தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் செயல்பட தடை: சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது பசுமை தீர்ப்பாயம்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2017 00:54

தேனி,

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கான அனுமதியை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இன்று ரத்து செய்தது.

தேனி மாவட்டம் போடி மலைப்பகுதிகளில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. சுமார் ரூ.1,500 கோடியிலான இந்த திட்டத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைப்பதாகும். 

பொட்டிபுரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வனத்துறையிடம் அனுமதியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை எதிர்த்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திடம் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பினர் வழக்கு தொடுத்தனர். அதில் ஆய்வகத்தை அமைக்க அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனமானது சுற்றுச்சூழல் அனுமதியை கொடுத்துள்ளது. மேலும் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. முறையான அனுமதி பெற புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்படியும் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.