ஜெ.மரணம் குறித்து விசாரணைகோரி இதுவரை எந்த கடிதமும் வரவில்லை: மத்திய அரசு தகவல்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 07:54


சென்னை,:

ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க கோரி இதுவரை மத்திய அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை என உள்துறை செயலர் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளார்.  

இதுகுறித்து சென்னையை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் ஜோசப், ஞானசேகரன் உட்பட பலர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மக்கள் தலைவரின் சாவில் சந்தேகம் ஏற்பட்டால் அதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதன்படி மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணத்தில் இன்னும் சந்தேகங்கள் தீர்க்கப்பட வில்லை. எனவே, ஓய்வு பெற்ற 3 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் அமைத்து, அந்த அறிக்கையை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஜெ.வின் மரணம் தொடர்பான அறிக்கைகள், ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள், ஜெ. கைரேகை உட்பட எல்லாத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’என்று கூறியிருந்தனர்.  

இந்த வழக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘அரசியல் சட்டம் 7வது அட்டவணைபடி சுகாதாரம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்படி மாநில அரசே இதில் முடிவு எடுக்கவும், தேவைப்பட்டால் விசாரணை கமிஷன் அமைக்கவும் உரிமை உள்ளது. அதன்படி மாநில அரசே விசாரணை கமிஷன் அமைக்கலாம். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசை தவறாக சேர்த்துள்ளனர். எனவே, எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்’’என்று கூறியிருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.