நவோதயா வசிப்பிட பள்ளிகள் அமைப்பதில் பெரும் காலதாமதம்: எம்.பி.க்கள் கமிட்டி கண்டனம்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2017 23:57

புதுடில்லி,

இந்தியாவில் உள்ள 638 மாவட்டங்களில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவதற்காக வசிப்பிட பள்ளிகளை ஜவகர் நவோதயா வித்தியாலயா என்ற பெயரில் துவக்க 2014ம் ஆண்டு அரசு முடிவு செய்தது. இப்பணிகள் 2019ம் ஆண்டில் நிறைவடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் திட்டப்படி பள்ளிகள் துவக்கப்படவில்லை என்று கல்வித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் 638 மாவட்டங்களில் வசிப்பிட பள்ளிகள் துவக்க முடிவு செய்யப்பட்ட போதும் இதுவரை 40 பள்ளிகளுக்கான திட்டங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள்கூட தீர்மானித்தப்படி விரைவாக செயல்படவில்லை.

45 வசிப்பிட பள்ளிகள் தற்காலிக இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகள் நிரந்தர இடங்களுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்யும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு எம்.பி.க்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பள்ளிகளில் 20 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி எம்.பி.க்கள் குழு பள்ளிக்கல்வித்துறையை கோரி உள்ளது.

கடந்த 1986ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் ஜவகர் நவோதயா வித்யாலயா வசிப்பிட பள்ளிகளை அமைக்க பரிந்துரைக்கப்பட்டது.

அதனடிப்படையில் 2014ம் ஆண்டில் 638 பள்ளிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பணி 2019க்குள் நிறைவேற்றப் படவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது.