கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 02:06

கடலூர்,

இன்று கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி வேலு, ஜெயக்குமார், முருகன் ஆகிய மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கடலூர் முதுநகர் சாலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று துப்புரவு தொழிலாளர் ஒருவர் இறங்கியுள்ளார். அவருக்கு உதவி செய்வதற்காக இரண்டு பேர்  மேலே நின்றுள்ளனர். பாதாள சாக்கடைக்குள் முதலில் இறங்கியவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைப்பார்த்த மற்ற இருவரும் அவரைக் காப்பாற்றுவதற்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கி உள்ளனர். ஆனால் அவர்களும் விஷ வாயுவினால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சிலர் காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பாதாள சாக்கடைக்குள் மயங்கி கிடந்தவர்களைக் கயிற்றில் கட்டி மேலே கொண்டு வந்தனர். அவர்களைச் சோதித்து பார்த்ததில் 3 தொழிலாளர்களும் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக  கடலூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த துப்புரவு ஊழியர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக  கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் போது உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர் சம்பவமாக உள்ளது.