திருவிதாங்கோட்டில் அதிர வைக்கும் அதிசயங்கள்! ‘மல்க் முஹம்மது வலியுல்லாஹ் தர்கா!’

பதிவு செய்த நாள் : 28 மார்ச் 2017 03:09வலிமார்கள் எனும் இறைநேசர்கள், அல்லாஹ் மீது கொண்ட அளவற்ற பக்தியாலும், அவன் அனுப்பிய நபிமார்கள், அவர்களது தோழர்கள், முஹிப்பீன்கள், சித்திக்கீன்கள், தாயிப்பீன்கள் மீது கொண்ட நேசத்தாலும், அல்லாஹ் அவர்களுக்கு ‘கராமத்’ என்னும் அதிசயங்களை நிகழ்த்தும் ஆற்றலையும், வல்லமையையும் தந்தான். தக்கலை ஞானமாமேதை பீர் முகமது அப்பா (ரழி)வுக்கு, அவரது ‘திக்ர்’ (தியானம்) தவவலிமையின் பலனாக ‘கூடு விட்டு கூடு பாய்வது, உயிரிழந்தவர்களை உயிர்த்தெழுப்புவது, ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு பறந்து செல்வது, தீராத குறைகளை தீர்ப்பது, பிணிகளை நீக்குவது’ உட்பட இன்னும் அளவிலா அதிசய சக்திகளை அல்லாஹ் தந்தருளி இவ்வுலக மக்களின் பார்வையை அவர் மீது திரும்பச் செய்தான்.

திருவிதாங்கோட்டில் ‘திருவுளம்!’

குமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் திருவுளமாகி நிற்கும் ‘மல்க் முஹம்மது’ என்கிற ‘மாலிக் முஹம்மது (ரழி)’ அவர்கள் நிகழ்த்திய ‘கராமத்துக்கள்’ கணக்கிலடங்காது என்கின்றனர் குமரியில் வாழும் இஸ்லாமியர்கள். ‘மல்க் முஹம்மது வலியுல்லாஹ்’ நிகழ்த்திக்காட்டிய கராமத்துக்கள் பற்றி நெல்லை, மேலப்பாளையம் ஆமீம்புரத்தைச் சேர்ந்த, தக்கலை பீர் முகமது அப்பாவின் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு பேசும் சக்தி படைத்தவர் என பேசப்படும் ‘அதிசய சக்தி’ முஹ்யித்தீன் வாப்பா வெளியிட்ட விஷயங்கள் சுவாரஸ்யமாகவும், கேட்பவரை புருவம் உயர்த்தச் செய்வதாகவும் இருந்தன.

தனித்திருந்து.... விழித்திருந்து....!

‘‘ஆண்டவர்களே.... யா ஹவ்து, யா முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜெய்லானி....’’ என்று தனது ஆன்மிக மெஞ்ஞான குருவின் திருநாமத்தை நாவில் உச்சரித்த தொனியிலேயே பேசத்துவங்கினார் முஹ்யித்தீன் வாப்பா. ‘‘தனித்திருந்து..., விழித்திருந்து..., பசித்திருந்து..., இம்மை இச்சைகளை ஒதுக்கி, அல்லாஹ்வையும், இறைத்தூதுவர்களையும், அவனது நேசர்களையும் நேசித்து, அல்லாஹ்வை நேரடியாக காணும் பாக்கியம் மிகுந்த மறுமையையும் நேசித்தால், அல்லாஹ் நமக்கு வலிமார்களின் அந்தஸ்தை தருவதற்கு காத்திருக்கிறான். ரசூலுல்லாஹ்வையும், வலிமார்களையும் நேசம் கொள்வதன் மூலம் நாம் அல்லாஹ்வின் நேசத்தை நிச்சயம் பெற முடியும். பீர் முகமது அப்பா கேரளா மலைக்குகைகளில் தங்கி, தவமிருந்து அல்லாஹ்வை, ஊண் உறக்கமின்றி ‘திக்ர்’ செய்தார்கள். இன்று உலகம் போற்றக்கூடிய உன்னதத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ்வையும், அவன் அருளிய ‘குர்ஆனையும்’ புகழ்ந்து, அப்பா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடலில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் மனிதர்களுக்கு அருளப்பட்ட பொக்கிஷங்கள் எனலாம்.

பாங்கு சத்தத்தை கேட்ட மன்னர் சேரமான் பெருமான்!

திருவிதாங்கோட்டில் ‘திரு’வுடன் விளங்கும் ‘மல்க் முஹம்மது அப்பா’வின் வரலாறு, எல்லாம் வல்ல இறைவனின் தஜல்லியத்தை, ஜலாலியத்தை இவ்வுலகுக்கு உணர்த்தும் சான்றாக விளங்குகிறது. சுமார் ௨௫௦ ஆண்டுகளுக்கு முன்னர் குமரியை ஆண்ட மன்னர் சேரமான் பெருமான் மகாராஜா திருவிதாங்கோடு பகுதியில் நள்ளிரவில் குதிரையில் நகர் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் ஒரு பகுதியில் (தற்போது மல்க் முஹம்மது அப்பா பள்ளி அமைந்துள்ள இடம்) இருந்து ‘அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்’ என பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைக்கும் ‘பாங்கு’ சத்தம் கேட்டது. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் அந்த பாங்கு சத்தம் ‘கணீர்’ குரலில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அங்கு சென்று பார்த்த போது ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில் ராஜா அதிகாலை நேரத்தில் ஒரு கனவு கண்டார். அக்கனவில் வந்தவர் தனது பெயர் மாலிக் முஹம்மது எனவும், நபிகள் நாயகத்தின் தலைமுறையில் வந்த அடியார் எனவும், தான் மக்காவில் இருந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக குமரிக்கு வந்த இடத்தில், பாங்கு சொல்லப்பட்ட இடத்தில் எதிரிகளால் ‘ஷஹீது’ (கொல்லப்பட்டதாகவும்) ஆக்கப்பட்டதாகவும் கூறி விட்டு அந்த மனிதர் கூறி விட்டு மறைந்து விட்டார்.

நபிகள் நாயகத்தை கனவில் தரிசித்தார்!

அந்த இடத்தில் தனது நினைவிடத்துடன் கூடிய பள்ளிவாசல் ஒன்றையும் எழுப்ப வேண்டும் என்றும் மல்க்  முஹம்மது கட்டளையிட்டார். அன்று முதல் சேரமான் மகாராஜாவின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவரது மனம் தனிமையை நாடியது. இறைஞானத்தை தேடினார். தனது கனவில் வந்த அந்த நபரைப் பற்றிய சிந்தனையே சதா ஓடியது. அவர் கடவுளா? அல்லது மனிதரா? அல்லது வேறு யார்? பேயா, பிசாசா என்ற தேடல் அவரது உள்ளத்தில் மிகப்பெரிய கேள்விக்குறியாக தொத்தி நின்று உள்ளத்தை சதா உறுத்திய வண்ணம் இருந்தது. இது குறித்த ஆழ்ந்த யோசனையில் இருந்த போது ஒரு நாள் அதிகாலை நேரத்தில் நபிகள் நாயகத்தை, சேரமான் மகாராஜா, கனவில் தரிசித்தார். அமாவாசை இரவில் சூரியன் வருவது போலவும், முழு சந்திரனை நபிகள் நாயகம் இரண்டாகப் பிளப்பது போலவும் அந்த கனவில் காட்சிகள் தோன்றின. இதனைக் கண்டு அதிர்ந்து போன சேரமான் மகாராஜா, அக்கனவுக் காட்சிகள் அனைத்தும் உண்மையானதுதானா என தெரிந்து கொள்ள வேண்டி, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை தனது அரண்மனைக்கு வரவழைத்து நபிகள் நாயகம் பற்றி அவர்களிடம் கேட்டறிந்தார்.

சேரமான் பெருமான் செய்யது சிராஜுத்தின் ஆனார்!

‘ஆம்! இறைத்தூதரான நபிகள் நாயகம் அது போன்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்கள். அதற்கு ஆதாரங்கள், ‘திருக்குர்ஆனிலேயே’ (௫௪:௨) உள்ளது’ என அவர்கள் தெரிவித்ததும் சேரமான் மகாராஜா ஆச்சர்யத்தில், அதிர்ந்து போனார். கனவில் தோன்றிய ‘மாலிக் முஹம்மது’ சொன்னது அனைத்தும் உண்மை என தெரியவந்தது. இதனால் ஒரு கணம் கூட தாமதிக்காமல் சேரமான் மகாராஜா இஸ்லாத்தை தழுவினார். அன்று முதல் சேரமான் பெருமான் மகாராஜாவுக்கு ‘செய்யது சிராஜுத்தீன்’ என பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் அவர் பெரிய இறைநேசராக திகழ்ந்தார். அவரது அடக்கத்தலம் தற்போது துாத்துக்குடி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் புகழ் பெற்று விளங்குகிறது. சிராஜுத்தீன் வலியுல்லாஹ், மாலிக் முஹம்மது சொன்னது போலவே, திருவிலாங்கோட்டில் பாங்கு சத்தம் கேட்ட இடத்தில் முஸ்லிம்கள் தொழக்கூடிய பள்ளிவாசலை கட்டினார். அதனை ஒட்டி மாலிக் முஹம்மது நினைவிடத்தையும் அமைத்தார்.

படம் எடுத்து ஆடிய நாகம்!

மாலிக் முஹம்மது நினைவிடம் கட்டிய போது பல அதிசயங்கள் நடந்தது மட்டுமின்றி இப்போதும் கராமத்துக்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. திருவிதாங்கோட்டில் ஒரு இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டு அதன் கட்டுமானப்பணி தொடங்கி அதை கவனிக்காமலேயே அசட்டையாக விட்டு விட்டனர். அந்த இடத்தில் ராட்சத கருநாகம் ஒன்று தினமும் படம் எடுத்து ஆடியபடி நின்றது. இதனைக் கண்ட பள்ளிவாசல் காவலர் ஒருவர் பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பள்ளிவாசல் நிர்வாகியிடம் இதனைக் கூற உடனடியாக அந்த பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது. அன்று முதல் அந்த பாம்பு படம் எடுத்து ஆடுவது நின்றது.

பணிவிடை செய்த  ‘ஜின்கள்!’

மல்க் முஹம்மது அப்பா தர்காவை ‘ஜின்கள்’ எனும் பூதகணங்கள் கட்டியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. மல்க் முஹம்மதுவின் தவ வலிமையால் ‘ஜின்கள்’ அவருக்கு அடிபணிந்து, பணிவிடைகள் செய்து வந்தன. மல்க் முஹம்மது பள்ளிவாசல் பல லட்சம் ஆண்டுகளானாலும் அழியாத பொக்கிஷமாக இவ்வுலகில் நிலைத்து நின்று அருள்பாலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ராட்சத பாறாங்கற்களை கொண்டு சிராஜுத்தீன் அவ்லியா மாலிக் முஹம்மது அப்பா பள்ளியைக் கட்டினார். கட்டுமானப்பணியின் ராட்சத பாறாங்கல் தூண்களை தர்காவின் மேற்புறத்தில் தூக்கி வைக்க முற்பட்ட போது அதிக பளு காரணமாக அது முடியாமல் போனது. ௫ யானைகளைக் கொண்டு தூண்களை தூக்க முயன்றும் முடியவில்லை. இதனால் கட்டுமானப்பணியில் தொய்வு ஏற்பட்டது. மறுநாள் காலையில் வந்து பார்த்த போது என்ன அதிசயம், ராட்சத தூண்கள் அனைத்தும் வைக்கப்படவேண்டிய உயரத்தில் அழகாய் வைக்கப்பட்டிருந்தன! அது எப்படி என்பது பின்னர்தான் தெரியவந்தது. கட்டுமானப்பணிக்கு மல்க் முஹம்மது, தான் வசப்படுத்தி வைத்திருந்த ‘ஜின்’களை ஏவி அல்லாஹ் தனக்கு வழங்கியிருந்த வல்லமையை, பராக்கிரமத்தை சிராஜுத்தீன் அவ்லியாவுக்கு காட்டியுள்ளார்கள்.  இதனை சிராஜுத்தீன் அவ்லியா அவர்களுக்கு கனவின் மூலம் ‘மாலிக் முஹம்மது’ தெளிவுபடுத்தினார்கள்.

தர்காவை காவல் காக்கும் ‘ஜின்கள்!’

ஜின்கள் ‘மாலிக் முஹம்மது’வுக்கு பணிவிடைகள் செய்தன என்பதனை சூசகமாக தெரிவிக்கும் வகையில்தான் ‘ஜின்களின்’ மறு உருவமான ‘படம் எடுத்து ஆடும் பாம்பு’ உருவத்தை பள்ளிவாசல் தூண்களின் உச்சியில் சிராஜுத்தீன் அவ்லியா பாம்பின் தலையை போன்று செதுக்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். மாலிக் முஹம்மது தர்காவை ஜின்கள் பாம்பு வடிவில் வந்து காவல் காக்கின்றன எனவும் சொல்லப்படுகிறது. இதனால் தர்காவுக்கு வரும் மக்கள் ஒரு கிண்ணத்தில் பசும்பாலை ஊற்றி மாலிக் முஹம்மது அப்பாவின் அடக்கத்தலத்தில் நேர்ச்சையாக வைத்து விட்டுச் செல்வதையும் காணலாம். மாலிக் முஹம்மது பள்ளிவாசல் ‘ஜின்கள்’ கட்டிய தர்கா என்ற பெயர் கூடுதல் பெருமை சேர்க்கிறது.

 தெப்பக்குளத்தின் கம்பீரம்!

தர்காவை ஒட்டி முன்புறத்தில் அமைந்துள்ள பரந்து விரிந்த பச்சைப் பட்டுப் போர்வையை போர்த்தியது போன்ற செங்குத்தான தெப்பக்குளத்தை பார்த்தாலே மாலிக் முஹம்மது வலியுல்லாஹ்வின் கராமத்து விளங்கும். சுமார் 2 பனைமரங்களின் அளவு ஆழம் கொண்ட அந்த குளத்தின் கம்பீரமான தோற்றம் பிரமிக்க வைக்கும். அந்த காலத்து ராட்சத பாறாங்கற்களால் ஆன படிக்கட்டுக்களை பார்த்தாலே சொல்லி விடலாம், அவை மனிதர்கள் கட்டியது போன்றே இருக்காது. நிச்சயம் ௧௦௦ யானைகள் பலம் வாய்ந்தவர்களால்தான் அந்த பாறைகளை கொண்டு கட்ட முடியும். மனிதர்களை விட ஆயிரம் மடங்கு பலமும், சக்தியும் படைத்த ‘ஜின்’கள் மல்க் முஹம்மது தர்காவை கட்டியதற்கு சிறந்த சான்றாக அந்த தெப்பக்குளம் விளங்குவது மற்றொரு பெருமை. திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த குளத்திற்கு வந்து குளித்து விட்டு செல்கிறார்கள்.

குறையுடன் செல்பவர்கள் நிறைவுடன் திரும்புவார்கள்!

மாலிக் முஹம்மது இட்ட உத்தரவின் பேரில் அந்த பள்ளிவாசல் கட்டப்பட்டதால் ‘மாலிக் முஹம்மது’ என்ற பெயர் மருவி ‘மல்க் முஹம்மது அப்பா தர்கா’ ஆனது. மல்க் முஹம்மது அப்பா தர்காவை இன்றும் ஜின்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அதுதான் உண்மை. தீய எண்ணத்துடன் செல்பவர்களுக்கு உடனே தண்டனை கிடைக்கும். சுத்தமான எண்ணத்துடன் இறையச்சத்துடன் செல்பவர்களின் மனக் குறையை ‘மல்க் முஹம்மது அப்பாவின் ‘துஆ’ பரக்கத்தால் அல்லாஹ் ‘நிறை’ செய்து வைக்கிறான். நோய் நொடி, தீராத பிணிகள் தீர்கின்றன.

கந்தூரி உரூஸின் போது வந்து குவியும் ‘கிடாய்’கள்!

ஆண்டுதோறும் ரபிய்யுல் ஆகிர் பிறை 22 அன்று மல்க் முஹம்மது தர்காவில் கந்தூரி உரூஸ் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர். மேலும் நேர்ச்சையாக சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வந்து குவிகின்றன. இவற்றை அறுத்து அங்குள்ளவர்களுக்கு கறி சமைத்து பங்கிடுகின்றனர். . மல்க் முஹம்மது அப்பாவை தரிசிக்க வருபவர்கள் அவரது அடக்கத்தலத்தை எளிதில் காண முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அடக்கத்தலம் திறக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தரிசனம் கிடைப்பதில்லை. மற்ற நாட்களில் வருபவர்கள் வெளியில் நின்ற படியே வாசனை திரவியங்கள், அத்தர், பச்சைப் போர்வை, மல்லி, ரோஜாப் பூக்கள் போன்ற நேர்ச்சைகளை ஜன்னல் கம்பி வழியாக மல்க் முஹம்மது அப்பா ஜியாரத்துக்குள் வைத்து விட்டு செல்கின்றனர். மல்க் முஹம்மது அப்பாவை எளிதில் தரிசனம் செய்ய நிர்வாகத்தினர் வசதி செய்து தரவேண்டும் என்பதுதான் அங்கு வருபவர்களின் கோரிக்கையாக உள்ளது. ‘கராமத்தின் மறு உருவமான மல்க் முஹம்மது அப்பா’வை நாடி செல்பவர்களுக்கு அவர்களது மனதுக்கேற்றாற்போல் அனைத்து ஹாஜத்துக்களும் (நாட்டங்கள்) நிறைவேறுகின்றன என்பதுதான் உண்மை. நாமும் அங்கு செல்வோம், அடியாரை தரிசிப்போம்.........

– செய்யது ஆஷிக்குல்லாஷா ரிபாஈ