போலீஸ் வன்முறையைக் கண்டித்து பாரிஸில் மாபெரும் பேரணி

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 01:38

பாரிஸ்,

பிரான்சில் சிறுபான்மை கருப்பின மக்களுக்கு எதிராக போலீஸாரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பேரணி நடத்தினர்.

பிரான்ஸில் வசிக்கும் 22 வயது கருப்பின இளைஞர் தியோ-வை சென்ற பிப்ரவரி மாதத்தில் பாரிஸ் புறநகர்ப் பகுதியான அல்னாய் சோயஸ் போய்ஸ் பகுதியில் போலீஸார் கடுமையாக தாக்கினார்கள். காவல் நிலையத்துக்கு தியொவை அடைத்து வைத்தனர். ஒரு போலீஸ்காரர் அந்த இளைஞரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயம் அடைந்த தியோ 2 வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக 4 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரான்சில் ஆங்காங்கே சிறுபான்மை மக்கள் மீது போலீஸாரின் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த சம்பவத்திற்குப் பிறகு தியோ, பிரான்ஸில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் மத்தியில் உரிமை மீறலுக்கான ஒரு ‘அடையாளம்’ ஆகிப் போனார்.

அவரது படத்தை ஏந்தி சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் அடக்குமுறை ஏவப்பட்டது. எனினும் இந்தப் போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் பரவி வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். போலீஸார் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.