ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 01:18


புதுடில்லி,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை அமல்படுத்துவதற்குத் தேவையான நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த 4 துணை மசோதாக்களுக்கும் நாடாளுமன்றத்திn அங்கீகாரத்துக்காக தாக்கல் செய்யப்பட உள்ளன.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற 4 துணை மசோதாக்கள் வருமாறு: 1.ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஜிஎஸ்டி), 2.மத்திய ஜிஎஸ்டி (சி-ஜிஎஸ்டி), 3.யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தை அமல் செய்வதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதற்கான மசோதா எஸ்-ஜிஎஸ்டி துணை மசோதா.

இந்த 4 துணை மசோதாக்களுக்கும், டில்லியில் இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இந்த நான்கு மசோதாக்களும், நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும். ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் நடப்பு கூட்டத் தொடரிலேயே ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மாநில ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதை அடுத்து, 4 துணை மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியினை நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வர முடியும் என கூறப்பட்டுள்ளது..

ஏற்கெனவே, இந்த நான்கு துணை மசோதாக்களுக்கும், ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்-ஜிஎஸ்டி துணை மசோதாவைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் பேரவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.