செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 169– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2017

1972ல் வெளிவந்த சிவாஜி படங்கள் 7. 'ராஜா', 'ஞானஒளி', 'பட்டிக்காடா பட்டணமா', 'தர்மம் எங்கே', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி'. இதில் 'ராஜா', 'நீதி' இரண்டு படங்களும் நடிகர் கே. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த படங்கள். வழக்கம்போல் இந்தியில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் எடுத்தார் பாலாஜி. 'ராஜா' இந்தியில் தேவ் ஆனந்த் நடித்து வெற்றி பெற்ற 'ஜானி மேரா நாம்' படம். இதைத்தான் தமிழில் 'ராஜா' என்கிற படமாக எடுத்தார். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்தியில் வெளிவந்த படம் 'துஷ்மன்'. இதைத்தான் தமிழில் 'நீதி' என்று எடுத்தார் பாலாஜி. வித்தியாசமான கதையைக் கொண்ட படம் 'நீதி'. போதையில் காரை ஓட்டி ஒரு குடும்பத் தலைவனை கொன்றுவிடுவார் சிவாஜி. அதனால் அந்தக் குடும்பத்தை அவரே காப்பாற்ற வேண்டும் என்று தீர்ப்பு. அந்தக் குடும்பத்தை காக்க போவார் சிவாஜி.

இந்த படத்தில் ஒரு பாட்டு ` நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். இன்னிக்கி ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’. இந்த பாட்டு கம்போஸிங்கின்போது முதலில் `இன்று முதல் குடிக்க மாட்டேன்’ என்றுதான் விஸ்வநாதன் பல்லவியை ஆரம்பித்தார்.

பாடல் எழுத வந்த கண்ணதாசன், `எந்த குடிகாரனும் இன்று முதல்ன்னு சொல்லமாட்டான், அதனால் நாளை முதல் குடிக்கமாட்டேன் என்று பல்லவியை ஆரம்பித்து எழுதினார் கண்ணதாசன். இந்த படமும் தேவி பாரடைஸ் தியேட்டரில்தான் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குநர் மாதவன் தயாரித்து இயக்கிய `பட்டிக்காடா பட்டணமா ‘.

இந்த படத்தின் கதை, வசனத்தை பாலமுருகன் எழுதியிருந்தார்.  அந்த நாட்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சிவாஜி படம் இது. வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி, ஜெயலலிதா. ஒரு கிராமத்து பணக்காரன் வேடம் சிவாஜிக்கு, நகரத்து நாகரீக நங்கையாக ஜெயலலிதா நடித்திருந்தார். முரணான கலாசாரத்தில் வந்தவர்களில், திருமணத்தில் வரும் சிக்கல்தான் படத்தின் கரு. எல்லா பாடல்களும் தமிழக பட்டித்தொட்டியெங்கும் பிரபலம். `என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு', என்கிற நையாண்டி பாடல் தமிழகத்தில் ஒலிக்காத கிராமங்களே இல்லை. இந்த படத்தில் சிவாஜி, ஜெயலலிதாவிற்கு ஒரு டூயட் பாடல் 'கேட்டுக்கோடி உறுமி மேளம்.’ ஆண்குரல் கிராமத்து மெட்டில் பாடும், பெண் குரலோ மேற்கத்திய இசையில் பாடும். ஆனால், விஸ்வநாதன் இதில் தன்னுடைய மேதைத்தனத்தை காட்டியிருப்பார். கிராமத்து ஆண் குரலுக்கு மேற்கத்திய பின்னணி இசையையும், மேற்கத்திய பெண்குரலுக்கு கிராமிய பின்னணி இசையையும் சேர்த்திருப்பார். இந்த பாட்டில் பெண்குரல் ஆங்கிலத்தில் பாடுவதாக அமைப்பு. ஜெயலலிதாவிற்காக எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருப்பார். இதில்  ` WE SHALL MEET AT THE GARDEN GATE, MORNING EVENING NIGHT TILL THE DAWN’  என்பது வரிகள். இந்த பாட்டின் ஆரம்பம் `கேட்டுக்கோடி உறுமி மேளம்’ என்பதுதான். இந்த பாட்டுக்கு பல்லவி கவிஞர் கண்ணதாசன் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கம்போஸிங் ஒரு ஸ்டூடியோவில் ரிகார்டிங் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. கவிஞர்  பல்லவியை யோசித்துக் கொண்டிருக்கும்போது விஸ்வநாதன் வெளியே வந்தார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் ஜெயலலிதா இருந்தார். அவருடன் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கவிஞர் பல்லவி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று  விஸ்வநாதன் ஜெயலலிதாவிடம் சொன்னார். `டியூன் என்ன?’ என்று கேட்டார் ஜெயலலிதா. சொன்னார் விஸ்வநாதன். உடனே ஜெயலலிதா `கேட்டுக்கோடி உறுமி மேளம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் ஜெயலலிதா.

இந்த வரிகளை உள்ளே போய் சொன்னார் விஸ்வநாதன். உடனே கவிஞர் `அம்மு சொன்னாங்களா?’ என்று கேட்டார் கவிஞர் கண்ணதாசன். ஜெயலலிதாவை அவருக்கு நெருக்கமானவர்கள் 'அம்மு' என்றுதான் அழைப்பார்கள்.

அந்தப் பாடலில் வரும் ஆங்கில வார்த்தைகள் முழுவதையும் ஜெயலலிதாதான் எழுதினார். சென்னை சாந்தி தியேட்டரில் இந்த படம் வெளியானது. 'ஞான ஒளி' – இந்த படம் மேஜர் சுந்தர்ராஜனின் என்.எஸ். என். தியேட்டர்ஸ் அரங்கேற்றிய மேடைநாடகம். 'வியட்நாம் வீடு' படத்தின் மூலமாக  பிரபலமான சுந்தரம் இதன் கதை, வசனத்தை எழுதியிருந்தார். கிறிஸ்தவ பின்னணியை வைத்து உருவான  கதை இது.

மேடையில் மேஜர் முக்கிய பாத்திரமாகவும், வீரராகவன் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். முதலில் இந்த நாடகத்தை பார்த்த சிவாஜி, அப்படியே அசந்து போனார். பிறகு பலமுறை தானே சொல்லி நாடகத்தை பார்த்தார்.  மேஜர் நடித்த கதாபாத்திரத்தில் அவருக்கு அப்படி ஓர் ஈர்ப்பு. நாடகம் இருநூறு முறைக்கு மேல் மேடையேறிய பிறகு ஜேயார் மூவீஸ் இதை படமாக எடுத்தார்கள். பி. மாதவன்தான் இந்தப் படத்தை இயக்கினார். இன்றைக்கு சேனல்கள் கிறிஸ்தவ பண்டிகை நாட்களில் இந்த படத்தை ஒளிபரப்புவார்கள். படமாக எடுக்கும்போது வீரராகவன் நாடகத்தில் நடித்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மேஜர் நடித்தார்.

இந்தக் கதை ஏற்கனவே பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ எழுதிய  'LE MISERABLE’  கதையை ஒட்டி 'ஏழை படும் பாடு' என்று 1960 களில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தில் நாகையாதான் கதாநாயகன். அதில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்றது எழுத்தாளர் சீதாராமன். அந்த படத்தில் அவருக்கு பெயர் ஜாவர். பிறகு அவர் ஜாவர் சீதாராமன் ஆனார். அதற்கு பிறகுதான் அவர் 'கட்டபொம்மன்' படத்தில் பானெர்மென்னாகவும், `பட்டணத்தில் பூதம்’ படத்தில் `ஜீபூம்பா’ என்கிற பூதமாகவும் நடித்தார். அந்த படத்தின் தழுவல்தான் `ஞான ஒளி’ என்று சொல்லப்பட்டதுண்டு.

இரண்டு கதைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும். சிவாஜியின்  `குங்குமம்’ படத்தின் மூலமாகத்தான் 'ஊர்வசி' சாரதா சினிமாவில் அறிமுகமானார். பிறகு அவர் மலையாளத்திலும், தெலுங்கிலும் மிகப்பிரபலமானார். மூன்று முறை 'ஊர்வசி' பட்டம் பெற்றார்.

அவர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்த படம்தான் `ஞான ஒளி.’ இந்தப் படத்தில் சிவாஜியின் மகளாக வருவார் சாரதா. `தேவனே என்னைப்பாருங்கள்’ என்ற பாடல் இந்த படத்தில் மிகவும் பிரபலம். அடுத்து வந்தது முக்தா பிலிம்ஸின் 'தவப்புதல்வன்'.

(தொடரும்)