ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6000 அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 01:42

சென்னை,

ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக 6000 அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தகவலை ஓ. பன்னீர் செல்வம் அணியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமிருந்தும் வந்த பிரமாணப் பத்திரங்களைத் தேரதல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இரட்டை இலை சின்னத்தை ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கக் கோரி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களும் பிரமாணப் பத்திரங்களை அனுப்பத்  தொடங்கியுள்ளனர். மொத்தம் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடமிருந்து உறுதிப் பத்திரங்கள வரத் தொடங்கியுள்ளன. அவையும் விரைவில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு என்ற பிரச்சினை எழுந்தது. அப்பொழுது கட்சி நிர்வாகிகள் இதே போன்ற பிரமாணப் பத்திரங்களை அன்றைய முதல்வர் அகிலேஷுக்கு ஆதரவாக தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அந்தப் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில்தான் சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சசிகலா அணியின் மனு குறித்து, நாளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உள்ளது.

புதன் கிழமையன்று இருதரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இருதரப்பு வாதங்களையும் தேர்தல் ஆணையம் கேட்டு பெற்று இதுகுறித்து முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.