குஜராத்தில் ஜூனில் சட்டசபைத் தேர்தல்: முன்கூட்டியே நடத்த பிரதமர் மோடி திட்டம்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 09:17


அகமதாபாத்:

 குஜராத்தில் வருகிற ஜூன் மாதமே சட்டசபைத் தேர்தலை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

குஜராத் சட்டசபையின் ஆயுட்காலம் டிசம்பர் மாதம் முடிகிறது.  எனவே நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல்வாரத்தில் சட்டசபைத் தேர்தல்நடத்தப்படும். ஆனால் தற்போதைய உபி,உத்தரகாண்ட் வெற்றிக்குப் பிறகு, அதே சூட்டோடு குஜராத் சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடித்திட பிரதமர்மோடி விரும்புகிறார். இது பற்றி கட்சியின் தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

எனவே வருகிற ஜூன் மாதமே குஜராத் சட்டசபைத் தேர்தலைநடத்தப் போவதாக டில்லி வட்டாரங்கள் கூறின. ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே குஜராத் தேர்தலை முடித்து விட திட்டமிட்டுள்ளனர். குஜராத் சட்டசபையில் 182 இடங்கள் உள்ளன. இதில் 150இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதே பாஜவின் லட்சிய முழக்கமாக உள்ளது. உபியில் '325' என்று குறி வைத்து பாஜ களம்இறங்கியது.  அதே போல "குஜராத் 150" என்பதையே இலக்காக வைத்து மோடியும் அமித்ஷாவும் களம் இறங்கப் போகிறார்கள் என்று பாஜ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. தேர்தல்கமிஷனின் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பாஜ இறங்கும் என்று தெரிகிறது.