சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் மார்ச் 27ல் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 02:19


சென்னை,

நிலுவை வழக்குகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யாத காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வரும் 27ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, மத்திய குற்றப்பிரிவில் 2011 வரை பல வழக்குகள் முடிக்கப்படாமல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை 2 மாதங்களில் முடிக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

நான்கு மாதங்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் மாநகரகாவல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அறிக்கை தாக்கல் செய்யாததால் ஆணையர் ஜார்ஜ் இன்று ஆஜராகி விளக்கம் வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு திங்கள் கிழமை நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் அரசு கூடுதல் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆஜராகி வெள்ளியன்று தலைமை பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி அந்த அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை என்றும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பதிவுத்துறை எவ்வாறு ஏற்றுக் கொண்டது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதி டிசம்பர் 2016 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாவிடில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று என்னுடைய உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி ஆணையர் ஜார்ஜ் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. 

எனவே வரும் 27ம் தேதி சென்னை ஆணையர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.