ஓல்டு இஸ் கோல்டு: 526 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம்!

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2017மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு 1982ம் ஆண்டு வெளிவந்து மகத்தான வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்த படம் ‘பயணங்கள் முடிவதில்லை’. ஆர். சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமான இந்தப் படம், கதாநாயகனாக நடித்த மோகன், கதாநாயகியாக நடித்த பூர்ணிமா ஜெயராம் ஆகியோருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

கதாநாயகி ராதா சென்னையில் உள்ள தன் தோழி வீட்டில் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறாள். பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞன் ரவி நன்றாகப் பாடக்கூடியவன். பிரபல பாடகனாக வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சிக்கிறான்.

ராதா எழுதிய கவிதை ஒன்று காற்றில் பறந்து வந்து ரவிக்கு அருகில் விழுகிறது. அதை எடுத்துப் பார்க்கும் ரவி, அதில் உள்ள கவிதையைப் பார்த்து அதற்கு மெட்டமைத்து பாடுகிறான்.

இந்தப் பாடலைக் கேட்கும் ராதா, ரவியின் இசைத்திறமையில் மனதை பறிகொடுக்கிறாள். ரவின் மீது புகழ் வெளிச்சம் விழ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சகோதரனிடம் சொல்லி ரவிக்கு கோயில் நிகழ்ச்சி ஒன்றில் இசைக்கச்சேரி செய்ய வாய்ப்பு வாங்கித் தருகிறாள்.

மேலும், தொலைக்காட்சியிலும் ரவி பாடுவதற்கு வாய்ப்பு வாங்கித் தருகிறாள். சிறிது சிறிதாக ரவியின் புகழ் பரவத் தொடங்குகிறது. ரவியை மணந்து கொள்ள விரும்புகிறாள் ராதா. ராதாவின் அப்பாவும் திருமணத்துக்கு சம்மதித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். ஆனால், ரவி ராதாவை மணம் செய்து கொள்ள மறுக்கிறான்.

இதனால் கோபமடையும் ராதாவின் அப்பா, தன் சகோதரியின் மகன் டாக்டர் மோகனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்த நிலையில் தன்னை மணக்கவிருக்கும் டாக்டர் மோகன் மூலம், ஒரு அதிர்ச்சிகரமான உண்மை ராதாவுக்கு தெரியவருகிறது.

இசை உலகில் ரவியின் புகழ் வளர்ந்து கொண்டிருந்த அதே வேளையில் அவன் உடலில் கேன்ஸர் நோயும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராதாவை ரவி உயிருக்குயிராக நேசித்தாலும் மரணத்தின் வாசலில் நிற்கும் தன்னால் அவளது வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்பதற்காகவே அவளை திருமணம் செய்து கொள்வதைத் தவிர்த்திருக்கிறான் ரவி.

இந்த உண்மை தெரிய வந்ததும் ராதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாள். கேன்சர் காரணமாக ரவியும் இறந்து விடுகிறான். வாழ்க்கையில் இணையமுடியாத இந்தக் காதலர்கள் மரணத்தால் இணைந்து தங்கள் காதலை வாழ வைக்கிறார்கள்.

படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் இசை. ‘இளைய நிலா பொழிகிறதே’, ‘மணியோசை கேட்டு எழுந்து’, ‘ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ’, ‘சாலையோரம் சோலையொன்று’, ‘தோகை இளமயில் ஆடிவருகுது’, ’வைகறையில் வைகைக் கரையில்’, ‘ஆத்தா ஆத்தோரமா வார்றியா’ ஆகிய அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவே, பாடல்களுக்காகவே பல தரப்பு ரசிகர்களும் மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்கு வந்தனர்.

’மைக்’ மோகன் என்ற செல்லப்பெயர் மோகனுக்கு கிடைக்க ‘பிள்ளையார் சுழி’ போட்ட படம் ‘பயணங்கள் முடிவதில்லை’தான். இந்தப் படத்துக்குப் பிறகு மதர்லாண்ட் பிக்சர்ஸ் தயாரித்த பல படங்களில் மோகன் பாடகராகவே நடித்து அவை வெற்றிப் படங்களாகவும் அமைந்ததால் மோகனுக்கு அந்த செல்லப்பெயர் கிடைத்தது.

526 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம் ‘பயணங்கள் முடிவதில்லை.”

படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் துணையாக நின்றதால், இளையராஜாவின் படத்தை பெரிதாகப் போட்டு ‘இளையராஜாவின் இன்னிசை மழையில்’ என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தார் தயாரிப்பாளர் கோவைத்தம்பி. தொடர்ந்து நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வைப்பது போல் மிகப்பெரிய கட் அவுட்டையும் இளைய ராஜாவுக்கு வைத்தார்.

மோகன், பூர்ணிமா ஜெயராம் இருவருக்கும் அந்த ஆண்டுக்கான ‘பிலிம்பேர்’ பத்திரிகை விருது கிடைத்தது.

--– எஸ். கணேஷ்