழந்தையின் சப்தத்தையே காணோமே!

பால்கனிக் கதவருகே யாரோ வந்து நிற்பது புரிய, பரத் திரும்பினான்.

அம்மா...

"மணியாச்சு... இன்னும் அவாளைக் காணுமே, பரத்?"

பரத் பெரிசாய் கொட்டாவி விட்டான்.

"எங்க போறதா சொல்லிட்டுப் போனாம்மா?"

"எங்கன்னு நானும் கேக்கலை, அவளும் சொல்லலை... சாதாரணமா குழந்தையோட பீச், அங்க இங்கனு போற மாதிரிதான் போயிருப்பானு நினைச்சேன்..."

பரத் பதில் பேசுவதற்குள் தோட்டத்தில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

"வந்துட்டா... அதுக்குள்ள நா அசட்டுத்தனமா பயந்துபோயிட்டேன், பாரு..."

ஜெயம்மாவைத் தொடர்ந்து பரத்தும் கீழே போனான்.

வாசல் வராந்தாவில் டிரைவர் நின்றிருந்தான்.

"அம்மாவும் குழந்தையும் எங்கப்பா?"

"அவங்க வரலீங்க... என்னை மட்டும் காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போகச் சொன்னாங்க... வந்திட்டேன்..."

இது என்ன புதுப் பழக்கம்? எங்கு தனியாய் இறங்கிக்கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பியிருக்கிறாள்?

"வீட்டுலேந்து புறப்பட்டதும் நேரா கபாலி காவிலுக்குப் போயி ரொம்ப நேரம் இருந்தாங்க... அங்கயிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வண்டிய விடச் சொன்னாங்க... அங்க எறங்கிக்கிட்டு, நீ வீட்டுக்குப் போயிடுன்னாங்க... நீங்க எப்படிம்மா வருவீங்கன்னேன்... தெரிஞ்சவங்க வண்டி வந்திருக்கு, வந்துடுவேன்னு சொல்லிட்டு, குழந்தையோட விடுவிடுன்னு உள்ள போயிட்டாங்க..."

பரத்திற்கும் ஜெயம்மாவுக்கும் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.

ஸ்டேஷனுக்கு எதற்காக மோஹனா போகவேண்டும்? அப்படியே போனாலும், காரை ஏன் அனுப்பவேண்டும்? அதென்ன 'தெரிஞ்சவங்க வண்டி'? யார் வண்டியில் திரும்பி வர உத்தேசம்?

"என்னப்பா, பரத்... மோஹனா யாரைப் பாக்கப் போயிருக்கா? குழந்தைக்கு சாப்பாட்டு நேரமாச்சே! இப்படிப் பொறுப்பில்லாம அவ போகமாட்டாளே!"

உள்ளுக்குள் உண்டான கோபம் லேசாகக் குரலில் வெளிப்பட, "அவ என்ன சின்னக் குழந்தையாம்மா? தானே வருவா... கவலைப்படாதே..." என்று சொன்ன பரத், திரும்ப மாடிக்கு வந்தான்.

எங்கே போய்விட்டாள்?

கோவில், அப்புறம் ஸ்டேஷன்... என்ன நடக்கிறது இங்கே?

எதுவும் புரியாத அவஸ்தையில், கோபம் மட்டும் நன்றாக எழுந்து நெஞ்சை அடைத்துக் கொள்ள, அறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்தின நிமிஷத்தில்தான்... ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல், நளினியின் புகைப்பட சட்டத்தில் சொருகிவைக்கப்பட்டிருந்த அந்தக் கவரை பரத் பார்த்தான்.

சட்டென்று கண்ணில் படும்படி துருத்திக்கொண்டிருந்ததை, எப்படி இத்தனை நாழிகை பார்க்கத் தவறினோம் என்ற நினைப்புடன் கையில் எடுத்தான்... பிரித்தான்...

'பரத்' என்று துவங்கியிருந்த மோஹனாவின் கையெழுத்தைக் கண்டதும், வயிற்றில் குடல் ஒருமுறை முடிச்சுப் போட்டுக்கொண்டு சிலிர்த்தது. திடுமென்று இதயத்தில் ரத்தம் ஜில்லிட்டது.

மோஹனா லெட்டர் எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறாளா? அப்படி யென்றால்...?

'பரத்...

நேத்து ராத்திரி நீங்க அளவுக்கு மீறி பேசிட்டேள். என்னால தாங்கமுடியாத அளவுக்கு மனசைப் புண்படுத்திட்டேள். ஸோ, நா போறேன்.

'உங்கம்மா ஒரு தேவடியா, நீ ஒரு கால் கேர்ல்... உங்க பரம்பரை ரத்தத்துல விபசாரித்தனம் இருக்கு! அதனால, உனக்கு ஒரு பெண் பிறந்தா அதுவும் தெருநாய் குணம் கொண்டதாய்த்தான் இருக்கும்'னு சொன்னேள்... தப்பு பரத்! நீங்க சொன்னது ரொம்ப தப்பு! எங்கம்மா நடத்தைகெட்டவ இல்லே... மனுஷத்தனமே இல்லாத புருஷனை விட்டு வந்தாளே ஒழிய, அவ தேவடியாளா ஒருகணம்கூட இருந்ததில்லே! அவ பவித்ரமா வாழ்ந்ததை என் கண்ணால நா பாத்திருக்கேன்!

நா கால் கேர்லா இருந்தவதான்... இது நானே உங்ககிட்ட ஒத்துண்ட சமாச்சாரம். அப்படி கால்கேர்லா வாழ என்னைத் துரத்தின காரணங்களை உங்களுக்கு நா ஏற்கனவே சொல்லியாச்சு. என் உடம்புல ஓடற ரத்தத்துக்கும், நா வாழ்ந்த வாழ்க்கைக்கும் சத்தியமா சம்பந்தம் இருந்ததில்லே... இருக்க முடியாது.

ஒரு பெண் பதிவிரதையா வாழறதுக்கோ, கெட்டுப்போய் சீரழியறதுக்கோ, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மட்டும்தான் காரணங்கறதை நீங்க என்னிக்கு புரிஞ்சுக்கப்போறேள், பரத்? நிழல்லியே பிறந்து, நிழல்லியே வளர்ந்து, நிழல்லியே வாழ்ந்துண்டிருக்கற நீங்க, வெயிலோட கொடுமைன்னா என்னன்னு உணரணும், பரத்... அப்பத்தான் என் நிலைமை, என் வேதனை எல்லாம் உங்களுக்கு நன்னா புரியும்!

உங்களுக்கு இந்த உலகத்தை நா புரியவைக்கப்போறேன்... அசிங்கம், கேவலம் எல்லாம் அனுபவிக்கறதுக்கு எப்படியிருக்கும்னு உணர்த்தப் போறேன்!

பரிசுத்தமான உங்க நளினிக்குப் பிறந்த ஸந்த்யாவை, நா என் வழில வளர்த்து, அவளை ஒரு கைதேர்ந்த விபசாரியா, கால் கேர்லா, தெருநாயா உருவாக்கிக் காமிச்சா, நீங்க என்ன பண்ணுவேள், பரத்? உங்க ஸந்த்யாவைச் சில வருஷங்கள்ல அப்படிப் பாக்கறச்சேயாவது, இந்த விபசாரத்தனமும் தேவடியாத்தனமும், பரம்பரையா வம்சத்துல வர குணங்கள் இல்லே... வாழற, பழகற சூழ்நிலைதான் இதுக்கு அடிப்படைக் காரணம்னு நீங்க புரிஞ்சுப்பேள், இல்லியா?

உங்க நளினியின் பெண்ணை, ஒரு முதல்தரமான விபசாரியா மாத்திக் காட்டறேன், பரத்... இது சத்தியம்!

இந்த சத்தியத்தை நிறைவேத்தற வரைக்கும் நா சாகவும் மாட்டேன், நாங்க எங்க இருக்கோம்னு நீங்க கண்டுபிடிக்கவும் விட மாட்டேன்.

பேப்பர்ல விளம்பரம் பண்ணி விஷயத்தைப் பகிரங்கப்படுத்தி எங்களைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணேள்னா, குழந்தைக்கு விஷம் குடுத்துட்டு நானும் செத்துப் போகத் தயங்க மாட்டேன்... ஞாபகம் இருக்கட்டும்!

எனக்கு இப்படியொரு அசிங்கமான வெறியைத் தூண்டிவிட்டது நீங்கதான்... அதனால, உங்களை நீங்களே நொந்துக்கறதைத் தவிர வேற வழியில்ல.

- மோஹனா.

 (தொடரும்)