உபிமுதல்வர் அரசு பங்களாவில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 07:09


லக்னோ:

உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத், நேற்று முன்தினம் பதவி ஏற்ற பின்னர் லக்னோவில் விவிஐபி  விருந்தினர் விடுதியில் இரவில் தங்கினார்.

அவருக்கென ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் நேற்று  அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பே  7 புரோகிதர்கள்  யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.  வேத மந்திரங்கள்  ஓதி புனிதநீர் தெளித்து  மந்திரத் தகடுகளை வைத்தனர். பங்களா நுழைவு வாயிலில்  முதல்வர் பெயர் பலகைக்கு மேலே  ஸ்வஸ்திக் முத்திரை பதித்தனர்.  கதவில் "ஓம்" என்றும் "சுபலாபம்" என்று எழுதினர். பொதுவாக வியாபார நிறுவனங்களில் தான் பூஜை நடத்தி சுபலாபம் என்று எழுதுவார்கள். முதல்வரின் இல்லத்துக்கும் அதை புரோகிதர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது. தீய சக்திகள் வெளியேறுவதற்கே இந்த பூஜைகள் நடத்தப்பட்டதாக புரோகிதர்கள் கூறினர். இந்த பூஜைகள் நடந்தபோது முதல்வர்அங்கு இல்லை. நல்ல நாள் , நல்லநேரம் பார்த்தே அவர்குடிபுகுவார் என்று பாஜ வட்டாரங்கள் கூறின.