போட்டியை தாண்டி வளருங்கள்! – சத்குரு ஜகி வாசுதேவ்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

ஒரு மனிதனின் உண்மையான, முழுமையான திறன் ‘போட்டியில்’ வெளிப்படாது. ஒருவருடன் போட்டியிட நீங்கள் முனைந்தால், அவரைத் தாண்டி ஒரே ஒரு அடி வைத்து விட மட்டுமே நீங்கள் எண்ணுவீர்களே ஒழிய, உங்கள் முழுமையான திறன் என்ன என்பது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்காது. ஒரு மனிதனின் உண்மையான திறன், அவன் தளர்வு நிலையில் இருக்கும் போதுதான் முழுவீச்சில் வெளிப்படும்.

நீங்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, அமைதியாக இருக்கும் போதுதான் உங்கள் மனமும், உங்கள் உடலும் அதன் முழுத்திறனுக்கு ஏற்ப செயல்படும். இதைக் கொண்டு ஒரு சிலரிடம், நிதானமாக இரு, அமைதியாக செயல்படு என்று சொன்னால், அவர்கள் நிதானித்து, அமர்ந்து, செயலற்றுப் போகிறார்கள். ஆனால் அவர்களை  தீவிரமாக செயலில் ஈடுபடு என்று சொன்னாலோ, வேகமாக, படபடப்பாக செயலில் ஈடுபட்டு, பதட்டத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு வித்தியாசம் புரிகிறதா? தீவிரமாக செயலில் ஈடுபடும் அதே நேரத்தில் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தீவிரத்தையும் நிதானத்தையும் ஒருசேர வைத்திருக்க நீங்கள் கற்றுக் கொண்டு விட்டால், உங்கள் திறன் எப்போதுமே அதன் முழுவீச்சில் வெளிப்படும்.