தெய்வ தரிசனம்!

பதிவு செய்த நாள்

19
ஜனவரி 2016
22:08

சென்ற வார தொடர்ச்சி...

நீ கோசலையின் திருக்குமரனான போது, கோசலை உன்னை தாலாட்டி தூங்க வைத்தாள்.

எங்கள் குலசேகர ஆழ்வாரும் உனக்கு தாலாட்டுப் பாடினாரே!

நீ பலராமனாக காட்டுக்கு சென்ற போது, முனிவர் உன்னை தூங்க விடவில்லை.

சீதாப்பிராட்டியை நீ சந்தித்த பிறகு, உன் தூக்கம் இன்னும் கெட்டு விட்டது.

சுயம்வரம் வெற்றிகரமாக முடிந்த பிறகு நீ கொஞ்சம் நிம்மதியாக தூங்கினாய்.

நீ தூங்குவதை மந்தரை விரும்பவில்லை; அதனால் கைகேயியின் மூலம் உன்னை எழுப்பி விட்டாள்.

ஆரண்யத்தில் நீ சற்று அமைதியாக தூங்கினாய்; இலங்கை நாயகன் அந்த தூக்கத்தை கலைத்தான்.

வனவாசம் முடிந்து நீ நாடு திரும்பியதும் மறுபடியும் கண்களை மூடினாய்; அந்த தூக்கத்தையும் ஒரு சலவை தொழிலாளி கலைத்தான்.

ரகுராமா!

நீ தூங்கித் தூங்கி விழித்தாய்; விழித்து விழித்துத் தூங்கினாய்!

நீ எப்போதும் இரவிலே தூங்குவதாக கற்பனை செய்து கொண்டு, எங்களுடைய தேவைகளுக்காகவே உன்னை எழுப்புகிறோம்.

நள்ளிரவில் நோயாளி உயிரோடு போராடினால், மருத்துவர் தன் தூக்கத்தை பெரிதாக கருத முடியாதே!

இரவிலே நெஞ்சை பிடித்துக் கொண்டு கணவன் கதறினால், தான் அயர்ந்து தூங்க வேண்டும் என்று மனைவி விரும்ப முடியாதே!

எல்லாம் வல்லவனே!

நீ உனக்காக தூங்குகிறாய்; எங்களுக்காக விழிக்கிறாய்.

எங்களை மறந்து நீ எப்போது தூங்க ஆரம்பிக்கிறாயோ, அப்போதே உலக இயக்கம் நின்று விடும்.

கடலில் அலை இருக்காது; கடல் நீர் உறைந்து போகும். நதி ஓடாது. மரங்கள் அசைய மாட்டா. மானிடம் செயலற்றுப் போகும். சக்தி வாய்ந்த விலங்குகள் எல்லாம் எலும்புக்கூடுகள் போல் காட்சியளிக்கும்.

பெண்டுலம் ஓடிக் கொண்டிருந்தால்தான், கடிகாரத்தின் முள் நகரும்.

நீ விழித்து கொண்டிருந்தால்தான், எங்கள் இயக்கம் தொடரும்.

அதனாலேயே உனக்கு பள்ளி எழுச்சி பாடுகிறோம். இந்த பள்ளி எழுச்சிக்கு உண்மையான பொருள் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்பது அல்ல; நீ தூங்கி விடக்கூடாதே என்பதுதான்.

‘‘கடவுள் கூட தூங்குகிறானா?’’

‘‘ஏ, முட்டாள்களே! ஏன் பள்ளி எழுச்சி பாடுகிறீர்கள்?’’

– என்று எங்கள் பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்கள்.

அவர்களுடைய பகுத்தறிவு பாதிதான் வெந்திருக்கிறது; மீதியும் வெந்த பிறகுதான் அது சோறாகும்.

‘காரியங்களுக்கு சில நோக்கங்கள் உண்டு; நோக்கங்களில் சில தோற்றங்கள் உண்டு’ என்பது அவர்களுக்கு தெரியாது.

தலைசீவிக் கொண்டிருக்கும் பெண், கண்ணாடி பார்க்காமலே கூட சீவிக் கொள்கிறாள். கண்ணாடி பார்க்காமலேயே வகிடு எடுக்கிறாள்.

அப்போது அவள் கையே கண்ணாடி!

கண்ணாடியின் உணர்வு கைக்கு வந்து விட்டால் முகத்துக்கு நேரே கண்ணாடி இருக்க வேண்டியதில்லை. ‘எனது இறைவனும் கொஞ்சம் தூங்க வேண்டும்’ என்று ஆசையோடு விரும்புகின்ற பக்தன், அவருக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுகிறான்.

‘‘அப்பா! ஏன் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைகிறீர்கள்? கொஞ்சம் நிம்மதியாக தூங்குங்களேன்’’ என்று பிள்ளை கேட்கிறது.

அதிக நேரம் தகப்பன் தூங்கி விட்டால் ‘‘உடம்புக்கு என்னப்பா?’’ என்று எழுப்புகிறது.