தண்ணீருக்குச் செலவிடும் தொகையை மிச்சப்படுத்த ரயில்வே திட்டம்

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2017 23:50


புதுடில்லி,

ஆண்டுதோறும் மாநிலங்களில் இருந்து பெறும் தண்ணீருக்காக ரூ. 4000 கோடியை ரயில்வே நிர்வாகம் கட்டணமாக வழங்கி வருகிறது. இந்த ரூ. 4000 கோடியில் ரூ. 400 கோடி அளவுக்கு மிச்சப்படுத்த ரயில்வே திட்டமிட்டு வருகிறது.

தற்பொழுது மாநில அரசுகளிடம் இருந்து ரயில்வே நிர்வாகம் நேரடியாக தண்ணீர் வாங்குகிறது. அதற்கு ரூ. 4000 கோடி கட்டணமாகச் செலுத்துகிறது. இந்த நடைமுறைக்குப் பதிலாக இனி புதிய நடைமுறையைப் பின்பற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

மறு சுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை தனியாரிடம் இருந்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டம் வகுத்து வருகிறது.

இதற்காக தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டங்களை வகுக்கத் துவங்கியுள்ளது. இந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதில் தனியார் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

இதற்கென தனியாக தண்ணீர் கொள்கை ஒன்றை வகுக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பருவ நிலை மாற்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த 2030ம் ஆண்டு வாக்கில் இந்தியா தன்னுடைய தண்ணீர்ப் பயன்பாட்டை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஐ.நா. வகுத்த திட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.