செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 168– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2017

‘இரு துருவம்’ இந்த  படம் இந்தியிலிருந்து வாங்கி எடுக்கப்பட்ட படம்.  `கங்கா- ஜமுனா’ என்கிற பெயரில் இந்தியில் இந்த படத்தை தயாரித்து நடித்தார் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார்.

இந்த  படத்தின் கதையையும் அவரே எழுதியிருந்தார். அந்தக் கதையை வாங்கி நடிகர் பி.எஸ். வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் இந்த  படத்தை தயாரித்து அப்படி வந்த படம் தான் `இரு துருவம்.’ இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி. சந்தர்ப்பவசத்தால் சிவாஜி கொள்ளைக்காரனாக மாறுவதாக கதை. இதில் கொள்ளைக்காரன் அண்ணன் சிவாஜியை அவரது தம்பி முத்துராமனே பிடிப்பதாக கதை அமைந்திருந்தது.

`தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே! உன்னை திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே’ என்கிற பாடல் மட்டும் பிரபலம். படம் சுமாராகத்தான் போனது. சென்னை வெலிங்டன் தியேட்டரில் வெளியான படம் இது. `பிராப்தம்’ தெலுங்கில் சாவித்திரியும்- நாகேஸ்வரராவும் ‘மூகமனசுலு’ (‘ஊமை உள்ளங்கள்’) என்ற படத்தில் நடித்தார்கள்.  இந்த படம் தெலுங்கில் மகத்தான வெற்றி பெற்று, வெள்ளி விழா கொண்டாடியது.

பூர்வஜென்மத்தைப் பற்றிய கதை. அதை தமிழில் தயாரிக்க விரும்பினார் சாவித்திரி.  நாகேஸ்வர ராவ் நடித்த வேடத்திற்கு சிவாஜி ஒப்பந்தமானார். ஆரூர்தாஸ் வசனமெழுதினார். கண்ணதாசன் பாடல்கள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். படத்தை சாவித்திரியே டைரக்ட் செய்தார். நடிப்பில் தன்னிகரற்று திகழ்ந்த சாவித்திரியின் இந்தப் படம் தெலுங்கில் 25 வாரம் ஓடிய படத்தின் தமிழ்  பதிப்பு – அதிர்ச்சி தரும் தோல்வியைத் தழுவியது.

`சவாலே சமாளி’ – இந்த படமும்  ஒரு வகையில் `பட்டிக்காடா பட்டணமா’ படத்தின் சாயலில் இருக்கும். பணக்கார பெண்ணுக்கும், ஏழைக்கும் நடக்கும் பொருந்தாத திருமணம் சம்பந்தமான கதை. இந்த படத்திற்கு நிதி உதவி செய்து தயாரித்து கொடுத்தவர் அப்போது ஜெமினி அதிபராக இருந்த எஸ். பாலசுப்ரமணியன். படத்தை தயாரித்து எழுதி இயக்கியவர், மல்லியம் ராஜகோபால். சிவாஜியும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருந்தார்கள். படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன். பாடல்கள் எல்லாமே அருமை. படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் சுசீலா பாடிய `சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. ‘சுமதி என் சுந்தரி’, இது சிவாஜி, ஜெயலலிதா ஜோடியாக நடித்த மற்றுமொரு வெற்றிப்படம். இந்த படத்தை சி. வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். படத்தின் கதை, வசனத்தை சித்ராலயா கோபு எழுதியிருந்தார். இதில் சிவாஜிக்கு அமைந்த வித்யாசமான கதை. ஜெயலலிதாவிற்கும் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இது.

இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப காட்சியிலே ஒரு பாடல் வரும்.  அந்தப் பாடலில் ஜெயலலிதாவிற்கு ஜோடியாக யாரோ ஒருவர் நடித்திருப்பார். ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி! பாடலின் முடிவில்தான் கதைப்படி ஜெயலலிதா ஒரு நடிகை. அந்த காட்சிதான் அப்படி படமாக்கப் பட்டிருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான புடவைகளை இயக்குநரிடம் கலந்தாலோசித்து தானே காட்சிக்கு தகுந்த மாதிரி புடவைகளை ஜெயலலிதாவே தேர்ந்தெடுத்தாராம்.

இதை இயக்குனர் சி.வி.ராஜேந்திரனே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். இந்த படத்தில் `பொட்டு வைத்த முகமோ’ பாட்டில் சிவாஜி ஒரு அரைக்கை சட்டை அணிந்து வருவார். அப்போது இருந்த பின்னி நிறுவனம் சிவாஜிக்காக பிரத்யேகமாக தயாரித்த டிசைன் அந்த சட்டை.

சிவாஜி அதை படத்தில் அணிந்த அந்த காலத்தில் அடுத்த வாரமே தெருவில் பல பேர் அதே மாதிரி சட்டையை போட்டுக்கொண்டு போனார்கள். சிவாஜிக்காக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்த முதல் படம் இது!

 சென்னை சித்ரா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய படம் இது.

 ‘தேனும் பாலும்’.  சிவாஜிக்கு இரு மனைவிகள் கொண்ட படம். படம் சுமாராக போனாலும் பாடல்கள் எல்லாமே அருமை. இரு மனைவிகளாக சரோஜாதேவியும், பத்மினியும் நடித்திருந்தார்கள். ‘இரு மலர்’களில் இருவரை சிவாஜி விரும்புவதாக அமைந்த கதையை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், இதில் இரு தாரம் என்பதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை. சிவாஜிக்கு அமைந்த இன்னொரு வித்தியாசமான படம் ‘மூன்று தெய்வங்கள்’.  படத்தை தாதா மிராஸி இயக்கியிருந்தார். இதில் சிவாஜி, முத்துராமன், நாகேஷ் மூவருக்கும் மேக்கப் கிடையாது. ஜெயிலிலிருந்து தப்பி வந்த மூன்று கைதிகள் ஒரு நடுத்தர குடும்பத்தில் வந்து அடைக்கலமாவதுதான் கதை.

அந்தக் கைதிகளே பிறகு அந்த குடும்பத்திற்கு தெய்வங்களானார்கள் என்பதே கதையின் அடிப்படை. பாடல்களும், திரைக்கதையும் அருமையாக அமைந்த ஒரு நல்ல வெற்றிப்படம் இது. ‘தங்கைக்காக’ சுமாராக போன படம்.

‘அருணோதயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். ‘குலமா குணமா’! ‘பணமா பாசமா’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் தலைப்பு வைத்து படம் எடுக்க ஆரம்பித்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். அப்படி அவர் எடுத்த படங்கள் ‘பணமா பாசமா’, ‘குலமா குணமா’, ‘உயிரா மானமா’ போன்ற படங்கள்.

‘குலமா குணமா’ படம் ஒரு படத்தின் திரைக்கதையை அந்தக் கதையின் மையக்கரு கெடாமல் எப்படி கொண்டு போகலாம், கதாபாத்திரத்தின் குணாம்சங்களுக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் வசனங்கள் எழுதலாம், கதாபாத்திரங்களை அந்த பாத்திரத்தில் எப்படியெல்லாம் அப்படியே அந்த பாத்திரமாகவே வாழ வைக்கலாம் என்பவையெல்லாம் திரையுலகத்திற்கே இந்த படம் ஓர் உதாரணம் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு நட்சத்திரமும், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள்.  சிவாஜி, பத்மினி, ஜெய்சங்கர், வாணிஸ்ரீ, நாகேஷ், நம்பியார் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உண்டு. தர்க்கரீதியான வசனங்கள். அதில் ஆழமான வாழ்க்கை கருத்துக்கள் என்று புகுந்து விளையாடியிருப்பார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.  திரையுலகத்தில் பாடப்படாத ஒரு கதாநாயகன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இவரை நன்கு புரிந்து கொண்டவர் கமல்ஹாசன்தான். திரைக்கதையில் இவருக்கு இணை இவர்தான்.

தான் எடுத்துக் கொண்ட கதையை திசை மாறாமல் கொண்டு செல்லுவார். அதில் பெண்களுக்கு பிடித்த விஷயங்கள் பல இருக்கும். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் கே.ஆர். விஜயா. இவரது திரைக்கதைக்கு ஏற்ற நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவரது பெரும்பாலான படங்களில் ரங்காராவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கும். அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்குவார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

(தொடரும்)