கால்பந்து: இந்தியா ‘101’

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2017 00:35

புதுடில்லி,

பிபா கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 101வது இடத்துக்கு முன்னேறியது.
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டது. இதில் இந்திய அணி 132வது இடத்தில் இருந்து 101வது இடத்துக்கு முன்னேறியது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின், 101வது இடம் பிடித்துள்ளது. கடைசியாக 1996 (மே) வெளியான தரவரிசையில் இந்திய அணி 101வது இடம் பிடித்திருந்தது.
கடந்த 1996ல் (பிப்ரவரி) வெளியான தரவரிசையில் 94வது இடம் பிடித்திருந்தது இந்திய அணியின் சிறந்த இடமாக உள்ளது.
இதேபோல, 1993ல் (நவம்பர்) 99வது இடம் பிடித்தது.
பின், 1993 (அக்டோபர், டிசம்பர்), 1996ல் (ஏப்ரல்) 100வது இடம் பிடித்திருந்தது.
இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு, சமீபத்தில் நடந்த கம்போடியா (நட்பு), மியான்மர் (ஆசிய கோப்பை தகுதிச்சுற்று) அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றதே காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி பங்கேற்ற 13 போட்டிகளில் 11ல் வெற்றி பெற்றது. இதில் மொத்தம் 31 கோல் அடித்துள்ளது. ஆசிய அளவில் இந்திய அணி 11வது இடம் பிடித்தது.