‘எனது என்பதை அறுக்க வேண்டும்! – கிருபானந்த வாரியார்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

‘‘யான்என தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்’’

என்ற  பொய்யாமொழிப்படி ‘நான், ‘எனது’ என்ற இருவகை பற்றுகளை அறுக்க வேண்டும். முதலில் புறப்பற்றாகிய ‘எனது’ என்பதை அறுக்க வேண்டும். நமக்கு தொடர்பில்லாத இவ்வுலகப் பொருட்கள் அனைத்தையும் ‘‘என்னுடையது, என்னுடையது’’ என்று எண்ணி ஒவ்வொருவரும் உயிரை விடுகின்றார்கள். உடம்பை விட்டு உயிர் பிரிகின்றபோது ஒன்று கூட  உடன் வருவதில்லை. உலகத்தில் உள்ள பொருட்களில் அளவற்ற பற்று வைத்து அவை முழுவதும் தனக்கேயாக வேண்டும் என்று விரும்பி ஓங்கி ஏங்கி இளைத்து, அயர்கின்றனர்.

‘‘எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்

இதய பாவனாதீதம் அருள்வாயே’’

என்ற அருணகிரிநாதருடைய அமுத வாக்கு மனிதனை புனிதனாக்குகின்றது.

எல்லாவற்றையும் இறைவனுடைய பொருட்களாக எண்ணி அமைய வேண்டும்.

அளவற்ற நிலம் உடையவனேயாயினும் அவன் உண்பது கால் படி அரிசிதானே? பல வீடுகள் ஒருவனுக்கு சொந்தமாக இருப்பினும் அவன் படுப்பது ஆறடி நீளமுள்ள இடத்தில்தானே?

‘நம’ என்ற சொல்லுக்கு பொருள்;

ம – என்னுடையது. ந – இல்லை. நம – என்னுடையது இல்லை. நம நம என்று இறைவன் திருவடியில் மலரிட்டு அர்ச்சிப்பது, எனதன்று, என தற்போதத்தை இழப்பதற்காகவேயென அறிக. ஒரு பொருள் என்னுடையதன்று என்று எண்ணுவோருக்கு அப்பொருள் தன்னைவிட்டு விலகும் போது மனக்கவலை வராது.

‘‘யாதனில் யாதனில் நீங்கியான் நோதல்

அதனில் அதனில் இலன்’’

என்பார் திருவள்ளுவர்.

ஆதலால், பற்றற்றவனே பரமஞானி. அவனுக்கு இன்பமும் துன்பமும் வராது.

‘‘பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்.’’

– மணிவாசகம்

‘‘மற்றுப்பற் றெனக் கின்றிநின் திருப்

பாதமே மனம் பாவித்தேன்’’

– சுந்தரர்

மனைவி, மக்கள், வீடு, வாசல் நிலபுலன்களுடன் கூடியிருப்பினும், அவற்றுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜனகர் மாதிரி தாமரையிலை தண்ணீரைப்போல வாழ வேண்டும்.

‘எனது’ என்ற பற்றுள்ளவனுக்கு மேலுலகத்தில் இடமில்லை.

சிலர் ‘‘இந்த வீடுகள் என்னுடையவை’’ என்பார்; ‘‘என்ன வாடகை வருகின்றது?’’ என்று கேட்டால், ‘‘இவற்றை விற்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டன’’ என்பார். விற்றுவிட்ட வீட்டையும் நிலத்தையும் கூட என்னுடையவை என்பதில் திருப்தியடைகின்றான் மனிதன். என்னே அறியாமை! பாவங்கள் பல செய்த ஒரு கிழவி, நரகில் தீயிடை கிடந்து நெளியும் புழுவை போல துடித்துக் கொண்டிருந்தாள்.  அவ்வழியே ஒரு தேவதூதன் சென்றான். அவனைக் கண்ட கிழவி, ‘‘ஐயா புண்ணியமூர்த்தி! என்னால் இந்த நரக வேதனையை தாங்க முடியவில்லை. எனக்கு கோடி புண்ணியம் வரும். என்னை இதனின்றும் கைதூக்கி விடு’’ என்று ஈனமான குரலில் அலறினாள்.