கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 68

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2017
கண்ணதாசனை விரட்டித் துரத்திய ஓர் ஆரம்பகால அனுபவம். தான் எழுதிய கதையுடன் ஒரு பத்திரிகை ஆசிரியரை சந்திக்கப்போயிருந்தார். பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்த கதையை அந்த ஆசிரியரிடம் காட்டினார் கண்ணதாசன்.

அந்தக் கதையைப் படித்துப் பார்த்த பத்திரிகை ஆசிரியர், சத்தம்போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஏளனச் சிரிப்பின் எதிரொலி கண்ணதாசனுக்கு பல ஆண்டுகள் கேட்டுக்கொண்டே இருந்தன.

ஒரு எழுத்தாளனுக்கு வரக்கூடிய மிக இயல்பான, அதே சமயம் மிகவும் கொடுமையான பயம் அதுதான். ‘‘நாம் எழுதுவதில் விஷயம் இருக்கிறதா அல்லது அது கிண்டலுக்கும் ஏளனத்திற்கும் உரியதா’’ என்ற அச்சமும் கேள்வியும் எழக்கூடியதுதான். வெறும் காப்பி அடிப்பவர்களுக்குத்தான் பயமோ அச்சமோ இருக்காது. சுயமாக எதையாவது செய்யப்போனால் சந்தேகம் வரத்தான் செய்யும்.

பத்திரிகை ஆசிரியரிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் காயப்படுத்துவதாக இருந்தாலும், கதையும் கவிதையும் எழுதிப் பார்த்துவிடவேண்டும் என்ற உந்துதல் கண்ணதாசனை விடவில்லை. ஆனால் தடைகள் நின்றபாடில்லை.

அவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்த சமயம். மாதம் இருமுறை ஸ்டூடியோ வெளியிட்ட பத்திரிகையைப் பார்த்துக்கொள்ளும் வேலை அவருக்கு.

யார் அந்தப் பத்திரிகைக்கு ‘சண்டமாருதம்’ என்று பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. 'சண்டமாருதம்' என்றால் அட்டகாசமான காற்று அல்லது புயல் என்று பொருள். ஸ்டூடியோவில் தயாரிக்கப்படும் படங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு, தபாலில் வரும்  கதைகளிலிருந்து எதையாவது தேர்ந்தெடுத்து பிரசுரித்துக் கொண்டிருப்பதில் என்ன புயல் அல்லது சூறாவளி விவகாரம் இருக்க முடியும்?

சண்டமாருதத்தை நிரப்ப மாதத்தில் பத்து நாட்கள் வேலை செய்தால் மீதமுள்ள நாட்களை சும்மா கழிக்க வேண்டியதுதான். எந்தப் புயலுக்கான அல்லது பயலுக்கான வாய்ப்பும் அதில் இல்லை.

நாட்கள் இப்படி சென்று கொண்டிருந்த போது, எல்லோரும் டெரராக நினைத்து எதிரே போக அச்சப்பட்ட ஸ்டூடியோ அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் முன் கண்ணதாசன் யதேச்சையாக எதிர்பட்டார் !

பூனை போல் நழுவிவிடவேண்டும் என்பதுதான் கண்ணதாசனின் எண்ணம். ஆனால் அதுதான் நடக்கவில்லை.

‘இந்தா மேன்,’ என்று கண்ணதாசனை அழைத்தார் சுந்தரம்!

ஏன் அழைத்தார் என்று கண்ணதாசன் யோசிப்பதற்கு முன், ‘உனக்கு கதைக்கு டிரீட்மெண்ட் எழுதத்தெரியுமா.’ என்று கேட்டார் டி.ஆர்.எஸ்?!

‘டிரீட்மெண்ட்’ என்றால் திரைக்கதை என்று பிறகுதான் தெரிந்துகொண்டார் கண்ணதாசன். ஆனால்  தயங்கியபடியே தெரியும் என்று கூறிவிட்டார்!

அடுத்த நாள், சுந்தரத்தின் உதவி இயக்குநர் சுந்தரேசன் கண்ணதாசனிடம் ‘ஆதித்தன் கனவு’  கதையைக் கொடுத்தார். அதை ஒரு கை பார்ப்பதற்குள் ஏற்கனவே ஸ்டூடியோவில் எழுதப்பட்டிருந்த பல திரைக்கதைகளை வாங்கிப்பார்த்தார் கண்ணதாசன்.

அவை எந்த மோஸ்தரில் எழுதப்பட்டிருந்தன என்பது அவருக்குப் பிடிபட்டது. ‘ஆதித்தன் கனவு' கதைக்குள் தன்னுடைய கற்பனையைக் கொட்டினார். தான் எழுதிய காட்சிகளை வரிசைப்படுத்தினார். காற்றில் பறப்பதுபோல் இருந்தது.

ஆனால் கண்ணதாசனின் படைப்பே காற்றில்தான் பறந்தது!  அவருடைய கற்பனைகள் அரங்கேறவில்லை. அவை யார் கண்ணுக்கும் படாமல் ஒதுக்கப்பட்டன!  

இதன் பிறகும், மாடர்ன் தியேட்டர்ஸின் கதை இலாகாவில் சேர்ந்து அதன் அடுத்த படமான ‘மாயாவதி’ யின் கதை விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கண்ண தாசனுக்கு  கிடைத்தது. ஆனால் கதையின் அடுத்த திருப்பத்தில் அவர் விளம்பர துறைக்கு மாற்றப்பட்டார்!

அடுத்த நாள் மாலை மாடர்ன் தியேட்டர்ஸ் வேலையை விட்டுவிட்டு கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸில் கண்ணதாசன் அமர்ந்திருந்தார்!

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில்  ஜூபிடர் பிக்சர்ஸின் மேலாளராக இருந்த டி.எஸ். வெங்கடசாமியின் முன் தன்னுடைய ஒரு புதிய திரைக்கதையுடன் இருந்தார் கண்ணதாசன்.

எம்.ஜி. ராமச்சந்திரனும் எம்.ஜி. சக்ரபாணியும் வெங்கடசாமியை சந்தித்துவிட்டு சென்றதும் கண்ணதாசன் அவரைப் போய் பார்த்தார்.

அப்போது ஜூபிடரில் கதாசிரியர்களின் தட்டுப்பாடு இல்லை. பாடல் எழுதுவோருக்கான தேவை இருந்தது. ‘உங்களால் பாடல் எழுத முடியுமா?’ என்று  கண்ணதாசனைக் கேட்டார் வெங்கடாசலம். முடியும் என்றார் கண்ணதாசன். அடுத்து நடந்த விஷயம் மிக சுவாரஸ்யமானது.

வெங்கடசாமி சொன்னார் --– ‘‘சரி. அப்படியென்றால், உங்களை நான் ராம்நாத்திடம் அனுப்புகிறேன். மற்றவர்களிடம் போனால் அவர்கள் உங்களைத் தட்டிக்கழித்து விடுவார்கள்!’’

புதியவர்கள் வந்தால் அவர்களின் திறமைகளைப் பரிசோதித்து, வாய்ப்பு கொடுப்பவர்கள் கோடியில் ஒருவராக இருப்பார்.

ஏதாவது சாக்குச் சொல்லி, இடையூறுகள் ஏற்படுத்தி, ஆளை வீட்டுக்கு அனுப்புவதுதான் பலருடைய வேலையாக இருக்கும்!  

கண்ணதாசனை வெங்கடசாமி ராம்நாத்திடம் அழைத்துச் சென்ற போது, பின்னவர் அவருடைய நண்பரான ஓவியர், கலை இயக்குநர் ஆர்.கே. சேகருடன் இருந்தார்.

ராம்நாத்தையும் சேகரையும் ‘தங்கங்கள்’ என்று பிறகு நினைவுகூர்வார் கண்ணதாசன்.

முதல் திரையுலக வாய்ப்புக்காக கண்ணதாசன் அவர்கள்முன் நின்றபோது, அந்த இருவரும் தன்னை மிகுந்த ‘அனுதாபத்தோடும் அன்போடும்’ பார்த்தது கண்ணதாசன் மனதில் ஆழமாகப்பதிந்தது.

கதையை விட சதையை மதிக்கும் திரை உலகத்தில் கருணையா, அன்பா, ஆதரவா? ஆம், அவையேதான்.

‘கன்னியின் காதலி’யில் கண்ணதாசன் எழுத வேண்டிய சூழ்நிலையை விளக்கிய ராம்நாத்தின் பரிவு இன்னொரு விதத்திலும் வெளிப்பட்டது.

‘உங்கள் கற்பனைக்கு எழுதுங்கள்...அப்புறம் மெட்டுப் போட்டுக்கொள்ளலாம்’ என்றார். ஆரம்பப் பாடலாசிரியன் மெட்டோடு மல்லுக்கட்டவேண்டாம் என்கிற ஆதரவான எண்ணம்.

தமிழ்த் திரைப்பாட்டில் எவரெஸ்டை தொடப்போகிற கண்ணதாசன், ‘கலங்காதிரு மனமே’ என்ற தனது முதல் பல்லவியின் முதல் வரியை எழுதினார். ராம்நாத்தைப் போன்ற கலை மேதைகள் மனிதாபிமானிகளாகவும் இருக்கும்போது, நல்ல கலைஞர்களும் கவிஞர்களும் ஏன் கலங்க  வேண்டும்? கண்ணதாசன் அடுத்த நாள் பாடல் பிரதியைக் காட்டிய போது அதைப் படித்துவிட்டு, ‘குட்’  என்றார் ராம்நாத்.

பின்னாளில் லட்சம் பேர் புகழ்ந்தென்ன?   கண்மறைவாக இருந்த நாளில் முதல் பாடலை மனம்திறந்து வரவேற்று ஏற்றுக்கொண்ட ராம்நாத், கவிஞரின் இதயபீடத்தில் தனியிடம் பெற்றார்.

* * *

ஜெமினி ஸ்தாபனத்திற்கு நடிக்கும் வாய்ப்பைத் தேடிப் போன கணேசன், நடிகர்களைத் தேர்வு செய்ய உதவும்  ‘காஸ்டிங் அசிஸ்டன்ட்’ பணியில் அமர்ந்தார்.

தனக்கு ஏதாவது வேடம் கிடைக்குமா என்று ஏக்கத்துடன் பிற நடிகர்களுக்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு ஏற்பாடு செய்வார்.

கடைசியில், ‘சம்சாரம்’ படத்தில் நடிகர் பட்டியலில் தன் பெயர் இருக்கும் என்று கணேசன் மிகவும் எதிர்பார்த்தார். கணேசனின் பெயர் இருந்தது...ஆனால் அது சிவப்பு மையால் அடிக்கப்பட்டிருந்தது! கணேசனின் மனம் உடைந்தது!

சம்பளத்திற்காகவும், வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பிலும் ஜெமினியில் இருப்பதா, அல்லது வேலையை விட்டுவிட்டு ஒருமுகமாக நடிக்கும் வாய்ப்புகளைத் தேடுவதா என்ற போராட்டம் கணேசனின் மனதில் எழுந்தது.

அந்த நிலையில், கொதிக்கும் மனதை ஆறச்செய்து வழிகாட்டக்கூடியவர் யார்?

தியாகராய நகரில் இருந்த ராம்நாத் வீட்டுக்கு கணேசன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் விரைந்தார். ராம்நாத்திடம் மனம் திறந்தார்.

வாழ்க்கைக் குறிக்கோளை முதலில் திட்டவட்டமாக முடிவுசெய்துகொள் என்றார் ராம்நாத்.

நடிகனாக நல்ல பெயர் வாங்குவதுதான் என் லட்சியம் என்றார் கணேசன்.

நாராயணன் கம்பெனி பட்டண்ணாவுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்பினார் ராம்நாத்.

ஆறு வருடங்களாக செய்த ஜெமினி ஸ்டூடியோ வேலையை விட்டுவிட்டு, ராம்நாத் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு நாராயணன் கம்பெனிக்கு கிளம்பினார் கணேசன்.

ராம்நாத் அந்தக் கம்பெனிக்காக இயக்கிக் கொண்டிருந்த ‘தாய் உள்ளம்’ படத்தில் முக்கியமான வில்லன் வேடம் கணேசனுக்கு கிடைத்தது.

‘ஜெமினி’ கணேசன் 1970ல் நடித்து  வெளிவந்த ‘காவியத் தலைவி’யில், ‘நேரான நெடுஞ்சாலை, ஓரிடத்தில் இரு கூறாகப்பிரிவதுண்டு’ என்றொரு பாடல் தொடங்கும். ஜெமினி கணேசனின்  நடிப்பு வாழ்க்கை தொடங்கும் வகையில் இத்தகைய ஒரு திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தவர் ராம்நாத்துதான்.

* * *

வில்லுப்பாட்டுக்காரராக பின்னாளில் புகழ்பெற்ற சுப்பு ஆறுமுகம், 1954ல் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். படத்தின் மிக முக்கியமான காட்சியில், ‘இறைவா இறைவா இறைவா’ என்று தொடங்கும் பாடலை எழுதினார் (பாடியவர் நாகையா). ஒரு வண்டிக்காரன் தன் குதிரையிடம் பாடுவதுபோல் அமைந்த, ‘அன்போடு இன்பமாக வாழலாம் நண்பனே’ (குரல் பி.பி.எஸ்.) என்ற ‘விடுதலை’  படப்பாடலையும் சுப்பு ஆறுமுகம் எழுதினார்.

இந்த வாய்ப்புகளைக் கொடுத்து, சுப்பு ஆறுமுகத்திற்கு உற்சாகம் அளித்தவர் 'விடுதலை'யின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராம்நாத்! அதோடு விட்டாரா? ‘‘நான் மட்டும் உங்களுக்கு வாய்ப்பு தந்தால் போதாதே. நல்ல மியூசிக் டைரக்டரை நண்பராக ஆக்கிக்கொள்வோமே’’ என்று ஆறுமுகத்தின் வருங்காலத்தைக் குறித்து தானும் கவலைப்பட்டார்! நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஸ்டூடியோ முதலாளிகள் என்று திரை உலகில் எத்தனையோ பேருக்கு நண்பராகவும் வழிகாட்டியாகவும் கலங்கரைவிளக்கமாகவும் விளங்கினார் கேமரா மேதை ராம்நாத். அதனால்தான், அவரை ‘உலகத்திலேயே ஓர் அபூர்வ பிறவி’ என்றார் கண்ணதாசன்.

(தொடரும்)