தோற்பன தொடரேல்!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

சீனுவும், கோபுவும் நல்ல நண்பர்கள். சீனு வியாபாரத்தில் கெட்டிக்காரன். எந்த பொருளை மக்கள்  விரும்பி வாங்குகிறார்கள், எந்த  பொருளால் தனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்ற நுணுக்கங்களை எல்லாம் நன்கறிந்தவன் அவன்.

அவன் மேல்நாடுகளுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய வியாபார உத்திகளை  தெரிந்து  வைத்திருந்தான்.  

அவனுடைய தந்தையும் அவனுக்கு பல வியாபார தந்திரங்களை கற்றுக் கொடுத்திருந்தார். இதனால் அவன் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தான். நகரில் பல இடங்களை அவன் விலைக்கு வாங்கி,  அவற்றில் பல கடைகளையும் கட்டி வாடகைக்கும் விட்டிருந்தான். இதனால் அவன் பணக்காரனாக இருந்தான்.

கோபுவின் நிலை வேறு. அவன் நன்றாக படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் 5000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான். சீனு, கோபு இருவருக்குமே திருமணமாகி விட்டது. இருவருக்குமே ஆளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன.

கோபு சம்பாதித்த பணம் அவனது குடும்பத்திற்கு போதவில்லை. அவன் குடியிருந்த வீட்டுக்கு வாடகை, குழந்தைகளின் கல்வி கட்டணம், மருத்துவ செலவு என அவன் திண்டாடினான். இந்நிலையில் அவன் வேறொரு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் சேரலாம் என முடிவு செய்திருந்தான். இதுதான் நல்ல யோசனையாக அவனுக்கு தோன்றியது.

கோபு, தன் மனைவியிடம் தன் யோசனையை கூறினான். அவனது மனைவி ‘‘நீங்கள் வேறொரு வேலைக்கு போக வேண்டாம். நீங்கள் குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்குங்கள். உங்கள் நண்பர்  சீனுவை பாருங்கள். அவர் வணிகத்தில் கொடிகட்டி பறக்கிறார். பெரும் கோடீஸ்வரராகவும் இருக்கிறார். நாமும் அவரைப்போல் பெரும் கோடீஸ்வரர் ஆகலாம்’’ என்றாள்.

அதற்கு கோபு ‘‘வியாபாரமெல்லாம் நமக்கு சரிவராது. அதற்கு பல நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நமக்கு எது நன்றாக தெரியுமோ, அதை செய்வதுதான் நல்லது. எனவே, இன்னொரு நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலைக்கு சேருகிறேன்’’ என்றான்.

அவனது  மனைவி மறுக்கவே, அவன் ரூபாய் 50,000 கடன் வாங்கி துணி வியாபாரம் தொடங்கினான். துணியை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. துணிகளின் சிறப்புகளை எடுத்து கூறி விற்கும் திறமையும் அவனுக்கு இல்லை. எனவே, அவனுக்கு அந்த தொழிலில் ரூபாய் 10,000 நஷ்டம் ஏற்பட்டது.

‘‘இனி வணிகம் நமக்கு சரிப்பட்டு வராது. தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதுதான் எனக்கு ஒத்து வரும்’’ என்று அவன் தன் மனைவியிடம் கூறினான்.

அவனது  மனைவியோ ‘‘அதெல்லாம் வியாபாரத்தில் சிறிது நஷ்டம் வரத்தான் செய்யும். இதற்கெல்லாம் தயங்கக்கூடாது. மீண்டும் துணி வியாபாரமே செய்யுங்கள்’’ என்றாள்.

கோபுவும் தன்னிடமிருந்த ரூபாய் 40,000ல் புதுத்துணிகளை வாங்கினான்.

அவன் அவ்வாறு துணி வாங்கும்போது அவற்றின் நிறத்தையும், அழகையும் கவனித்தானே தவிர, தரத்தை கவனிக்கவில்லை. அங்கங்கே சிறிது கிழிசல் உள்ள ஆடைகளை கொடுத்து ஒரு நிறுவனம் அவனை ஏமாற்றி விற்றுவிட்டது.

கோபு அத்துணிகளை வாங்கி விற்கும்போது, வாடிக்கையாளர்கள் அத்துணிகளில் உள்ள சிறு கிழிசல்களை காட்டியபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவன் அறிந்தான். இவ்வகையில் அவன் விற்ற துணிகளை எவருமே வாங்கவில்லை.

இதனால் அவனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கோபு கலங்கி போனான். இதனால் கடன் தொல்லைக்கு ஆளானான். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து தன் கடனை அடைத்தான்.

இனி, தனக்கு தோல்வி தரக்கூடிய செயல்களில் இறங்கக்கூடாது என முடிவெடுத்தான்.

கருத்து: தொடர்ந்து தோல்வி தரக்கூடிய செயலில், வணிகத்தில் ஈடுபடக்கூடாது.

(நன்றி : ‘அவ்வையாரின் ஆத்திசூடி  நீதிக்கதைகள்’)