பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 24

பதிவு செய்த நாள் : 24 ஏப்ரல் 2017"நா கேக்கக்கேக்க நீ பேசாம இருந்தா, என்ன அர்த்தம்? திமிரா?"

கொண்டையிலிருந்து பின்களை எடுத்து மேஜைமேல் வைத்த மோஹனா, ஆயாசத்துடன் திரும்பினாள்.

பரத் இப்படிக் கேட்பது மூன்றாவது முறை. ஏற்கனவே இரண்டு தடவைகள் கேட்டபோது, மெளனமாய் இருந்த தினுசில் இப்போது இருக்க முடியவில்லை.

"ஆல்ரைட்... என்ன சொல்லணும், பரத்?"

"என்ன நடந்ததுன்னு சொல்லு..."

"எங்க?"

"புரியாத மாதிரி நடிக்காதே, மோஹனா... அங்கதான்... அந்த இருட்டுல என்ன நடந்தது?"

"ஒண்ணும் நடக்கலை, பரத்..."

"லையர்... யூ ப்ளடி லையர்! பொய் சொல்லாதே... எனக்குப் பிடிக்காது!"

ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு மேல் இருந்த கண்ணாடியில் தெரிந்த பரத்தின் பிம்பத்தில் காணப்பட்ட முரட்டுத்தனம், மோஹனாவின் வயிற்றில் சிலிர்ப்பை உண்டாக்கியது.

"சொல்லு, என்ன நடந்தது?"

மோஹனா திரும்பி அவனை வெறித்துப் பார்த்தாள்.

"ஒண்ணும் நடக்கலைன்னா உங்களுக்கு ஏன் நம்பிக்கை வரலை, பரத்? சத்தியமாச் சொல்றேன், ஒண்ணுமே நடக்கலை!"

"உன் சத்தியத்தைத் தூக்கி உடைப்புல போடு! அந்த இருட்டுல ஒண்ணுமே நடக்கலைன்னு என்னை நம்பச் சொல்றியா? அதுக்கு வேற ஆளைப் பாரு! எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..."

குனிந்து இரு கையிலும் முகத்தைப் பதித்துக்கொண்ட மோஹனாவுக்கு, 'ச்சே...' என்றிருந்தது.

கிரியைக் கண்டதுமே, இன்றைக்கு என்னவோ விபரீதம் நடக்கப்போகிறது என்று மனசு பயந்தது சரியாகிவிட்டதென்று தோன்றியது.

பன்னிரண்டு மணிக்குப் புது வருஷம் பிறந்து, விளக்குகள் அணைந்து மீண்டும் எரிந்தபின், தனக்கு ஒருபக்கம் தஸ்தூரும், மறுபக்கம் கிரியும் நெருக்கமாய் இருப்பதையும், சற்றுத்தள்ளி குத்திட்ட பார்வையுடன் பரத் நிற்பதையும் கண்ட மோஹனாவுக்கு, பகீரென்றது நிஜம்தான்.

அந்த பகீர் வீணாக எழவில்லை...

கையில் கிளஸுடன் அருகில் வந்த பரத், கிரியை முறைத்தான். மோஹனாவைப் பார்த்து, "போலாம், கிளம்பு..." என்று அதட்டினான்... கிளம்பிவிட்டான்.

'சாப்பிட்டுவிட்டுப் போகலாம்' என்று யார்யாரோ தடுத்ததைக் காதில் வாங்காமல், மோஹனாவுடன் காரில் அமர்ந்து, கிளம்பி, அதை அதிவேகமாக - மோஹனா பயந்து போகுமளவுக்கு - செலுத்தியவன், அடிக்குரலில், "உன் பாய்ப்ரெண்டை மீட் பண்ணதுல உனக்கு சந்தோஷமா இருந்திருக்குமே! என்ன நடந்ததுன்னு சொல்லு..." என்றான்.

மோஹனா பதில் ஏதும் பேசவில்லை.

கார் வீட்டையடைந்து நின்றது. வேகமாய் இறங்கி உள்ளே நுழைந்து மாடிப்படிகளில் மோஹனா ஏறிய நிமிஷத்தில், நிதானமில்லாத அவசரத்துடன் அவளை எட்டிப்பிடித்த பரத், மறுபடி சற்றுமுன்பு கேட்டதையே கேட்டான்.

மெளனமாய் படிகளைக் கடந்து, அறைக்குள் புகுந்து, கையை முறுக்கி தன்னை அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு, ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் மோஹனா உட்கார்ந்ததும், மூன்றாவது முறையாக மீண்டும் பரத் தன் கேள்வியை எழுப்பின சமயத்தில், அவன் குரலில் கோபம் ஏகமாய்க் கூடியிருந்தது.

மனசில் வேதனை, சலிப்போடு, உடம்பின் அலுப்பும் சேர்ந்துகொள்ள, மோஹனா கைகளில் புதைத்திருந்த முகத்தை நிமிர்த்திக் கணவனைப் பார்த்தாள்.

சாப்பிடாமல் வெறும் வயிறோடு மதுவருந்தியதில், போதை வழக்கத்தைவிட இன்று அதிகமாகவே இருக்கிறதோ? நடந்ததை விவேகத்தோடு அணுகும் நிதானம் இல்லாதவரை, இப்போது எப்படிச் சமாளிக்க வேண்டும்? குழந்தையைச் சமாதானம் செய்கிற ரீதியில் எதையாவது சொல்லி சரிக்கட்டி, முதலில் இவரைக் கொஞ்சம் சாப்பிடச் செய்து, தூங்கப் பண்ணிவிட வேண்டுமா?

"கேக்கறது காதுல விழலை? என்ன பேசினான் அந்த அயோக்கிய ராஸ்கல் உன்னோட? சொல்லு..."

"ஒண்ணும் பேசலை, பரத்... ப்ளீஸ், சொன்னாக் கேளுங்கோ! தஸ்தூரோட நா நின்னுண்டிருக்கறப்போ, பன்னெண்டு அடிக்க அஞ்சு நிமிஷம் இருக்கறச்சேதான், கிரி வந்தான்... எங்களை தஸ்தூர் அறிமுகப்படுத்தினார்... 'ஹலோ'னு சொல்றதுக்குள்ள அணைஞ்சுபோன விளக்கு, திரும்ப ரெண்டு நிமிஷத்துல வந்துடுத்து... நாங்க ரெண்டு பேரும் ஒரு வார்த்தைகூடப் பேசலை... நம்புங்கோ!"

"பொய்... சுத்தப் பொய்! நா நம்ப மாட்டேன்... அவன் உன் கையைப் பிடிச்சிண்டிருந்ததை நா பார்த்தேனே..."

மோஹனா கொஞ்சம் யோசித்தாள். கிரி என் கையைப் பிடித்தானா? கையைப் பிடித்தது தஸ்தூர்தானே? ஒருவேளை, 'ஹாப்பி நியூ இயர்' என்று சொல்ல கையைப் பற்றினானோ? அந்த அமர்க்களத்தில் ஒன்றுமே தெளிவாய் ஞாபகம் இல்லையே!

பரத் எழுந்து கிட்டத்தில் வந்தான். முரட்டுத்தனமாய் அவள் தோள்களை அழுந்தப் பிடித்தான்.

"சொல்லு... உன் கையை அவன் பிடிச்சான்... அப்பறம்?"

முகத்துக்கு வெகு அருகாமையில் பரத்தின் முகம் இருக்க, உஷ்ணமான விஸ்கி சுவாசம் கன்னத்தில் அடிக்க, மோஹனா சின்ன சுளிப்புடன் பின்னுக்கு நகர்ந்து கொண்டாள்.

"ஏன், பிடிக்கலையா? நா கிட்ட வந்தா, பிடிக்கலையா?"

"நீங்க இன்னிக்கு ரொம்ப குடிச்சுட்டேள், பரத்... யூ ஸ்டிங்க்..."

தழையத்தழைய, விடாமல் பரத் சீண்டுவது துன்பத்தைத் தர, எரிச்சலோடு மோஹனா பேசினாள்.

"ஹா, ஐ ஸ்டிங்க்! கிரி எப்படி? அவன் வாசனையா மணத்தானா?"

இன்னது பேசுகிறோமென்ற உணர்வில்லாமல் பேசுமளவுக்கு பரத் குடித்திருக்கிறார்... இப்போது பேசாமல் இருப்பதுதான் நல்லது. பேசிக்கொண்டே போனால் எத்தனை நாழிக்குத்தான் என்னாலும் சும்மா கேட்டுக்கொண்டிருக்க முடியும்?

தன்னைப் பற்றியிருந்த பரத்தின் கரங்களை உதறித் தள்ளிவிட்டு மோஹனா எழுந்தாள். இனி உங்களோடு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்கிற தினுசில் அவனை உற்றுப் பார்த்தாள். இரண்டடி நகர்ந்து பாத்ரூமுக்குள் நுழையப்போனாள்.

தோளிலிருந்து தொங்கிய புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்து அவளை நிறுத்தின பரத், அவளை சுவரோடு அழுந்த இருத்தி, இப்படியப்படி நகர முடியாதபடி இரண்டு பக்கமும் கைகளை ஊன்றிக்கொண்டான்.

பரத்தின் முரட்டுத்தனமும் அடாவடித்தனமும் கொஞ்சமும் பிடிக்காமல் மனசு விறைக்கத் தொடங்கிவிட்டதை உணர்ந்து, மோஹனா கண்களை மூடிக்கொண்டாள்.

தன்னிடம் வகையாய் மாட்டிக்கொண்டவளின் அவஸ்தையை ரசிப்பதுபோல பரத் சிரித்தான். பிறகு சட்டென்று குனிந்து, வலிக்க அவள் உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்.

மோஹனா திமிறினாள்.

"விடுங்கோ, பரத்... என்னைத் தனியா விடுங்கோ..."

வார்த்தைகள் முழுசாய் வெளியில் வராமல் பரத்தின் உதடுகளின் அழுத்தத்தில் உடைந்துபோயின.

தன் பலத்தைத் திரட்டி இரண்டு கைகளையும் பரத்தின் மார்பில் பதித்து, அவனை நெட்டித் தள்ளினாள். பரத்தின் முரட்டுத்தனத்தால் உதட்டோரத்தில் ரத்தம் கசிவது புரிந்தது.

"ஏகமா குடிச்சிருக்கேள்... குடிவெறில என்ன பேசறோம், என்ன பண்றோம்னுகூட உங்களுக்குப் புரியலை..."

பரத் கோணலாய் சிரித்தான்.

"நா குடிவெறில நடந்துக்கலை, மோஹனா... உனக்குத்தான் கிரி கிஸ் பண்ணினப்பறம் நா பண்றது பிடிக்கலை! அவன் கிஸ் பண்ணினான், இல்லியா?"

கடவுளே! பரத்... என் பரத்தா இத்தனை கேவலமாய்ப் பேசுகிறார்?

"ஓ, ஸ்டாப் இட்! இப்படிப் பேச உங்களுக்கு வெக்கமா இல்லே? இத்தனை அசிங்கமா உங்களால எப்படி பரத், நினைக்க முடியறது?"

கோபத்தோடு சீறின மோஹனாவின் கண்களில் முத்துக்கள் பளபளக்கத் தொடங்கி விட்டன.

"நீ அசிங்கமா நடந்துண்டதை விடவா நா அசிங்கமா பேசிட்டேன்?"

இனிமேல் என்னால் தாங்கமுடியாது என்பதுபோல கட்டிலில் உட்கார்ந்து மோஹனா விசிக்கத் தொடங்கினாள்.

அந்த அவஸ்தையும் கண்ணீரும் சரியான நீலித்தனமாய்த் தோன்ற, பரத் உரக்கக் கத்தினான்.

"கிரியைப் பாத்த உடனே அந்த எடத்தை விட்டு நகர்ந்திருக்க வேண்டியதுதானே? நியாயமா நீ அதைத்தானே பண்ணியிருக்கணும்? அப்படிச் செய்யாம, அங்கேயே நின்னு, இருட்டுல கண்டபடி நடந்துண்டதுமில்லாம, என்னைப் பாத்து அசிங்கமா பேசாதீங்கோன்னு சொல்றே! ஹெள டேர் யூ!"

பரத்தின் குரல் அந்த ராத்திரிப் பொழுதில் ரொம்ப உயர்ந்து ஒலிப்பதாய்த் தோன்ற, மோஹனா தலையைத் தூக்கினாள்.

"ஏன் கத்தறேள், பரத்? கீழே இருக்கற அம்மாவுக்கு இதெல்லாம் கேக்கணுமா? ப்ளீஸ்... போதுமே..."

"கேட்டா என்ன? நன்னா கேக்கட்டும்! தலைல வெச்சுண்டு கூத்தாடற மாட்டுப் பொண்ணோட யோக்கியதை அம்மாக்கு நன்னா தெரியட்டும்! நாயைக் குளிப்பாட்டி நடுஹால்ல வெச்ச கதை, உன் விஷயத்துல சரியாயிடுத்து! அப்பறம் பேச்சென்ன, அழுகை என்ன!"

நாய் என்று சொல்லும் அளவுக்கா பரத் தாழ்ந்துபோய்விட்டார்?

இந்தப் படிப்பும் குடும்பமும் வேலையும் அந்தஸ்தும், வெறும் வெளிப்பூச்சுதானா? உள்ளுக்குள் இந்த அழுகலா? நாற்றமா? விவஸ்தையில்லாமல் பரத் பேசும் பேச்சுக்களைக் கேட்டுக்கொள்ள எனக்கு என்ன விதி? அவர் என் கணவர் என்பதற்காகவா? முடியாது, நான் மாட்டேன்... பல வருஷங்களாய் தனக்கென்ற சுதந்திரத்துடன் வாழ்ந்து பழகிவிட்ட மனசு, இனி அடங்கமாட்டேன் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.

"என்னை இவவளவு மட்டமானவளா உங்க அடிமனசுல நினைக்கறப்போ, நா சொல்றது எதுலயுமே உங்களுக்கு நம்பிக்கை வராதப்போ, நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிண்டதே பெரிய தப்பு, பரத்..."

"ஆமா, தப்புதான்... பெரிய்ய தப்பு பண்ணிட்டேன்! நிம்மதியா இருந்த என் வாழ்க்கைய நீ வந்து குழப்பிட்டே... நளினி இருந்த எடத்தை நீ வந்து அசுத்தப்படுத்திட்டே..."

போதை ரொம்ப அதிகமாக இருந்ததால் குழறிப் பேசின பரத், திடீரென்று அழத் தொடங்கினான். அந்த அழுகை நிற்காமலேயே, விருந்து உடையைக் கழட்டாமலேயே படுக்கையில் குறுக்காக விழுந்தான்.

"தப்பு பண்ணிட்டேன்... இனிமே ஆயுசுக்கும் உன்னோட நா வேதனைப்பட்டாகணுமா? கடவுளே... என்னைக் காப்பாத்து... இத்தனை பெரிய தண்டனை கிடைக்க நா என்ன பாவம் பண்ணினேன்?"

குப்புறப் படுத்தவாறு வாய்விட்டு அரற்றுபவனைக் காண்கையில், மோஹனாவுக்குத் தன் கண்களையே நம்பமுடியாமல்போயிற்று.

இது பரத்-தானா?

சத்தியமாய் பரத்-தானா?

அழுகையும் புலம்பலும் நாடகவசனமுமாய்... என்ன இதெல்லாம்?

இப்படிக்கூடவா ஒரு மனுஷனுக்குள் இன்னொரு மனுஷன் ஒளிந்துகொண்டு ஆட்டிவைக்க முடியும்?

சில நிமிஷங்களில் புலம்பல் அடங்கிப்போனவனாய் மயக்கத்துடன் பரத் கண்களைத் திறந்து மோஹனாவைப் பார்த்தான்.

"உனக்கு அபார்ஷன் ஆனதை நினைச்சு இந்த நிமிஷம் நா ரொம்ப சந்தோஷப்படறேன், மோஹனா... ஏன்னா, உங்கம்மா புருஷனை விட்டுட்டு இன்னொருத்தனோட ஓடிவந்தவ... ஊரும் உலகமும் அவளைத் தேவடியான்னுதானே சொல்லித்து? நீ டெல்லி புகழ் கால் கேர்ல்! கல்யாணமாகி என்னோட வாழறப்பவே உன் தெருநாய் குணத்தக் காட்டிட்டே! இந்த விபச்சார புத்தி உங்காத்துல பரம்பரையா வரது போலருக்கு! முதல்ல உங்கம்மா, அப்பறம் நீ! உனக்கு அபார்ஷன் ஆகாம, அது ஒரு பொண்ணா பிறந்திருந்துதுன்னா... கடவுளே! நிச்சயம் அதுவும் உங்களை மாதிரிதான் இருந்திருக்கும், இல்ல? அதே ரத்தம்தானே? நல்லவேளை... நல்லவேளை..."

கடைசி வார்த்தைகள் சப்தம் குறைந்தவையாய் வெளிப்பட, சரியாய் ஒரு நிமிஷத்துக்குள் மயக்க ராட்சஸன் ஆளைப் பிடித்து அமுக்க, பரத் தன் நினைவில்லாத உறக்கத்தில் ஆழ்ந்துபோனான்.

ரொம்ப நேரத்துக்கு அந்த வார்த்தைகள் உண்டாக்கிய வலியில் மோஹனா ஜடமாய் உட்கார்ந்திருந்தாள்.

என்ன வார்த்தை சொல்லிவிட்டார்!

ஒன்றுமே நடக்காதபோது, குடி மாயையில் தானே எதையோ கற்பனை பண்ணிக்கொண்டுவிட்டு, என்ன வார்த்தை சொல்லிவிட்டார்!

என்ன சொன்னார்... நாங்கள் விபசாரி வம்சம் என்றா? ஒரே விபசார ரத்தம் ஓடுகிறதென்றா? உன் அம்மா ஒரு நடத்தைகெட்டவள், நீ புகழ்பெற்ற கால் கேர்ல் என்றா?

என்ன சொன்னார்... உனக்கு ஒரு பெண் பிறந்தால் நிச்சயமாய் அவளும் ஒரு விபசாரியாய்த்தான் இருப்பாள் என்றா?

என்னதான் குடிவெறி என்றாலும், இந்த வார்த்தையை ஒரு கணவன் சொல்லலாமா?

அப்புறம் அவன் மனுஷன்தானா?

அழுகையை மறந்து மனசும் உடம்பும் விறைத்துப்போனதில், அப்படியே மோஹனா விடியும்வரை ஸ்தம்பித்திருந்தாள்.

"மோஹனா..." என்று ஜெயம்மாவும், "அம்மா..." என்று ஸந்த்யாவும் அழைத்து மெல்லியதாய்க் கதவைத் தட்டினபோதுகூட, எழுந்துபோய் கதவைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பரத் கண் விழிப்பதற்காகவும், 'ஐயோ... என்ன பேச்சு பேசிட்டேன், டார்லிங்! மன்னிச்சுடு!' என்று மனமுருக வேண்ட போவதற்காகவும் காத்திருக்கிற மாதிரி, படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தாள்.

ஒன்பது மணி அளவில் பரத் கண்ணை விழித்தான்.

தலை கல்லாய் கனத்தது. ஒன்றும் புரியாத ஒரு மசமசப்பு.

கண்களைப் பிரித்துப் பார்த்தபோது, வெளுத்து இறுகிய முகத்தோடு மோஹனா அமர்ந்திருப்பது புரிய, கண்களைத் திரும்ப மூடிக்கொண்டான்.

நேற்று நிறைய குடித்துவிட்டேனா?

வழக்கம்போல தப்பாய் ஏதாவது பேசிவிட்டேனா?

பிரயத்தனப்பட்டு யோசித்தவனுக்கு, புதுவருஷ இருட்டும், மறுபடி விளக்கு வந்தபோது கிரி மோஹனாவின் அருகில் நின்றதும், தான் வீட்டுக்கு வந்து என்ன நடந்தது என்று கோபமாய்க் கேட்டதும் ஞாபகத்துக்கு வந்தன.

கடைசியாய் நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பேச்சுக்கள் ஏனோ அந்த நிமிஷம் நினைப்பில் தலைகாட்ட மறுத்ததால், 'இவள் தப்பாக நடந்துகொண்டாள், நான் கோபித்துக்கொண்டேன்... அதற்காக வருத்தப்படுவானேன்?' என்ற சமாதானம் இதயத்தைத் தட்டிக்கொடுக்க, ஒவ்வொரு தடவையும் ஏன் நான் விழுந்தடித்துக்கொண்டு ஸாரி சொல்ல வேண்டும்? இந்த முறை சொல்லப்போவதில்லை என்று அவனுடைய ஆணாதிக்க மனப்பான்மை முணுமுணுக்க, பரத் எழுந்து குளித்தான். ட்ரெஸ் பண்ணிக்கொண்டான். மோஹனாவை லட்சியமே செய்யாமல், கீழே போய் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஆபீஸுக்குப் புறப்பட்டுப் போனான்.

அந்த 'நான் ஆண்மகன், என்ன வேண்டுமானாலும் செய்வேன், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்வேன்... நீ பெண், அனுசரித்துதான் போகவேண்டும்' என்ற நடத்தை நெஞ்சைப் பிறாண்டிய பிறாண்டலில், அன்று மாலை பரத் வீடு திரும்புவதற்குள் ஸந்த்யாவைத் தூக்கிக்கொண்டு மோஹனா வீட்டைவிட்டுப் போய்விட்டிருந்தாள்.

 (தொடரும்)