மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 43

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017

 துலை கொண்டு வந்து நாட்டப்பட்டது. மறையார் தந்த கோவணத்தை ஒரு தட்டில் இட்டனர். மற்றொரு தட்டிலே தம்மிடம் நெய்து அழகாக இருந்த கோவணத்தை இட்டார் நாயனார்.

 தட்டு சமம் ஆகவில்லை. மறையவர் கோவணமிட்ட தட்டு தாழ்ந்தது.  மற்ற தட்டு உயர்ந்தது.  தராசின் தவறா என்று பார்த்தார்கள். தராசு சரியாகத்தான் இருந்தது.  அடியவர்கட்குக் கொடுப்பதற்கென்று வைத்திருந்த கோவணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தட்டில் இட்டார் அமர்நீதியார்.

மறையவர் தட்டு தாழ்ந்தது. அவரது தட்டு உயர்ந்து கொண்டேயிருந்தது. அதனைக் கண்டு அதிசயித்தார் நாயனார், ‘இது உலகில் எங்கும் இல்லாத மாயை. இக்கோவணத்தின் பெருமைதான் என்னே? எத்தனை கோவணமிட்டாலும் தட்டு சமமாகவில்லையே?’ என்று உள்ளம் மருண்டார்.

 மறையவராக வந்த இறையவரோ இதனைக் கவனிக்காதவர் போல் ஐயம் செய்து கொண்டிருந்தார்.

 வெண்மையான ஆடைகள், பட்டாடைகள், சிறந்த பீதாம்பரங்கள் எண்ணிலாதன் இட்டார். நாயனாரது தட்டு உயர்ந்தது.  இறைவருடைய தட்டு தாழ்ந்து கொண்டேயிருந்தது. ஒன்றும் புரியவில்லை நாயனாருக்கு. அதற்குச் சேக்கிழார் பெருமான் ஒரு காரணம் சொல்கிறார்.

‘முட்டில் அன்பர்தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்

மட்டு நின்றுதட் டருளொடும் தாழ்வுறும் வழக்கால்

பட்டொ டுந்துகில் அநேககோ டிகளிடும் பக்தர்

தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு!’

 அன்பு வைத்த இடத்தில் அருள் ஏற்படும். அன்புக்கு அருள் தாழத்தானே வேண்டும்? குழந்தை மீது அன்பும்,  அருளும் கொண்டார் அப்பா. ‘உன் மேல் ஏறிக்கொள்கிறேன்’ என்று கூறும் குழந்தை. அப்போது தந்தைதானே  தாழவேண்டும்? அது போல, அடியவர் அன்புக்கு ஆண்டவர் அருள் தாழும். அன்பு மேலிட மேலிட, அருள் தாழ்ந்து கொண்டே இருக்கும்.  இதனை இறைவர் இச்செயல் மூலம் அறிவிக்கிற அழகும்,  சேக்கிழார் பெருமான் கூறும் சொல் திறமும், மிகமிக அழகாக அமைந்துள்ளன.

‘எம்பெருமானே! ஆடை பட்டு முதலிய இட்டுத் தட்டு சமமாகவில்லை. ஆதலால் ஒரு விண்ணப்பம். என் தட்டில் பொன் மணி முதலியவற்றை இடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார் நாயனார்.

‘இவையெல்லாம் எனக்கு உதவுமா? இனி வேறு சொல்லவிருக்கின்றது. உனது விருப்பம் போல செய்க’ என்றார் இறைவர்.

சேக்கிழார் காலத்தில் பதினாறு காரட் கிடையாது. நல்ல செம்பொன், வெள்ளி, நவமணித் திரள், வேறுபல உலோகங்களும், மற்றைய பொருட்கள் எல்லாவற்றையும் தராசில் இட்டார் அமர்நீதி நாயனார்.

அப்போது நாயனாரது தட்டுத் தாழாது மேலே உயர்ந்தது. அதனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

 ஆசை என்னும் சங்கிலி நுனியில் இருக்கிறார் ஆண்டவர். ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையை விட்டு விட்டால் சுவாமி வந்துவிடுவார்.

 ஆசை முழுவதும் விட்டுவிட்டவர் அருகில் இருக்கின்றாராம் ஆண்டவர்.

 புவனமெல்லாம் ஒருங்கு கூடினும், இறைவருடைய கோவணத்தட்டுக்கு  நிகராகாதது கண்ட அடியவர். அந்தணரைத் தொழுதார்.  ‘இனி வேறு பொருள் ஏதும் இல்லை. அடியேனும், அடியேனுடைய மனைவியும், மகனும் தராசில் ஏறுவதற்கு அனுமதி தரவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.

 இறைவர், அமர்நீதி நாயனாரைப் பிறவிப் பெருங்கடலெனும் கரையேற்றும் பொருட்டும் தராசில் ஏற இசைவு தந்தருளினார்.

கற்பின் மிக்க மனைவியுடனும் மைந்தருடனும் ஒப்பற்ற அந்த தராசை வலம் வந்தார் நாயனார். ‘சிவபெருமானே! இதுகாறும் திருநீற்று நெறியிலே பக்தி வைத்து, அடியவர்க்குச் செய்த தொண்டில் அணுவளவேனும் தவறு இல்லையெனில் இத்தட்டு சமமாக வேண்டும்’ என்று கூறிப் பஞ்சாட்சரத்தை ஜபித்துக் கொண்டே மனவி மைந்தருடன் தட்டின் மீது திருநல்லூர் மேவிய தேவரைத் தொழுது ஏறினார்.

 தம்முடைய உடைமையெல்லாம் துறந்த அமர்நீதியார், முடிவில் தம் மனைவி மக்களையும், தம்மையுமே துறந்தார்.

 மனைவி மைந்தருடன் தானே தராசில் ஏறினார்.

உடனே, துலையின் இரு தட்டுகளும் சமமாகிவிட்டன. பூவணத்தவர் கோவணமும், அமர்நீதியார் குறைவிலாத அடிமைத் தொண்டும் ஒப்புடையனவன்றோ?

இறைவருடைய பிரம்மசரியமும் அமர்நீதியாருடைய அடிமைத் தொண்டும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு துலை நேர்பட நின்றது.

 அப்பர் பாடுகிறார்.

 ‘நாட்கொண்ட தாமரைப் பூந்தடஞ் சூழ்ந்த

 நல்லூரகத்தே

கீழ்கொண்ட  கோவணங் காவென்று சொல்லிக்

கிறிபடத்தான்

வாட்கொண்ட கண்ணி மனைவியொ டங்கோர்

வாணிகரை

ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமென் றோஇல்

வகலிடமே!’

தொண்டருடைய பெருமையை கண்டு எல்லோரும் அதிசயித்தனர்.

தேவர்கள் அமர்நீதியாரின் பெருமையை  வியந்து மழை பொழிந்தனர். அப்பூமழையில்  மறைந்துவிட்ட இறைவர், திருநல்லூரில் தேவாதிதேவர் எந்த கோலத்துடன் உள்ளனரோ, அதே கோலத்துடன் விடையின் மீது உமையம்மையாருடன் காட்சியளித்தருளினார். முக்கண் மூர்த்தியைக் கண்ட அமர்நீதி நாயனார் தொழுதார்; துதித்தார்.

நாதர் தம்திரு வருளினால் நற்பெருந் துலையே

மீது கொண்டேழு விமானம தாகிமேற் சொல்லக்

கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த

ஆதி மூர்த்தியா ருடன்சில புரியினை அணைந்தார்.

தலைவருடைய கருணையால், துலையே விமானமாகியது. அதில் அமர்ந்திருந்த அமர்நீதி நாயனார், அவரது மனைவியார், மைந்தர் மூவரும் மேற்சென்று சிவபுரம் சேர்ந்து பெருவாழ்வு பெற்றார்கள்.

தொண்டர்களின் தொண்டினை ஏற்று அவர்களுக்கு பெருவாழ்வு அளிப்பதில், சிவனுக்கு இணை எந்தக் கடவுளும் இல்லை என்பது வாரியார் வாக்கு. சிவனுடைய லீலைகள் எல்லாமே அடியார்களின் சேவையின் அடிப்படையிலே அமைந்திருந்தன.