வளமான சிந்தனை! சிறப்பான பேச்சு!! – மு.திருஞானம்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

‘வளமான சிந்தனைக்கு நல்ல எதிர்காலம் உண்டு’. நம்முடைய எண்ணங்கள்தான் நமது செயல்பாட்டுக்கு முதலடி. அதன் அடிப்படையில்தான் நாம் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். வளவள பேச்சுக்கள் சலசலப்பைத்தான் ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயத்திலும் நாம் பேசுவதற்கு முன், நம் வார்த்தைகளுக்குண்டான மதிப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வளமான வார்த்தைகளை அளவோடு பேசினால் அதற்குரிய பலன் சிறப்பாக இருக்கும்.

கம்பராமாயணத்திலே சொல்லின் செல்வராக அனுமார் என்று  சொல்வார். அதற்குக் காரணம் அவரது பேச்சில் அந்த அளவுக்கு சிறப்பு இருக்கும். அதுக்கு உதாரணம்தான் இலங்கையில் சீதாபிராட்டியை பார்த்து பேசி விட்டு – மீண்டும் ராமரிடம் வரும்பொழுது என்ன ஆயிற்றோ என்ற பதட்டத்தில் இருக்கும் ராமரின் மனம் பாதிக்கப்படக்கூடாது! அதே சமயம் சந்தோஷப்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்றுதான் ‘‘கண்டேன் கற்புக்கு அணிகலன் சீதாபிராட்டியை’’ – ராமரை பார்க்கும் பொழுது சொன்ன முதல் வார்த்தை. அதற்கு பிறகுதான் நடந்த விஷயங்களையும், தன் சாகசத்தையும் கூறினார். இதுதான் ‘வளமான சிந்தனை – சிறப்பான பேச்சு’.

ஒரு ஆசிரமத்தில் குருவிடம் புதிதாக சேர்வதற்காக ஒரு சிஷ்யன் வந்தான். குரு அவனை பற்றி விசாரித்தார். சிஷ்யனுக்கு குரு தன்னை நிராகரித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் படபடவென தன் பூர்வாங்கத்தை சொல்லி, வளவளவென தன்னோட திறமை – புத்திசாலித்தனத்தை பத்தியெல்லாம் பிரசங்கம் பண்ற மாதிரி பேச ஆரம்பித்தான். குரு ஒன்றுமே பேசாமல் அவனை சேர்த்துக்கொண்டு உனக்கு முதல் நாள் பாடம் ‘மவுன விரதம்’ என சொல்லி விட்டார். புது சிஷ்யனுக்கு முடியவில்லை. மத்த சிஷ்யங்ககிட்ட பேச வாயைத் திறந்தாலே அவங்க ‘உஷ், பேசாதே.... மவுன விரதம்’ன்னு அவனை அடக்குனாங்க. புது சிஷ்யன் நெளிய ஆரம்பித்தான். ஒரு வழியா கஷ்டப்பட்டு அன்றைய பொழுதை போக்கினான். மறுநாள் விடிந்ததும் காலைக்கடனை முடிச்சிட்டு நேரே குரு கிட்ட போய் நின்னு, ‘‘வணக்கம் குருவே’’ என்று நமஸ்காரம் பண்ணினான்.

குரு அவனை ஏற இறங்கப் பார்த்து ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார். ‘‘இன்னைக்கு எனக்கு என்ன பாடம்?’’ என்று கேட்டான். குரு யோசனை பண்ணிட்டு ‘‘ஒரே ஒரு கேள்வி கேட்கலாம்.... ஆனா இப்ப இல்லை, இன்றைக்கு மாலையில்... அதுவரைக்கும் கேள்வியை சிந்தனை பண்ணு’’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

புது சிஷ்யன் மத்த சிஷ்யங்ககிட்ட பேச முற்பட்டான். யாரும் அவனுக்கு ஒத்துவரலே! ஒரே ஒரு சிஷ்யன் மட்டும் ‘‘அதிகம் பேசாதே ஆபத்து’’ என்று சொல்லிட்டு போனான்.

சாயங்காலம் புது சிஷ்யன் தன் குருவை தேடிட்டு போனான்... குருகிட்ட போய், ‘‘குருவே... அதிகம் பேசினால் ஆபத்தா?’’என்று ஒரு கேள்வி கேட்டான்.

குரு அமைதியா அவனை பார்த்து விட்டு ‘‘இந்த தவளை இருக்கே, எப்ப பாரு சளசளன்னு சத்தம் போட்டுக்கிட்டே இருக்கும். அந்த சத்தமே... அதுக்கு ஆபத்து... சத்தத்தை குறி வச்சு பாம்பு வந்து அதை சாப்பிட்டு விட்டு போயிடும். மத்தபடி தவளை கத்தறதினாலே ஒரு பிரயோஜனமும் கிடையாது! ஆனா அதே சமயம் இந்த சேவல் இருக்கே... அது பாரு அமைதியா சுத்திக்கிட்டிருக்கும். ஆனா அதிகாலையில் மட்டும் ‘கொக்கரக்கோ’என்று பயங்கரமாக சத்தம் போட்டு கூவும். அது போடுற ரெண்டு மூணு கூவல்ல... உலகமே விழிக்கும். மக்கள் தூக்கத்திலே இருக்கிறவங்க பொழுது விடியுதுன்னு எழுந்து காலை பணியில் ஈடுபடுவாங்க.

அதே போல காக்கா... நீ ஒரு காக்காவுக்கு உணவு வச்சா அது சாப்பிடாது... ‘கா கா’ன்னு கரைஞ்சு தன் இனத்தையே கூப்பிடும் – கூட்டமாத்தான் அந்த உணவை பகிர்ந்து உண்ணும்.

இப்படி குறைவா குரல் எழுப்புற பறவைகள்னால நல்ல உபயோகமான செயல்பாடுகள் இருக்கு. தவளை மாதிரி வளவளன்னு பேசினா ஆபத்துதான் வரும். அதனால நீ எதையும் சிந்தித்து பேசு. சிறப்பாக பேசு. நல்லதை பேசு. அளவோட பேசு. வளமோட இரு! இன்னைக்கு  இதுதான் பாடம்’’ என்று சொல்லி அனுப்பினார்.

‘‘ஒரு வாசகம் ஆனாலும்  திருவாசகம்’’ போல சொல்லிவிட்டாரே என்று சீடனும் போனான். அளவோடு பேசுங்க... வளமாக சிந்திங்க... சிறப்பா இருக்கும்!