பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 22

பதிவு செய்த நாள் : 10 ஏப்ரல் 2017படித்துக்கொண்டிருந்த புஸ்தகத்தில் புத்தி செல்லவில்லை என்பதை உணர்ந்து, மோஹனா அதை மூடி பக்கத்தில் வைத்தாள்.

எத்தனை நாழிகை படிப்பது?

தினம் ஒரு புஸ்தகம் என்ற கணக்கில் எத்தனை புஸ்தகங்களை முடிப்பது?

லேசாய் எரிந்த கண்களை, விரலால் அழுத்திவிட்டுக்கொண்டவள், எழுந்து படுக்கையறைக்குப் போய் ஸந்த்யாவின் பக்கத்தில் படுத்தாள்.

ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், பொழுது ஓடிவிடும்... ஆனால், தூக்கம் எங்கே வருகிறது!

சுறுசுறுப்பாய் இருந்து உடம்பும் மனசும் பழகிவிட்டது. இப்போது அக்கடாவென்று சோம்பேறியாய்க் கிட, மத்தியானம் தூங்கு என்றால் எப்படி!

இத்தனைக்கும் மோஹனா அப்படியொன்றும் சோம்பி உட்காருவதில்லை.

ஸந்த்யா, பரத் காரியங்களோடு, சமையல், தோட்டம், வீடு என்று எல்லாவற்றையும்தான் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள்.

ஆனாலும், ஹனுமார் வால் மாதிரி அல்லவா பொழுது நீண்டுகொண்டே போகிறது!

வீட்டில் மூலைக்கு மூலை ஆள்... சமையல்காரன், தோட்டக்காரன், டிரைவர், வேலைக்காரி, ஆயா என்று...

ஆபீஸுக்குப் போவதை நிறுத்தின கையோடு, 'இனிமேல் ஆயா எதற்கு, நான்தான் இருக்கிறேனே, ஸந்த்யாவைக் கவனித்துக்கொள்ள' என்று அவளை வீட்டுக்கு அனுப்பிவிட எண்ணியதற்கு ஜெயம்மா சம்மதிக்கவில்லை.

"நீ எதுக்கும்மா கஷ்டப்படணும்? மூணு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம், கொட்டிக்கிடக்கு... அப்பறம் உனக்கு என்ன தலையெழுத்தா!"

"இல்லேம்மா... நா சும்மாதானே இருக்கேன்... அதான்..."

"சும்மா எங்க இருக்கே? ஆள்களைப் பாதிநேரம் கையைக் கட்டி உக்காரவெச்சுட்டு நீதானே மன்னாடறே! வெளிய வாசல்லகூட நீ போறதில்ல... ஒரு கிளப், ஒரு சினேகிதி வீடுன்னு போயிட்டுவாயேன், மோஹனா... ஏன் சதா வீடு, காரியம்னு சிரமப்படறே?"

எங்கே போவது? யார் இருக்கிறார்கள், போய் சீராட!

படுக்கப் பிடிக்காமல் எழுந்து ஹாலுக்கு வந்த மோஹனா, மீண்டும் புஸ்தகத்தைத் தூக்கிக்கொண்டாள்.

பக்கத்தை விரித்து, அதில் கண்களை ஓட்டியபோது, வார்த்தைகள் புத்தியில் பதிய மறுத்ததால், ஆயாசத்துடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

மனசுக்குள் விவரிக்கத் தெரியாத அவஸ்தை... வேதனையா? எரிச்சலா? கோபமா? வலியா? சலிப்பா?

எல்லாம்தானா?

பரத் ஏன் இப்படி மாறிவிட்டார் என்ற வேதனை...

குடித்துவிட்டு வரும் நாட்களில், நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பேச்சுக்கள் தந்த எரிச்சல்... கோபம்...

என்னைப் பார்த்தா அப்படியெல்லாம் கேட்டார் என்ற வலி...

நான் உண்டு, என் வேலை உண்டு என்று நிம்மதியாய் இருந்தேனே... அதை விட்டுவிட்டு ஏன் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதித்து, இப்போது அவஸ்தைப்படுகிறேன் என்ற சலிப்பு...

எத்தனை மாசங்கள்?

நாலு மாசங்களா? நாலே நாலு மாசங்களா! அதற்குள்ளா இத்தனை அனுபவங்கள்?

குடி உள்ளே போனால் பரத் புது மனுஷனாக மாறிவிடுகிறார் என்பதை, இந்த நாலு மாசங்களில் மோஹனா நன்றாகவே தெரிந்துகொண்டுவிட்டாள்.

கனிவாய்ப் பார்த்து, இதமாய் சிரித்து, வேடிக்கையாய்ப் பேசும் மனிதரை, இப்படி அடியோடு மாற்றுவது இந்தக் குடிக்கு எப்படி சாத்தியமாகிறது?

உள்ளே போய் மூளையில் அது என்ன செய்கிறது?

அந்த முரட்டுத்தனமும், கண்களின் கோபமும், வாயில் அசிங்கமாய் வார்த்தைகளும், கேவலமான எண்ணங்களும் எங்கேயிருந்து உற்பத்தியாகின்றன?

மோஹனா நிறைய குடிகாரர்களைத் தன் டெல்லி வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள்தான்... குடியோ, அந்த நெடியோ, அதன் பாதிப்போ அவளுக்குப் புதுசில்லைதான். ஆனாலும், அவர்களும் பரத்தும் ஒன்றா? என்றோ ஒருநாள் ஒரு மணியோ இரண்டு மணிகளோ வந்துபோன அவர்களும், பரத்தும் ஒன்றா?

தினம் குடிக்கும் ஆள் பரத் இல்லை என்றாலும், பார்ட்டி, அங்கே இங்கே என்று போகும் சந்தர்ப்பங்களில், ஒரு பெக் குடித்தால்கூட அதன் விளைவுகள் வருத்தம் தருபவையாய் இருக்கின்றனவே... என்ன செய்ய!

ஏழெட்டு முறைகள் இருக்குமா? அளவுக்கு மீறின போதையுடன் வந்து வார்த்தைகளைக் கொட்டினது, இந்த நாலு மாசத்தில் ஏழெட்டு முறைகள் இருக்காது? ஏன் இருக்காது!

"நீ மெட்றாஸுக்கு வந்தப்பறம் ராணியைப் பாத்தியோ? உன் ஆதிநாளைய பெஸ்ட் ப்ரெண்ட் ஆச்சே... பாக்காட்டா எப்படி?"

"ப்ரதீமா, ஷர்மிளா... எப்படியிருப்பா? உன்னை மாதிரியே ஷோக்கா, உயரமா...?"

"வெஸ்டர்ன் டான்ஸ் ஆடத் தெரியாதா? நிஜம்மாவா? உன் டெல்லி டேட்ஸ் உன்னை ஆடுன்னு கம்பெல் பண்ணினதில்லை?"

"உன் டெல்லி வாழ்க்கையப்பத்தி சொல்லு, மோனா..."

"உன்னை நா மோனான்னு கூப்பிட்டா உனக்குப் புடிக்கும், இல்லே?"

"மோனா... மோ..னா..."

காதருகே வந்து பரத் கிசுகிசுத்தது தாங்கமுடியாமல், "ஓ, ஸ்டாப் இட்!" என்று ஒருநாள் மோஹனா கத்தியதுகூட உண்டு.

ஷ்யாம் வீட்டுப் பார்ட்டிக்குப் போய்விட்டு வந்து, 'ஏன் மெல்லிசு புடவை கட்டிக்கொள்கிறாய்? ஏன் ஷ்யாமுடன் சிரித்துச்சிரித்துப் பேசினாய்?' என்று பரத் முதல்தடவையாய் கேட்டபோதும், இரண்டாம் முறை கிரிதர் வந்து, இவள் வேலையை விட்டு, அஸ்வத் வீட்டுப் பார்ட்டிக்குச் சென்று திரும்பி, 'நீ அவனோடு எத்தனை நெருக்கமாய்ப் பழகியிருக்கிறாய்?' என்று கேட்டபோதும் மோஹனா மனசு உடைந்த மாதிரி, இப்போதெல்லாம் தவிப்பதில்லைதான்... அதிர்ச்சியும் கூச்சமும் கசப்பும், முதல் இரண்டு தடவைகள் இருந்த மாதிரி இல்லைதான்.

பழகிவிட்டதாலா? இல்லை, மறுநாளே பரத் தன் தவறுக்கு வருந்துவதாலா?

பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டு, போதை மயக்கத்தில் அடித்துப்போட்ட மாதிரி தூங்கிவிட்டு, மறுநாள் கனத்த தலை, மனசுடன், இரவு என்னவோ அசிங்கமாய்ப் பேசிவிட்டோம் என்பது மட்டும் புகையாய்ப் புரிய, மோஹனாவை இறுக அணைத்துக் கொண்டு, 'ஸாரி டார்லிங்' என்று பரத் முணுமுணுப்பது ஒரு பழக்கமாக ஆன பிறகு, அந்த போதை, வெறி, வார்த்தைகளின் பாதிப்பு, மோஹனாவிடம் கொஞ்சம்கொஞ்சமாய்க் குறையத்தான் தொடங்கின.

ஆனாலும்...?

குடித்துவிட்டால் தன் நினைப்புகள் வக்ரமாகப் போகின்றன என்பதை பரத் உணராமல் இல்லை.

இரண்டு மூன்று தரம் இப்படி ஆனபிறகு, அடுத்த முறை அலுவலகப் பார்ட்டி ஒன்றிற்காக க்ளப்புக்குப் புறப்பட்டவன், மோஹனாவின் பார்வை எதையோ உணர்த்த, 'நா இன்னிக்கு ட்ரிங்க் எடுத்துக்க மாட்டேன்... டோண்ட் வொர்ரி!' என்று சொல்லிவிட்டே போனான்.

என்ன சொல்லி என்ன!

வரும்போது நடு இரவு... ஏகமாய் போதை...

பரத்துக்கு இப்படியொரு பலவீனமா? 'நோ, எனக்கு வேண்டாம்' என்று குடியை மறுக்கமுடியாமல் இப்படியொரு பலமில்லாத மனசா?

குடித்துவிட்டால் நெஞ்சுக்குள் ஆழமாய் புதைந்துவிட்ட விஷயங்களெல்லாம் பீறிட்டுக்கொண்டு வெளிவந்துவிடுகின்றனவா?

அவர் இருதயத்தில் என் பழைய வாழ்க்கை ஒரு கரும்புள்ளியாகத்தான் இருக்கிறதா?

உண்மையை எதிர்நோக்கி வாழமுடியாதவர், ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும்?

செய்துகொண்டுவிட்டு, இன்று ஏன் அவஸ்தைப்படவேண்டும்?

வரவர பொது இடங்களுக்குச் சேர்ந்து போகும்போது, பரத் அனாவசிய படபடப்புக்கு உள்ளாவதை மோஹனாவால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

இது எப்போது ஆரம்பித்தது? கிரி ஆபீஸுக்கு வந்துபோன பிறகா? இல்லை, அடுத்து வந்த ஒரு கல்யாணத்தில் எதேச்சையாய் இவர்களும் அவனும் சந்திக்க நேர்ந்ததிலிருந்தா?

இத்தனைக்கும், கிரி இவர்களுடன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. பரத்தின் சங்கடம் புரிந்த மாதிரி தூரத்திலிருந்து 'ஹலோ' என்று கையாட்டிவிட்டுப் போய்விட்டான்.

ஒருதரம் நைட்ஷோவுக்குப் போன சமயத்தில், இடைவேளையில் காபி சாப்பிடப் போனார்கள்.

காபியுடன் நின்றிருந்த பரத்துள் சட்டென்று ஒரு விறைப்பு.

"என்ன, பரத்?"

"ஒண்ணுமில்ல... நீ வா, போலாம்..."

படம் முடிந்து வெளியே வருவதற்குள் ஒருவித அவசரம்.

காருக்குள் உட்கார்ந்து அதைக் கிளப்பும்போது, 'பாஸ்டர்ட்' என்று முணுமுணுத்தவன், "அதோ நிக்கறானே, அவனை உனக்குத் தெரியுமா?" என்றான்.

மோஹனா தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

"யார் அவன்? தெரியலையே..."

"தெரியாதா? அப்பறம் ஏன் உன்னையே பாத்துண்டிருக்கான்? இண்டர்வெல்லகூட இப்படித்தான் முறைச்சான்..."

'எவன் எப்படி முறைத்தால் என்ன, பரத்?' என்று சொல்லவந்தவள், சட்டென்று வாயை மூடிக்கொண்டாள்.

டெல்லியில் பழக்கமான நபராக இருக்கலாம் என்று பரத் நினைக்கிறாரா? அதுதான் இந்தப் பதட்டமா?

ஒருதரம் இல்லை... இந்த நாலு மாசத்தில் நாலைந்து முறைகள் இப்படி நடந்துவிட்டன.

கடைக்குப் போவார்கள். யாராவது சாதாரணமாய் பார்த்தால்கூட, உனக்குத் தெரிந்தவர்களா என்ற தினுசில் பரத்தின் கண்கள் சுருங்குவது மோஹனாவுக்குப் புரியும்.

ரமணன் வீட்டு விருந்தில்...

கூட்டத்தில் நிற்கும் ஒவ்வொருவரையும் பரத் சந்தேகப் பார்வையால் அளப்பதும், இவன் தெரிந்தவனா, அவன் பழக்கம் உள்ளவனா என்று தவிப்பதும்... சே... என்ன இது?

இப்போதெல்லாம் பரத்தோடு அதிகம் வெளியில் போவதை மோஹனாவே தவிர்த்து விடுகிறாள்.

எதற்கு பரத்துக்கு வீண்வேதனை!

நல்லவேளையாய், பதினைந்து நாட்களாய் வகையாய் ஒரு காரணம் வந்துவிட்டது.

மசக்கை...

கையில் பிடித்திருந்த புஸ்தகம் நழுவிக் கீழே விழுந்ததும், மோஹனா திடுக்கிட்டுக் கண்ணை விழித்தாள்.

தோட்டத்து மரத்தில் பதுங்கிக்கொண்டு, 'குவ்வூ... அக்குவ்வூ...' என்று குயில் ஒன்று இனிமையாய்க் கூவுவது காதில் விழுந்தது.

அந்த நிமிஷம் மனசுக்கு அலாதி நிம்மதியைத் தர, வேண்டாத எண்ணங்களிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முயற்சிப்பது போல தலையை மோஹனா லேசாய் அசைத்தாள்.

நல்ல விஷயங்கள் எத்தனையோ இருக்கையில், இதென்ன பைத்தியக்கார நினைப்புகள்!

கர்ப்பமாய் இருக்கும்போது மனசு சந்தோஷமாய் இருப்பது முக்கியம் அல்லவா?

அறுபது நாட்கள் பூர்த்தியாகிவிட்டன என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்படியென்றால், இன்னும் எட்டு மாசங்களில், திருமண நாள் முடிந்த ஒருசில நாட்களில், குழந்தை பிறந்துவிடும்.

பேரன் வேண்டுமென்று அம்மா ஆசைப்படுகிறார்.

எனக்கு என்ன குழந்தை வேண்டும்... பிள்ளையா, பெண்ணா? எதுவானாலும் ஒன்றுதான் என்றாலும், ஏற்கனவே ஸந்த்யா இருப்பதால், பிறப்பது பிள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும்.

திடுமென்று, தேனிலவில் மடியில் படுத்துக்கொண்டு, நாலு பிள்ளைகள் பிறக்கணும், டார்லிங்... ஒரு டாக்டர், ஒரு என்ஜினியர், ஒரு வகீல், ஒரு...' என்று பரத் அடுக்கியது ஞாபகத்துக்கு வந்து நெஞ்சு கிளுகிளுத்தது.

பிறக்கப்போவது யார்?

டாக்டரா, வக்கீலா?

இப்படி வக்கீல் என்றும், என்ஜினியர் என்றும் கனவு காணும் பிள்ளை, இன்ன காரணம் என்று புரிபடாமல் கலைந்து, வெறும் சதைப்பிண்டமாய் மறுநாளுக்குள் வெளிவந்துவிடப் போகிறது

என்பதை அறியமுடியாமல்போன மோஹனாவின் உதடுகளில், நினைப்புகளின் இனிமையால் அழகான புன்னகை ஒன்று அந்தக் கணம் பூத்தது.

(தொடரும்)