ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 22:17

சென்னை:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, தீபா, சுயோட்சைகள், என ஏற்கனவே 6 முனை போட்டி நிலவி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாகவே சில கட்சிகள் கருதுகின்றன. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சிகளுக்குள்ளேயே போட்டி நிலவுகிறது.
சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனுக்கும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வென்று விட வேண்டும் என்று திமுகவும் துடிக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, தமாகா ஆகியன போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

சீமானின் நாம் தமிழர் கட்சி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டுதயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கட்டிமாங்கோடு கிராமத்தில் காசி உதயம் - அன்னப்பழம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கலைக்கோட்டுதயம். காசி உதயம் தமிழ் தேசியவாதி. இளமைக் காலத்தில் இலங்கையில் வீரகேசரி இதழில் செய்தியாளராக பணியாற்றிய காசி உதயம், பின்னாளில் தமது பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காக தாயகம் திரும்பினார்.

தினமலர் நாளிதழில் காசி உதயம் எழுதிய அய்யா வைகுண்டர் வரலாறு அனைவராலும் போற்றப்பட்ட தொடராகும். அத்தகைய குடுபத்திலிருந்து வந்த கலைக்கோட்டுதயம் தற்பொழுது நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.