ஆழ்வார்திருநகரியில் அருள்புரியும் கோமான்கள் சம்சுத்தீன் (ரஹ்), பக்கீர்பாவா (ரஹ்) வலியுல்லாஹ்க்கள்!

பதிவு செய்த நாள் : 10 ஏப்ரல் 2017 23:48

துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் சம்சுத்தீன் (ர|ழி) வலியுல்லாஹ் தரீக்கா, பக்கீர் பாவா (ரழி) வலியுல்லாஹ் தரீக்கா, ரிபாஈ (ரழி) ஆண்டவர்கள் தரீக்கா, ஹாஜா முஹ்யித்தீன் (ரழி) ஜிஸ்தியா தரீக்கா, தெக்கூர் பீர் அப்பா (ரழி) தரீக்கா ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன.

 ஆழ்வார்திருநகரி அழகியமணவாளபுரத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் நாட்ட, தேட்டங்களை இங்கு சென்று பூர்த்தி செய்கின்றனர். தெக்கூரில் சம்சுத்தீன் வலியுல்லாஹ்வும், வடக்கூரில் பக்கீர் பாவா வலியுல்லாஹ்வும் வீற்றிருந்து ஊர் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பக்கீர்பாவா (ரழி), சம்சுத்தீன் (ரழி) ஆகியோர் கடந்த சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தில் வாழ்ந்து சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. இருவரது வாழ்க்கை வரலாறு யாரும் அறிய முடியாத பொக்கிஷமாக இருந்தாலும், அவர்கள் மூலம் அவ்வூரில் நடந்து கொண்டிருக்கும் கராமத்துக்கள் (அதிசயங்கள்) பற்றி ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம் ஊர்மக்கள் மிகவும் பெருமையாக சொல்கின்றனர்.

* நள்ளிரவில் குதிரையில் வலம் வரும் பக்கீர்பாவா!

‘நபிகள் நாயகம் (ஸல்) பரம்பரையில் வந்துதித்த கலீபாக்களான பக்கீர்பாவா (ரழி), சம்சுத்தீன் வலியுல்லாஹ் ஆகியோர் இஸ்லாத்தை பரப்புவதற்காக கேரளா வழியாக தமிழகத்துக்கு வந்தார்கள். பக்கீர்பாவா திருச்செந்தூர் பகுதிக்கு வந்த போது அவர்களை எதிரிகளான காபிர்கள் கொல்ல திட்டம் போட்டு தேடியலைந்தனர். காபிர்களுடன் நடந்த போரில் பக்கீர்பாவா ஷஹீது (கொலை) செய்யப்பட்டார்கள். எதிரிகள் பக்கீர் பாவாவை வயிற்றில் ஈட்டியால் குத்தியதால் அவர்களது குடல் சரிந்து ரத்தம் கொட்டியது. தலைப்பாகையை துணியால் சரிந்த குடலை வயிற்றுடன் சேர்த்து கட்டிக் கொண்டு வெள்ளை நிற குதிரையில் திருச்செந்தூர் நோக்கி சென்றார்கள். செல்லும் வழியில் ஆழ்வார்திருநகரி கிராமத்துக்குள் அவரது உயிர் அல்லாஹ்வால் பறிக்கப்பட்டது. அங்கேயே முஸ்லிம்கள் வாழும் வாய்க்கால் கரையோரம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதே போல் தெக்கூரில் இறைநேசச் செல்வராக வாழ்ந்து மறைந்த சம்சுத்தீன் அவ்லியா சிறந்த தவஞானியாக திகழ்ந்தவர். பக்கீர்பாவா வலியுல்லாஹ் ஆழ்வார்திருநகரியில் அடங்கப்பட்டது முதல் அங்கு பல அதிசய நிகழ்வுகள் நடந்தேறின. அவர்கள் மறைந்த மாதமான புனித ரஜபு பிறையில் 1–ம் நாள் முதல் தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் பக்கீர் பாவா, குதிரையில் பயணம் செய்வது போன்ற குதிரை காலடி சப்தங்களை ஊர் மக்கள் கேட்டுள்ளனர். குதிரையில் வலம் வந்து ஆழ்வார்திருநகரி ஊரை காக்கும் கோமானாக பக்கீர்பாவா திகழ்கிறார். அவரது ஆன்மா என்னும் ‘ஒளி’ ஆழ்வார்திருநகரியை சுற்றி வலம் வந்து ஆசீர்வதித்து கொண்டிருக்கிறது என்பதுதான் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

* சமாதியை சுற்றி வந்த ‘தாயிரா!’

பக்கீர்பாவா கந்தூரி வைபவம் நடந்து கொண்டிருந்த சமயம். யானை மீது கொடி ஊர்வலம் 8 தெருக்களில் தாயிரா முழங்க வலம் வந்து கொண்டிருந்து. அப்போது திடீரென அதிகாலை நேரத்தில் தர்காவுக்குள் வைத்திருந்த ‘தாயிரா’க்கள் (கொட்டு) பக்கீர்பாவா சமாதியை தானாக நான்கு திசைகளிலும் சுற்றி சுற்றி வந்து ‘டம்... டம்...’ என அதிர்ந்த படி அடித்தது. இதனைக் கண்ட ஊர் மக்கள் ஆச்சர்யத்தில் அசந்து போயினர். இது ஒரு அற்புதமான அதிசய நிகழ்வு என ஊர்மக்கள் ஒரு வித நடுக்கத்துடன் சொல்கின்றனர்.

* கனவில் வந்து காட்டிய ‘காரணம்!’

பக்கீர்பாவா மீது மிகுந்த பற்று உள்ள ரஜபு முஹ்யத்தீன் என்பவருக்கு ஒரு நாள் கனவு ஒன்று வந்தது. அதில் பக்கீர் பாவா வலியுல்லாஹ்வின் கப்ர் (சமாதி) தோண்டப்பட்டு கிடப்பது போலவும், அதற்குள் பச்சை தலைப்பாகை கட்டிய ஒருவர் அமர்ந்திருப்பது போலவும் அந்த கனவில் காட்டியது. அதற்கு விடை தெரியாமல் விழித்த அவர், ஊர் ஆலிம்மிடம் சென்று அந்த கனவுக்கு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘தோண்டப்பட்ட கப்ரை உடனே மூடவேண்டும்’ என்பதுதான் அதன் அர்த்தம். உடனே அவர்கள் ஓடோடி சென்று பக்கீர் பாவா நினைவிடத்தை சென்று பார்த்துள்ளனர். சமாதியைச் சுற்றிலும் ஓட்டை உடைசல்கள் ஏற்பட்டு மிகவும் சிதிலமடைந்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக பூங்கற்கள் பதித்து அந்த சமாதியை செப்பனிட்டனர்.

* குழந்தைப்பேறு, திருமணத்தடை காரியங்கள் ஜெயம்!

திருமணமாகாதவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பக்கீர்பாவா, சம்சுத்தீன் அவ்லியாக்கள் அடக்கத்தலத்தில் சென்று தங்கள் குறைகளை, வியாழக்கிழமை இரவு அன்று அகல் விளக்கேற்றி வைத்து முறையிட்டால், அவை அல்லாஹ்வின் அருளால் தீர்கின்றன என்பது ஆழ்வார்திருநகரி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கந்துாரி நாட்களில் ரஜபு பிறையில் பிறக்கும் குழந்தைகளின் கைகளில் பச்சை வர்ணக் கொடியை ஏந்தி, வாழைக்குலைகளுடன் அதனை பக்கீர் பாவா சமாதியில் கொண்டு வைக்கும் அழகே தனி என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். தர்காவுக்குள் மேற்கு திசையில் குவிந்து கிடக்கும் அந்த நேர்ச்சை கொடிகள் பார்ப்பதற்கு பசுமையாக காட்சியளிக்கும் என்றும் பெருமை கொள்கின்றனர்.

* விளக்கு அலங்காரம், நெய்சோறு நேமிதத்துடன் கந்தூரி உரூஸ் வைபவம்!

கிபி 1915, ஹிஜ்ரி 1333ம் ஆண்டு

கட்டப்பட்ட பக்கீர்பாவா வலியுல்லாஹ் தர்கா மற்றும், சம்சுத்தீன் வலியுல்லாஹ் தர்காவில், ரஜபு பிறையில் அவர்களை நினைவுகூரும் வகையில் பிறை 6 ல் இருந்து ஊர்மக்கள் கந்தூரியாக கொண்டாடுகின்றனர். இருவரது அடக்கத்தலங்களுக்கும் வெள்ளை அடித்து வர்ணம் பூசி, கலர் காகிதங்கள், மல்லிகை, ரோஜாப்பூக்களால் அலங்கரித்து, சந்தனம் பூசுகின்றனர். சன்மார்க்கம் தந்த நபிகள் நாயகத்தின் புகழை பறை சாற்றும் அடையாளச் சின்னமான பச்சை நிற அரண்மனைக் கொடியை யானை மீது வைத்து கொடி ஊர்வலம் செல்லும். ஊர்வலத்தில் பேண்டு வாத்தியம் முழங்க  சிலம்பாட்டம், தீப்பந்தம் சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுக்களை சிறார்கள், இளைஞர்கள் நிகழ்த்துவது பார்ப்பவர்களை கவரும். மாலை 5 மணிக்கு துவங்கும் இந்த கந்தூரி வைபவம் அதிகாலை 3 மணிக்கு தீன் கொடியேற்றத்துடன் முடிவடையும். மறுநாள் காலையில் ஊர்மக்களுக்கு நெய் சோறு சமைத்து அதனை நேர்ச்சையாக வழங்குகின்றனர் ஊர்ஜமாத்தார். அன்றைய தினம் இரவு பக்கீர்பாவா, சம்சுத்தீன் அவ்லியா தர்காக்கள் முழுவதும் விளக்கு தீபங்களால் அலங்கரித்து அதனை ‘விளக்கு ராத்திரியாக’ கொண்டாடி, இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரியுடன் கந்தூரியை நிறைவு செய்கின்றனர் ஊர்மக்கள்.

இம்மாதம் ௬ம் தேதி தொடங்கி ௮ம் தேதி வரை கந்துாரி விழா கோலாகலமாக நடக்க இருக்கிறது. நாமும் வலிமார்களை தரிசித்து இறைநேசம் பெறுவோமாக. ஆமீன்!

– செய்யது ஆஷிக்குல்லாஷா ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி