கேரளாவில் முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2017 00:53

திருவனந்தபுரம்,

கேரளாவில் முத்தலாக் முறையால் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கும் திட்டத்தை கேரள அரசு நேற்று துவங்கியது. கேரளாவின் மாநில சிறுபான்மையினருக்கான கமிஷன் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தது.

நாடு முழுவதும் முத்தலாக் தொடர்பான விவாதங்கள் நடந்துவரும் நிலையில், கேரள அரசு இந்த திட்டத்தை துவங்கியுள்ளது. ஆரம்பித்த ஒரு நாளிலேயே 21 புகார்கள் வந்துள்ளதாக சிறுபான்மையினர் கமிஷன் தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினரின் கல்வி, பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை பாதுகாக்க அமைக்கப்பட்டது மாநில சிறுபான்மையினர் கமிஷன். அந்த கமிஷனின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கே ஹனீஃபா உள்ளார். கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 4 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர் முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை வழங்குவார்கள்.

 ‘‘பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சட்ட குழுவினரை அணுகி, அலோசனைகள் பெறலாம். இவர்களுக்கு அளிக்கப்படும் சட்ட உதவிகள், ஆலோசனைகள் அனைத்தும் இலவசம்.’’ என்றார் ஹனிஃபா.

பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொலைபேசி எண் ஒன்றையும் கமிஷன் வழங்கியுள்ளது.  ‘‘மாநிலத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த தொலைபேசி எண் மூலமாக சட்ட மையத்தை தொடர்புக்கொள்ளலாம். ஆரம்பித்த ஒரு நாளிலேயே பல பெண்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.’’ என ஹனீஃபா தெரிவித்தார்.

இதுவரை புகார் தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர் 25-49 வயதுக்குட்பட்டவர்கள். கடந்த 7 வருடங்களாக தன் கணவரிடம் ஜீவனாம்சம் பெற போராடும் 63 வயது பள்ளி தலைமை ஆசிரியரும் இதில் அடங்குவார். இவரைப் போல் 10 முதல் 22 வருடங்களாக கணவர் வீட்டிலிருந்து உதவிக் கேட்டு போராடும் பெண்கள் பலர் இங்கு சட்ட ஆலோசனைக்கு வந்துள்ளதாக சிறுபான்மையினர் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்கள் வாழ்வை சீரழிக்கும் முத்தலாக் முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கின் விசாரணை வரும் மே மாதம் 11ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் கடந்த வருடமே முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்களுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என உயர்நீதிமன்றமும் கூறியது குறிப்பிடத்தக்கது.